சாம்பல் புதன் மற்றும் லெந்து நாட்கள் பற்றிய உண்மைகள் Ash Wednesday

Share this page with friends

கிறிஸ்தவ பண்டிகைகளில் ஒன்று சாம்பல் புதன் (Ash Wednesday). கி.பி 900 வது ஆண்டுகளிலிருந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இதனை அனுசரித்து வருகின்றனர்.

சாம்பல் புதனை (Ash Wednesday) திருநீற்றுபுதன், விபூதி புதன் என்றும் சிலர் அழைக்கின்றனர். இந்த சாம்பல் புதனானது லெந்து காலத்தின் துவக்க நாளாகும். இந்த லெந்து நாட்கள் இயசு கிறிஸ்துவின் உயிர்ப்பு வரை தொடருகிறது. கணக்கின்படி இடையில் 46 நாட்கள் வரும். ஆனால் ஞாயிற்று கிழமைகளை லெந்து கால அட்டவணையில் சேர்ப்பதில்லை. ஆகவே தான் 40 நாட்கள் மட்டும் லெந்து நாட்களாக அனுசரிக்கப்படுகிறது. ‘

‘தவக்காலம்’ என்பது மனமாற்றத்துக்கான ஒரு காலமாகக் கருதப்படுகிறது. மனதுக்கு ஏற்ப பாவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மனம் திரும்ப வேண்டிய காலம். மனிதனின் சுய ஆய்வுப் பயணத்தின் காலம். இதற்கு அடையாளம் நெற்றியில் பூசப்படும் சாம்பல். “சாம்பல் என்பது தவத்தின் தொடக்கம். தவங்கள் எல்லாம் மீட்பில் அடங்கும்”.

சாம்பல் புதன் அன்று பயன்படுத்தப்படும் சாம்பலானது கடந்த ஆண்டு குருத்தோலை பண்டிகையின் போது பயன்படுத்திய குருத்தோலைகளை சேகரித்து, அதனை எரித்து சாம்பலை தயாரிக்கின்றனர். சாம்பல் புதன் அன்று கத்தோலிக்க சபைகளில் பாதிரியார் மக்களின் நெற்றில் “நீ மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டாய், மண்ணுக்கே திரும்புவாய்” என்னும் வாசகத்தை கூறி பூசுவார். தற்போது சில இடங்களில் இந்த வாசகத்திற்கு பதிலாக “மனந்திரும்பி, நற்செய்தியை அறிவி” என்ற வாசகம் கூறி பூசிவிடுகின்றனர். இவைகள் வெறும் அடையாளங்கள் மட்டுமே. இவைகளினால் நமக்கு எவ்வித மாற்றமும் நிகழப்போவதில்லை.

சில கிறிஸ்தவ பிரிவினர் சாம்பல் புதனை அனுசரிப்பது இல்லை. ஆனால் அதனை தொடர்ந்து வரும் 40 நாட்களை லெந்து நாட்களாக (தவக்காலம், தவசு காலம்) அனுசரித்து வருகின்றனர்.

அன்பிற்குரியவர்களே இந்த சாம்பல் பல்வேறு அடையாளங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. சாம்பல் ஒரு எளிமையின் அடையாளம், சாம்பல் துக்கத்தின் அடையாளம், நோன்பின் அடையாளம், இந்த சாம்பலானது பாவத்திற்காக ஒருவர் மனம் வருந்தி மனம் மாற்றத்திற்காக ஏங்குகின்ற அடையாளம். மேலும் இந்த சாம்பலானது மனித வாழ்வின் நிலையற்ற தன்மையை எடுத்துக் கூறி அவனுடைய வாழ்வினைப் பற்றிய நிதர்சன உண்மையை எடுத்துக் கூறுகின்ற அடையாளமாகவும் இருக்கிறது. இறுதியாக நல்வாழ்விற்கான ஒரு அடையாளமாக இருக்கிறது.

வெளிபடுத்தின விசேஷத்தில் அந்திகிறிஸ்துவின் முத்திரை நெற்றியில் பதிக்கப்படும் என வேதாகமத்தில் வாசிக்கிறோம். அப்படியானால் நெற்றியில் அடையாளம் என்பது முழு மனிதனையும் குறிக்கின்றதாகும்.

தவக்காலம் நமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம். நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம். இந்த காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுத்து அதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழைகளுக்கு வழங்குவதை பலரும் கடைபிடிக்கின்றனர். சிலர் வெள்ளிக்கிழமை தோறும் அன்னதானம் இடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். நோன்பு இருப்பது பிறருக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது என்கிறார் இயேசு. (நோன்பு) உபவாசம் இருப்பதை பெருமைக்காகவும், புகழுக்காகவும், சடங்கிற்காகவும் செய்யாமல் சுய விருப்பத்தோடும் இறைவனில் சரணாகதி அடையும் மனநிலையுடனும் செய்ய வெண்டுமென்பதே தேவனுடைய விருப்பமும் போதனையுமாகும்.

தேவனின் ஆசீர்வாதங்களை பெற விழைபவர்கள் தங்களைத் தாமே முழு இருதயத்தோடு தாழ்மை நிலைக்குத் தள்ளி, முழு மனதுடன் ஏற்றுக் கொள்தல் அவசியம்.

40 நாட்கள் மட்டும் நாம் மது அருந்தாமலும், புகைப்பிடிக்காமலும், மாமிச உணவுகளை உண்ணாமலும், ஆபாச படங்களை பார்க்காமலும், அங்கும் இங்கும் அரட்டை அடிக்காமலும் துக்கம் கொண்டாடினால் தேவனை பிரியப்படுத்தி விடமுடியுமா? முடியாது.

நல்ல நோக்கங்களுக்காக கொண்டுவரப்பட்ட இப்படிப்பட்ட செயல்கள் இன்று பாரம்பரியங்களாக மாறியுள்ளது. சிலுவையை பற்றிய போதனையும் சிந்தனையும் இந்த 40 நாட்கள் மட்டுமல்ல வருடம் முழுவதும் இருக்க வேண்டும். எனினும் இந்த நாட்களை மனுஷர் பார்க்கத்தக்க வீணான கிரிகைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளாமல் அந்தரங்கத்தில் நம்மை நாமே சோதித்து அறிவோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக


Share this page with friends