மரணம்! தினமும் மரணம்

Share this page with friends

மரணம்! தினமும் மரணம்

இன்று ஒவ்வொரு நாளும் காலையில் எழும்பின உடனே ஏதாவது ஒரு மரண செய்தி கேட்க நேருடுகிறது. அந்த செய்திகள் தவிர்க்க கூட முடியாததாக மாறி விட்டது. துக்கப் படுகிறோம், வேதனைப் படுகிறோம், rip என்று பதிவு இட்டு ஆறுதல் அடைகிறோம், ஆனால் அவற்றை எல்லாம் சில நாட்களில் மறந்தும், எண்ணாமலும் கடந்தும் போகிறோம்.

யாரும் இந்த மரண சம்பவங்களை அத்தனை எளிதில் கடந்து சென்றும் விட முடியாது. அங்கு தானே மரணம், அவர் தானே மரித்தார் என்று விமர்சித்தும் கடந்து செல்ல முடியாது. நாம் இங்கு நெடு நாட்கள் வாழ்வது போல திமிர் கொள்ளவும் முடியாது ஏனெனில் நமது மரணத்தின் நேரம் நமது கரத்தில் இல்லை என்பது தான் சத்தியம். கிறிஸ்தவர்கள் மரித்தாலும், பிற மதத்தினர் மரித்தாலும் மரணம் மரணம் தான். அதனாலே மதத்தின் பெயரால் யாரும் நாங்கள் மரிக்க மாட்டோம் என்று அறுதியிட்டு சொல்லவும் முடியாது. மரணத்தை வைத்து அரசியல் செய்யவும் முடியாது. அதை நியாயத்தீர்ப்பு என்று தப்பவும் முடியாது. ஏனெனில் மரணம் ஒரு மனிதனுக்கு நிச்சயிக்கப் பட்ட ஒன்று. அது குறிக்கப் பட்ட ஒன்றும் கூட, நம்மோடு ஒட்டி கொண்டு இருக்கும் கடந்து போகும், நாம் மரித்தால் முழு உலகமும் மொத்தத்தில் ஸ்தம்பிக்காத ஒரு நிகழ்வும் கூட! நாம் மரித்தால் சிலவேளை மிகவும் வேண்டியவர்கள் ஒரு இரண்டு மூன்று நாட்கள் அவர்கள் வழியில் துக்கம் அனுசரிப்பு செய்வார்கள். அடுத்து என்ன? நாம் இந்த உலகில் என்றாவது ஒருநாள் நினைவில் வருவோம் வாராமலும் போவோம் என்றும் நினைவில் வாழும் இன்னார் என்கிற அடைமொழியில்.

அப்படி என்றால் இந்த மரணத்தின் வேத சத்தியம் தான் என்ன?

A. மரணம் நியமிக்கப் பட்ட ஒன்று அதை விரும்பி எதிர்கொள்ள வேண்டும்

நாம் சாக வேண்டாம் என்று விரும்பினாலும், பிறர் நாம் சாக கூடாது என்று வேண்டினாலும் சாகாமை என்பது இந்த சரீரத்தில் அற்ப காலமே. பெலத்தின் மிகுதியால் ஒரு 80 வருடம். அதுவும் சஞ்சலும்
வருத்தம் நிறைந்தது. நமக்கு என்று ஒரு குறித்த காலம் உண்டு. அதற்கு பின் இந்த உலகிற்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும், நாம் சாக வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கும் bye சொல்லி கடந்து தான் போக வேண்டும் ஏனெனில் இது எல்லாருக்கும் ஏன்? நமக்கும், நாம் நேசிக்கும், நம்மை எதிர்க்கும் எல்லாருக்கும் நியமிக்கப் பட்ட ஒன்று. ஆனால் மனிதன் அதை சிந்திப்பது இல்லை.

இயேசு கிறிஸ்து அதினால் தான் அடிக்கடி சீடர்களை பார்த்து சொன்னார் தான் மரிக்க வேண்டும். நாம் மரிக்க வேண்டும் என்பதை அடிக்கடி நியாபகம் படுத்தி கொண்டே இருக்க வேண்டும். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மரிக்க தாயராகி கொண்டே இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிப்பதற்கே தாம் வந்ததாக அடிக்கடி சீடர்களை நினைவுப் படுத்தி கொண்டே வந்தார். நாம் நமக்கு நியமிக்கப்பட்ட காலத்தில் மரிக்க வேண்டும் என்கிற பக்குவ சிந்தையில் இருந்து தான் தேவசித்தம் அறிய ஆரம்பிகின்றோம்.

காலத்திற்கு முன்பே மரிப்பது அல்ல. நமது மரணத்தை நாமாக தெரிந்து கொள்ள முடியாது. நாம் மரிப்பது போல நடிக்கவும் முடியாது. நாம் ஜீவ சமாதி என்று நம்மை தியாகியாக, மூச்சு முட்டி சாக ஒப்புக் கொடுக்கவும் முடியாது. ஏனெனில் சாவு நியமிக்கப் பட்ட ஒன்று. இயேசு பிறரால் பாடுபடுத்தப் பட்டு மரிக்க விட்டு கொடுத்தார் ஏனெனில் அவர் தனக்கு ஒப்புவிக்கபட்ட பிதாவின் சித்தம் செய்ய மரணத்தை விரும்பி ஏற்றுக் கொண்டார். இயேசு கிறிஸ்து வாழ துடிக்க வில்லை மாறாக பிறர் கையால், பிறருக்கு பரிகாரமாக சாக துடித்தார். நான் போகிறது உங்களுக்கு நல்லது என்று சீடர்களிடம் நேரடியாகவே தான் மரிப்பது நல்லது என்று தனக்கு நியமித்த மரணத்தை தைரியமாக ஏற்றுக் கொண்டார்.

