தாவீதின் மனது பட்ட பாடு!

Share this page with friends

KING DAVID

உள்ளதை உள்ளதென்று
சொல்லவேண்டும்.
சொல்வதைவிட,
அதையே பாடலாய் பாடுவது
மூன்று மடங்கு வல்லமையுடையது என்று
ஜான் வெஸ்லி கூறியுள்ளார்.

தாவீது பெலிஸ்தனைக் கொன்று
திரும்பி வந்தபின்பு,
ஜனங்கள் திரும்பவரும்போதும்,
ஸ்திரீகள் இஸ்ரவேலின்
சகல பட்டணங்களிலுமிருந்து,
ஆடல் பாடலுடன் புறப்பட்டு,
மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும்
சந்தோஷமாய் ராஜாவாகிய
சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.
அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்:
சவுல் கொன்றது ஆயிரம்,
தாவீது கொன்றது பதினாயிரம் என்று
முறைமுறையாகப் பாடினார்கள்
(1 சாமுவேல் 18:6,7)

அலை அலையாய் வந்தவர்கள்,
முறை முறையாய் பாடினபோது
சவுல் அவர்களை முறை முறையாய்
முறைத்துப் பார்த்தான். 

அன்றிலிருந்து அவன்
தாவீதை காய்மகாரமாய் பார்த்தான் என்றும்,
அவன் உள்ளம் விசனமடைந்தது,
எரிச்சலடைந்தது என்றும்
எழுதப்பட்டுள்ளது.

தன்னையும் முழு இஸ்ரவேலையும்
நாற்பது நாட்கள் பாடாய்ப்படுத்தின
கோலியாத்தை ஒரு சிறு கூழாங்கல்லினால்
கொன்று, வென்று, வெற்றி வாகை சூடின
இளம் வாலிபனுக்கு
வெற்றி விழாக் கூட்டங்களை நடத்தி,
தாவீது வாழ்க என்று எழுதி பேனர்களைக் கட்டி,
குதிரை மேல் ஏற்றி
மொர்தெகாயை வாழ்த்தினது போல,
வாழ்த்த வேண்டியவன்,
இப்போது ஆடுகிற  ஸ்திரீகளைக் கண்டு
ஆதங்கப்படுகிறான்

வாத்தியங்களை வாசிக்கிறவர்களைப் பார்த்து  வாதிக்கப்படுகிறான்.

தாவீதை காய்மகாரமாய்ப் பார்த்தவன்,
பின்னர் மருமகனாய்ப் பார்த்தான்.
இதற்கிடையில் எத்தனையோ முறை
கொல்லவும் பார்த்தான். 

தாவீது தன் செய்கைகளிலெல்லாம்
புத்திமானாய் நடந்தான்;
கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
அவன் மகா புத்திமானாய்
நடக்கிறதைச் சவுல் கண்டு,
அவனுக்குப் பயந்திருந்தான்

(1 சாமுவேல் 18:14, 15).  

பயந்திருந்தது உண்மைதான்.
அதே வேளையில்
புலி பதுங்கியிருந்ததும் உண்மைதான்.
சமயம் பார்த்து, பாய்ந்து சென்று
தீர்த்துவிடவும் காத்திருந்தான். 
எத்தனையோ சூழ்ச்சிகளைக் கையாண்டு,
தந்திரங்களைப்பண்ணி
தாவீதை கொல்ல  துடித்தான்.

சவுலின் நெஞ்சு துடிக்கிறது,
ரத்தம் கொதிக்கிறது,
கண்கள் சிவக்கிறது,
கண்டதும் கொல்ல (ENCOUNTER)
உத்தரவிட்டு ஓடிக்கொண்டிருக்கிறான். 

இன்றைக்கும் சவுலின் ஆவி, 
சனகெரிப்பின் ஆவி
உலகமெங்கிலும் அலைபாய்கிறது, 
தாவீதுக்களைத் துரத்துகிறது. 
சனகெரிப்பின் ஆவி
தேவ ஜனங்களை சங்கரிக்கத் துடிக்கிறது.
இஸ்ரவேலரை வழிமறித்த
அமலேக்கின் ஆவியும்

இதில் அடங்கும் (1 சாமுவேல் 15:2).

1 சாமுவேல் 24 ஆம் அதிகாரத்தில்
சவுலுக்கு ஒரு சேதி வருகிறது.
தாவீது என்கேதியில் இருக்கிறான்
என்பதே அந்த சேதி.

தன் ராஜ்யபாரம், தன்  குடிமக்கள்,
குடும்பம்,  கோத்திரம்,
இருக்கிற தங்கப் பாத்திரம், 
வீட்டுப் பத்திரம்
இவைகளெல்லாவற்றையும்  மறந்துவிட்டு
தாவீதை மாத்திரம் தேடி,
குட்டியைப் பறி கொடுத்த
கரடியைப் போல அலைகிறான்
.

சிங்கார சிம்மாசனத்தில் உட்கார்ந்து,
சிருஷ்டிகரை மகிமைப்படுத்த வேண்டிய சவுல்,
சின்னவனும் சிறியவனும்
எளிமையுமானவனுமாகிய  
தாவீதை சிதைத்துவிட,  
புதைத்துவிட
திட்டங்கள் தீட்டுகிறான்.

ஆனால் தாவீதுக்கோ
சவுலை சங்காரம் பண்ணும் திட்டம் ஏதுமில்லை.
ஆனால் அப்படிச் செய்ய
நல்ல சந்தர்ப்பம் கிட்டியது.

உயரமாய் வளர்ந்தவனின் 
தலையை மட்டும் தனியே வாங்கிப் போட
வாசல் கதவு திறந்திருக்கிறது.

அவனோ சவுலின் சால்வையின்
தொங்கலை மாத்திரம்
மெள்ள கொஞ்சமாய்
அறுத்துக் கொண்டு திரும்பிவிட்டான் .
இதற்கே அவனது மனது அடித்துக்கொண்டது.


தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்தது (1 சாமுவேல் 24:5). 
இவனது மனது அடித்துக்கொள்கிறது .

சவுலுக்கு அலுத்துப்போகிறது.
தாவீதின் உயிரைக் குடிக்க ஆத்திரப்படுகிறது. 

தேவ மனிதனின் உள்ளம்,
உயிரற்ற ஓர் சால்வையின் ஓரத்தை
அறுத்ததற்கே மனசாட்சி வாட்டுகிறது.
 
இது தேவனுடைய இருதயத்திற்கேற்றவனின்
இதயத் துடிப்பு
(அப்போஸ்தலர் 13:22).

இன்றைய காலக்கட்டத்தில்
ஏன் இதுபோல மனது அடித்துக்கொள்ள மறுக்கிறது? 


மனம் என்பது மழுங்கிப் போனது,
சாட்சி என்பது சாரமிழந்து போனது. 
மனசாட்சியை அடவு வைத்து
அதுவும் மூழ்கிப் போனது

என்றுதான் சொல்லவேண்டும்.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள் , மதுரை -14                     


Share this page with friends