ஆயத்தப்படு, ஆயத்தமாயிரு!

Share this page with friends

ஆயத்தப்படு, ஆயத்தமாயிரு!

“நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு” (எசேக். 38:7).

ஆயத்தப்பட்டுக் கொண்டிருப்பதற்கும், ஆயத்தமாயிருப்பதற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்! ஆயத்தப்படுவதற்கு ஏற்கெனவே ஆண்டவர் ஏராளமான நேரத்தையும், காலத்தையும் கொடுத்துவிட்டார். நீங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்துவதற்கும் நேரம் கொடுத்தார். தீவட்டி எரிவதற்கு எண்ணெய் ஆயத்தப்படுத்துவதற்கும் நேரம் கொடுத்தார்.

இப்பொழுதோ மணவாளன் வருகிற நேரமாகிவிட்டது. மணவாளன் வந்தபிறகு ஆயத்தப்பட்டு கொண்டிருக்க நேரமில்லை. ஆயத்தமாயிருந்தவர்கள்தான் அவரோடேகூட கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது (மத். 25:10) என்று வேதம் சொல்லுகிறது. தேவ பிள்ளைகளே, உங்கள் எஜமான் இன்ன நாழிகையிலே வருவார் என்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் உடனடியாக ஆயத்தமாகிவிடுங்கள்.

அநேகர் இந்த நாளில், இந்த மாதத்தில், இந்த வருஷத்தில் இயேசு வருவார் என்று குறிப்பிட்டு சொல்லுகிறார்கள். உதாரணமாக 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ம் தேதி இயேசு வருவார் என்று கொரியாவிலுள்ள ஒரு போதகர்கூட உரைத்தார். ஆனால் யார் சொல்லுவதும் நடப்பதில்லை.

இன்று நீங்கள் உலகத்தின் முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. சரித்திரத்தின் எல்லையிலே நின்று கொண்டிருக்கிறீர்கள். எந்த வினாடி நேரத்திலாகிலும் இயேசு கிறிஸ்து வரக்கூடும். இயேசு எப்பொழுது வருவார் என்று காலண்டர்களையோ, நாள்காட்டியையோ, நீங்கள் பார்ப்பதில்லை. நீங்கள் வானத்திற்கு நேராய் கண்களை ஏறெடுத்து, ‘என் நேசரே எப்பொழுது வருவீர்’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நோவாவின் நாட்களில் ஆயத்தமாயிருந்தவர்கள் பேழைக்குள் பிரவேசித்தார்கள். திடீரென்று பேழையின் வாசல்கள் அடைக்கப்பட்டுவிட்டன. கர்த்தரே அதை அடைத்துவிட்டார். ஆயத்தமில்லாதவர்கள் ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்பட வேண்டியதாயிற்று. ஆனால் இப்பொழுதிருக்கிற உலகமும் அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது என்று 2 பேதுரு 3:6,7-ல் வாசிக்கிறோம்.

இன்றைக்கு உங்களுக்கு ஒரு பேழை ஆயத்தமாய் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பேழை இரட்சிப்பின் பேழை. இயேசு கிறிஸ்துவே அந்த பேழை. அக்கினியினால் இந்த உலகம் அழிக்கப்படுவதற்கு முன்பாக கிறிஸ்துவாகிய பேழைக்குள் நுழைந்துவிட வேண்டும். அவர்கள் மட்டுமே நோவாவின் காலத்தின் பேழை எல்லா மலைகளுக்கும் மேலாய் உயர்த்தப்பட்டது போலவே உயர்த்தப்படுவார்கள்.

நீங்களும் அவ்விதமாய் உயர்த்தப்படுவீர்கள். மலைகளுக்கு மேலாக, சூரியனுக்கு மேலாக, நட்சத்திரங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டு மத்திய ஆகாயத்திலே கர்த்தரைச் சந்திப்பீர்கள். தேவபிள்ளைகளே, எப்பொழுதும் கர்த்தருடைய வருகைக்காய் ஆயத்தமாயிருங்கள். வருவேன் என்று வாக்குரைத்தவர் வாக்குமாறாதவர். அவர் நிச்சயமாகவே வருவார். தேவனுடைய நாள் சமீபமாய் வரும்படி மிகுந்த ஆவலோடிருங்கள் (2 பேதுரு 3:12).

நினைவிற்கு:- “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்” (2 பேதுரு 3:13).


Share this page with friends