நீங்கள் படும் வேதனையை வீணாக்காதீர்கள்

Share this page with friends

இந்த உலகத்தில் உருவாக்கப்படாத எந்த பொருளையும் பயன்படுத்த முடியாது. நீங்கள் இப்போது கையில் வைத்திருக்கும் செல் போனில் இருந்து எல்லா பொருளுமே ஒரு உருவாக்கப்படும் பிராசஸ் வழியாக கடந்து வந்து தான் இன்று பயன்பட்டுக்கொண்டு இருக்கின்றது. விலையேறப்பெற்ற பொருள் தங்கம். அது எடுக்கப்படும் போது, மண்ணோடு மண்ணாக எடுக்கப்பட்டு, பின்னர் எண்ணற்ற முறையில் மண்ணை நீக்கி சுத்தம் செய்து, பின்னர் நெருப்பிலிட்டு புடமிட்டு சுத்த தங்கத்தை உருக்கி எடுத்து ஆபரணங்களாய் செய்கிறார்கள்.

ஒரு வேதனை நிறைந்த பாதை வழியாக கடந்து சென்றால் தான் அதனால் பயன்பாட்டிற்கு வரமுடியும். யோசேப்பை குறித்து வசனம் சொல்கின்றது: கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும், அவருடைய வசனம் அவனை புடமிட்டது (சங் 105:19).

கர்த்தர் யோசேப்பிற்கு ஒரு வெளிப்பாடு கொடுத்திருந்தார். அந்த வெளிப்பாட்டின்படி அவன் பஞ்ச காலத்தில் அவனுடைய முழு குடும்பத்தையும் காக்கும் தேவனுடைய இரட்சண்ய திட்டத்தை செயல்படுத்துகிறவனாயிருந்தான். அந்த வெளிப்பாடு அல்லது தேவனுடைய வார்த்தை நிறைவேறுமளவும், கர்த்தர் அவனை புடமிட்டார் அல்லது உருவாக்கினார். செல்ல பிள்ளையாய் தகப்பனோடிருந்த யோசேப்பு, அப்படியே எகிப்தின் அதிகாரியாகிவிடவில்லை. ஒரு கடினமான உருவாக்கப்படுகின்ற அனுபவத்தின் வாயிலாக கடந்து செல்ல வேண்டியிருந்தது.

நீங்களும் உங்களுக்கான தேவ நோக்கத்தை வெளிப்பாடாக அல்லது வாக்குத்தத்தமாக பெற்றிருக்கலாம். அந்த தேவ நோக்கம் உங்கள் வாழ்வில் நிறைவேற, நீங்கள் உருவாக்கப்பட உங்களை ஒப்புக் கொடுங்கள். உருவாக்கப்படுகின்ற அனுபவம் வேதனையான அனுபவம் தான். ஆனால் அந்த வேதனையின் முடிவு மகிமையான அனுபவம்.

இந்த இரகசியத்தை நன்றாய் புரிந்து கொண்டீர்களென்றால் உங்களை சுற்றி நடக்கும் காரியங்களும், உங்களுக்கு நடக்கும் காரியங்களும் உங்களுக்கு அதிர்ச்சியாயிருக்காது.. அவை எல்லாம் நமக்கான தேவ திட்டத்தை நிறைவேற்ற தேவனால் பயன்படுத்தப்படுகின்ற கருவிகள் என்று அறிந்து கர்த்தரை துதிக்க ஆரம்பிப்போம்.

