கிறிஸ்தவர்களின் ஆடையும் அலங்காரமும்

Share this page with friends

ஆதாமும் ஏவாளும் தன் மானத்தை மறைக்க இலைகளினால் உடையை உண்டு பண்ணி அணிந்தனர். ஆனால் தேவனுடைய கண்களுக்கு அது கண்ணியமானதாகவோ பாதுகாப்பானாகவோ தெரியவில்லை. காரணம் இலைகள் உதிர்ந்து போகலாம். அறுந்து போகலாம். ஆகவே தோல் உடையை உண்டு பண்ணி அவர்களுக்கு கொடுத்தார். தோல் உடை உறுதியானது. பாதுகாப்பானது. எளிதில் கிழியாது. எல்லா காலத்திற்கும் பொருத்தமானது.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால் நமது ஆடை உறுதியானதாக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.

ஆடை அலங்காரத்தில் நாம் கவணிக்க வேண்டியவைகள்:

1) நாம் அணியும் ஆடை நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆகவே ஒவ்வொரு முறையும் ஆடை அணியும் போது அது எனக்கு திருப்தியாக இருக்கிறது என்பதை விட தேவனுக்கு திருப்தியாக இருக்குமா என்று சிந்திக்க வேண்டும்.

2) நமது ஆடையின் விலை எவ்வளவு என்பது முக்கியமல்ல, இந்த ஆடை எனது உடலுக்கு பாதுகாப்பானதா என்பதே முக்கியமாகும்.

3) நமது ஆடை பிறருக்கு சங்கடத்தையோ, கவர்ச்சியையோ ஏற்படுத்த கூடாது. இக்காலத்தில் இதனை நவீன முறை என்று கருதுதினாலும் வேதம் என்ன கூறுகிறது என்று கவனிக்க வேண்டும். பிறருக்கு இடையூறு ஏற்படுத்துகிற(வளுக்கு)வனுக்கு ஐயோ என்று வேதம் கூறுகிறது. அழகு என்ற பெயரில் அலங்கோலம் தான் மேலோங்கியுள்ளது.

4) இந்த உலகம் குறைவான ஆடையில் தான் அழகு இருப்பதாக எண்ணுகிறது. இது முற்றிலும் தவறானது. உண்மையான அழகு நம் குணநலன்களில் தான் இருக்கிறது. உண்மையான அலங்காரம் நம் பரிசுத்தத்தில் தான் இருக்கிறது. பரிசுத்த அலங்காரத்தோடு தேவனை தொழுது கொள்ள வேண்டும் என வேதம் கூறுகிறது.

“மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. (1 பேதுரு 3:3,4)

“ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்” (1 தீமோத்தேயு 2:9-10)

5) நான் அழகாக இல்லை. ஆகவே தான் மேக்கப் செய்கிறேன் என கூறி உங்களை நீங்களே தாழ்வாக எண்ணாதிருங்கள். உங்களை நீங்களே வெறுத்தால் ஆசையோடு உங்களை படைத்த தேவனை துக்கப்படுத்துகிறீர்கள் என்று பொருள்.. தேவன் அனைவரையும் அழகாய் தான் படைத்திருக்கிறார். நாம் மற்றவர்கள் போல இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களிடம் இல்லாத ஒன்று உங்களிடம் இருக்கிறது என்ற உண்மையை மறந்துவிட வேண்டாம். (குண்டோ, ஒல்லியோ, குட்டையோ நெட்டையோ அது பொருட்டு அல்ல.. உலகம் உங்களை என்ன கூறினாலும் நீங்கள் தேவபார்வையில் விஷேசித்தவர்களே.. உங்களுக்கு நேர்த்தியா அலங்காரம் போதுமானது. மற்றவர்போல மாற ஆசைப்பட வேண்டாம்.

6) உங்கள் சரீரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். இருக்கும் ஆடைகளை துவைத்து அயன் செய்து அணியுங்கள். உங்கள் சரீரத்திற்கு ஒத்துப்போகும் சோப், பவுடர் பயன்படுத்துங்கள். இதைவிட வேறு என்ன அலங்காரம் தேவை. இயற்கையான அழகுக்கு இணை வேறில்லை. (உ.ம் திருமணத்திற்கு முந்தையதினம் ஒரு பெண் முகத்திற்கு மேக்கப் பண்ணி முகம் வெந்து வீங்கிவிட்டது)

7) உங்கள் மனதிற்கு பிடித்த நகை/வாட்ச் அணிவதில் தவறில்லை. ஆனால் உங்கள் சொத்து மதிப்பை காட்டும் வண்ணம் அணியாமல், பிறர் கண்களை கவர்ந்திழுக்கும் வண்ணம் இல்லாமல் சிறியதாக, பொருத்தமாக இருப்பது நல்லது. (அதிக விலை கொடுத்து வாங்கும் ஒரு வாட்ச் காட்டும் மணி நேரத்தை தான் குறைந்த விலை கடிகாரமும் காட்டப்போகிறது)

8) தலை முடியை சீராக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தலை முடியை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை ஒருவர் உங்களை கணித்துவிட முடியும். வெள்ளை முடி வருவதை அவமானமாக எண்ணாதிருங்கள். ஆலயத்தில் முக்காடிட்டுக்கொள்ளுங்கள். ஏன் முக்காடிட வேண்டும் என்று மற்றொரு பதிவில் கூறுகிறேன். (ஆண்கள் ஒழுங்கா சேவ் பண்ணுங்க, தலை சீவுங்க, கரைக்டா முடி வெட்டுங்க, ஆட்டு தாடி மாதிரி வைக்காதிருங்கள்.. அது போலவே பெண்களும்…)

9) உங்களது ஆடை அதிக இறுக்கமாயிராமல் பொறுத்தமாக இருக்க வேண்டும். பயணம் செய்யும் போதும், தரையில் அமரும் போதும், வேகமாக நடக்கும் போதும், குனிந்து எழும்பும் போதும் உங்களுக்கு வசதியானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அவ்வப்போது உங்கள் உடை மறைக்க வேண்டியவைகளை மறைத்திருக்கிறதா என்பதை சரிசெய்து கொள்ளுங்கள்.
(உபாகமம் 22:5) புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

10) எந்த இடத்தில் எந்த ஆடை அணிவது என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்க வேண்டும். கலியாண வஸ்திரத்தை துக்க வீட்டிற்கு அணிய முடியாது. கருப்பு கலந்த ஒரு ஆடையை சந்தோஷமான ஒரு வீட்டிற்கு செல்லும் போது அணிவதை தவிர்க வேண்டும். ஒவ்வொரு கலரும் ஒவ்வொரு செய்தியை கூறுகிறது.

11) உங்கள் உடை சரியாக இருக்கிறதா? நேர்த்தியாக இருக்கின்றதா என்பதை உங்கள் பெற்றோரிடம் கேள்ளுஙகள். திருமணமானவர்கள் உங்கள் கணவரிடம்/மனைவியிடம் கேளுங்கள். வேறு யாரிடமும் 100% உண்மையை எதிர்பார்க்க முடியாது.

பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரிகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். (1 பேதுரு 3:5)

இறுதியாக..

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். (மத்தேயு 23:27)

திருமதி பிளசி பெவிஸ்டன்


Share this page with friends