B. மரணத்தில் ஆதாயம் உண்டு

கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் என்று பவுலடியார் சொல்கிறார். நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் மரணம் ஆதாயம் தான். ஏனெனில் கோதுமை மணி நிலத்தில் விழுந்து செத்தால் மிகுந்த லாபம் கொடுக்குமாம். தனித்து இருந்தால் ஒன்றுக்கும் பயன்படாது. கிறிஸ்துவில் மரித்தால் அது பாக்கியம். எனவே நமது மரணம் யாருக்கும் நட்டம் கிடையாது ஏதாவது ஒரு விதத்தில் லாபம் தான். அதுவும் கிறிஸ்துவில் மரித்தால் இங்கும் அங்கும் இன்னும் லாபம். எனவே மரணத்தை குறித்து கவலை சஞ்சலம் வேண்டாம்.

C. மரணத்தில் நம்பிக்கை இருக்கிறது

நம்பிக்கையற்ற மரணம் கிறிஸ்துவில் இல்லை. நம்பிக்கையோடு மரித்த அநேக பரிசுத்த வான்களின் மரணத்தை நேரடியாக பார்த்து இருக்கிறேன். மரண பயம் இல்லாமல், நம்பிக்கையின் பாடல் பாடி, சந்தோசமாக, முகப்பொலிவு கொண்டு, ஏதோ இன்னொரு நாட்டுக்கு பிரயாணம் போவது போன்று, கைகால் அடிக்காமல், கத்தி கூச்சல் இடாமல், பல் கடிக்கமால் மிகவும் நிதானமாக நேர்த்தியாக, மரண வலியில்லாமல் மரணிப்பது எத்தனை ஆனந்தம். அது கிறிஸ்துவின் நேர்மையில் நடக்கிறவர்களுக்கு கர்த்தர் வைத்து இருக்கும் பங்கு. சரியான நேரத்தில் கர்த்தரின் திட்டத்தில் அவர் குறித்த நேரத்தில் அவரது பாதம் சரணடைவது எத்தனை ஆனந்தம். இது தற்கொலை அல்ல, தங்கள் ஜீவனை நேர்த்தியாக ஜீவன் தந்தவரிடம் ஒப்படைப்பது. கர்த்தர் தந்த உயிரை சுயமாக வருத்தி மாய்க்க யாருக்கும் அதிகாரம் இல்லை. மாறாக நமக்கு என்று குறித்த காலத்தில் நேர்த்தியாக ஒப்படைப்பதே சால சிறந்தது.

D. மரணத்தின் பின்னர் ஒரு வாழ்வு உண்டு

இந்த சரீரத்தில் குடி கொண்டு இருக்கும், ஆன்மா இதை விட்டு எங்கு போகிறது? வைகுண்டம் போகிறதா? எமலோகம் போகிறதா? Bible சொல்கிறது, மரணத்திற்கு பின் ஒரு நித்திய ஜீவன் உண்டு, நித்திய ராஜியம் உண்டு. இந்த அழகான மனித சாயல் இன்னும் மருரூபம் ஆகும். *ஒரு விதை மரிக்கும் போது இன்னும் அழகான அதேநேரத்தில் அதே போன்ற மேனி கொண்ட இன்னொரு ஜீவன் உருவாவது போன்று, நாம் இன்னும் அவரை போல தெய்வீக சாயலாக மாறுவோம். கிறிஸ்துவை விசுவாசித்து, கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு, கிறிஸ்துவில் வாழ்ந்தால், கிறிஸ்துவின் சுபாவத்தை கொண்ட வாழ்வை வாழ்ந்தால், மகிமையின் மேனி நமக்கு கொடுக்கப் படுமாம். இந்த சரீரத்தின் DNA க்கு சாவே இல்லையாம் அப்படி என்றால் நமது ஆன்மா சாவேயற்றது. கிறிஸ்துவில் வாழ்வும் வாழ்வு நித்திய ஜீவனையும், எனோ தானோ என்று வாழும் வாழ்வு நித்திய ஆக்கினையும் கொண்டு வரும்.

இதை உணர்த்தவே கிறிஸ்து தேவனுடைய மகிமையின் சாயலாக இருந்தும், மனித சாயலாக வந்து, மரிக்க வேண்டும் என்பதை உணர்த்த சிலுவையில் பாடுபட்டு மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழும்பி, அவரே வழியும் சத்தியமும், ஜுவனுமாக மாறி மீண்டும் வரப் போகிறார். அவரது வருகையின் அடையாளமே இந்த மரணங்கள்.

கிறிஸ்து மரணத்தை முன் வைத்து வாழ்ந்தது போல நாம் மரித்தால் என்ன நடக்கும் என்கிற அனுதின சிந்தையை முன் வைத்து கிறிஸ்துவில் வாழ்வோம் ஏனெனில் வாழ விரும்புகிறவன் ஜீவனை இழப்பான். கிறிஸ்துவின் நிமித்தம் மரணத்தை விரும்புகிறவன் ஜீவனை பெற்றுக் கொள்வார்கள் ஏனெனில் கிறிஸ்து மரணமே உன் கூறு எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே மரணத்தை வெற்றி கொண்டார். அவரே நம் நம்பிக்கை. அவரே நம் வாழ்வு.

மரண பயம் மாறட்டும், தற்கொலை எண்ணம் அழியட்டும், நமக்கு என்று குறித்த நாளில் நேர்த்தியாக நம்பிக்கையோடு, பிறருக்கு லாபத்தோடு, மறுமையின் வாழ்வின் மகிமையான எண்ணத்தோடு வாழ்வோம். நித்தியத்தை சுதந்தரிப்போம்.

செலின்


Share this page with friends