தவறு செய்து அதன் விளைவாக துன்பத்தை அனுபவிப்பது என்பது வேறு, அதைப்பற்றி நான் இங்கு பேசவில்லை. சத்தியத்தின் படி நடந்தும் துன்பத்தை அனுபவிப்பதைப் பற்றியே நான் இங்கு பேசிக் கொண்டிருக்கின்றேன்

யோசேப்பு குழியிலே போடப்பட்டான், அடிமையாய் விற்கப்பட்டான், சிறையிலே தள்ளப்பட்டான். பின்னர் எகிப்தின் அதிகாரியாக முடிசூட்டப்பட்டான். அதன்பின் தான் தன்குடும்பத்தை காப்பாற்றும் தன் நோக்கத்தை நிறைவேற்றினான். உங்கள் தரிசனம் நிறைவேறுகின்ற பாதையில் நீங்கள் அடையும் கஷ்டங்கள், நஷ்டங்கள், வேதனைகளை வெறுக்காதீர்கள், அதை விட்டு ஓட எண்ணாதீர்கள். அதை நினைத்து புலம்பாதீர்கள். அவைகளே உங்களை பரம தரிசனத்திற்காக உருவாக்குகின்றன.

நீங்கள் உருவாக்கப்பட உங்களை ஒப்புக்கொடுக்காவிட்டால் உங்கள் இலக்கை நீங்கள் அடையமுடியாது. இஸ்ரவேல் புத்திரர் 40 வருடங்கள் தாங்கள் பட்ட அத்தனை வேதனைகளையும் வீணாக்கிப்போட்டார்கள். யோசுவா, காலேப் தவிர அந்த தலைமுறையில் ஒருவரும் தரிசன பூமி கானானை அடையவில்லை. அனைவரும் வனாந்திரத்திலேயே மரித்துப்போனார்கள். காரணம், உருவாக்கப்படும் அனுபவத்தை வெறுத்தார்கள். ஒவ்வொரு குறை, கஷ்டம் வரும் போதும் கர்த்தருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.

நான் கர்த்தருக்கு பிரியமாய் வாழ்கிறேன், அவருடைய வசனத்திற்கு உண்மையாய் கீழ்ப்படிகின்றேன், பின்னே ஏன் என் வாழ்வில் இத்தனை பிரச்சனைகள் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? இவைகள் உங்களை உருக்குலைக்க அல்ல, உங்களை மேலான நோக்கத்திற்காக உருவாக்க தேவனால் அனுமதிக்கப்பட்ட பாதைகள். இந்த அறிவு உங்களுக்கு இருந்தால் எப்பேர்ப்பட்ட உபத்திரவம் வந்தாலும் தைரியமாய் அணுகுவீர்கள். மகிழ்ச்சியாய் முன்னேறுவீர்கள்.

அநேகர் தங்கள் பிரச்சனையை விட்டு தப்பி ஓட முயல்கிறார்கள். பரிட்சை எழுதாமல் தப்பி ஓடுவதால் நாம் புத்திசாலி அல்ல. பரிட்சையை பொறுமையோடு சந்தித்து, வெற்றி கொண்டால் தான் நாம் புத்திசாலி.

தரிசனத்தை அடையும் பாதை வேதனையான பாதைதான். இயேசுவே, பிதாவே இந்த வேதனையான பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும் என்று ஜெபித்தாரே! ஆனாலும் இயேசுவை போல பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, வேதனையை சகித்துக்கொள்ளுங்கள்.

பொறுமையோடு முடிவுபரியந்தமும் இந்த அனுபவத்தை கடந்தீர்களென்றால் உங்கள் தரிசனத்தை அடைவீர்கள். பாதியில் முறுமுறுத்து பின் வாங்குவீர்களென்றால், பாதி கிணற்றை தாண்டினவன் போல, இத்தனை காலமும் நீங்கள் பட்ட வேதனை அத்தனையையும் வீணாக்குகிறவர்களாய் காணப்படுவீர்கள்.

உருவாக்கப்படும் காலத்தில் தேவ பெலனுக்காய் ஜெபியுங்கள். கர்த்தர் தாமே உங்களை பெலப்படுத்தி, வேதனையின் பாதையை கடந்து வெற்றியாய் முன்னேற உங்களுக்கு உதவி செய்வாராக!


Share this page with friends