கோமகன் கோமாளியான கதை

Share this page with friends

பெரிய பலசாலியும் தேசத்தின் அதிபதியுமாய் இருந்தான் சிம்சோன். வெறும் கையால் சிங்கத்தின் வாயை கிழித்துபோட்டவன். ஆயிரம் பேரை ஒரு காய்ந்து போன கழுதை தாடை எழும்பினால் முறியடித்தவன். சில டன் எடையுள்ள காசா பட்டணத்து இரும்புக் கதவை வெறும் கையால் பெயர்த்து தூக்கிக் கொண்டு மலையின் மீது ஏறிச் சென்றவன். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவன். தன் ஜனத்தின் மத்தியில் ஒரு உண்மையான சூப்பர் ஹீரோவாக வலம் வந்தான்.

சிம்சோனைப்பார்த்து அவன் வயது வாலிபர்கள் பொறாமை பட்டிருப்பார்கள். நல்ல பலசாலியான உடல், ஜனத்தின் மத்தியில் பெரிய பெயர், தேசத்திற்கே அதிபதி. வாழ்ந்தால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணியிருப்பார்கள்.

ஆனால் நடந்தது என்ன? சிறிது காலத்தில் அந்த சூப்பர் ஹீரோ சிம்சோன், கண்கள் பிடுங்கப்பட்டு, கை கால்களில் சங்கிலிகளால் கட்டப்பட்டு மாவரைத்துக் கொண்டிருந்தான். அது மட்டுமல்ல. எதிரிகளின் தங்கள் கூட்டத்தில் இவனை ஒரு கேலிப்பொருளாய் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார்கள். கோமகனாய் கர்ஜித்துக் கொண்டிருந்த சிம்சோன் ஒரு கோமாளியாய் மாறிப் போனது எதனால்?

சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,… தன் தகப்பனை நோக்கி: அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான் (நியாயா. 14:1-3). பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான் (நியாயா 16:1). அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான் (நியாயா 16:4).

அடுத்தடுத்து தன் இச்சையினால் பல பெண்களிடம் விழுந்து போகிறதைப் பார்க்கின்றோம். தன் உணர்ச்சிகளை அடக்கத்தவறிய ஒரே காரணத்தால் சிம்சோன் தான் வீரனாய் வலம் வந்த அதே இடத்தில் கோமாளியாய் மாறிப் போனான். நம் சரீரம் விரும்புகின்ற அத்தனையையும் கொடுத்துக் கொண்டே இருந்தீர்களென்றால் அது நம் வாழ்வையே கேள்விக் குறியாக்கிவிடும்.

சிம்சோனுக்கு ஒரு உயர்ந்த நோக்கமிருந்தது. அவன் சுமார் ஒரு கோடி பேருக்கு நியாயம் சொல்லுகின்ற நியாயாதிபதி. கர்த்தர் அவன் மூலமாக எதிரிகளிடமிருந்து இஸ்ரவேலருக்கு இரட்சிப்பை அருளினார். அவனுக்கு திருமணத்திற்கு ஒரு பெண் கிடைக்க மாட்டார்களா? லட்சம் பெண்கள் அவனுக்கு இஸ்ரவேலில் இருக்கிறார்கள். ஆனால் இவனோ தன் கண்ணுக்கு பிரிமானவள் என்று ஒரு பெலிஸ்திய பெண்ணை நோக்கிச் சென்றான். அவள் அவனுடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிட்டாள். ஒரு உயரிய குறிக்கோளோடு வாழ்ந்து வந்த சிம்சோனை அவன் உணர்ச்சிகளே வீழ்த்தினது.

இன்று உங்கள் வாழ்க்கையிலும் கர்த்தர் பெரிய நோக்கம் வைத்துள்ளார். அந்த நோக்கத்தை நோக்கி துரிதமாய் பயணியுங்கள். அதை விட்டு விட்டு உங்கள் கண்ணுக்கு பிரியமானவளை/பிரியமானவனை நோக்கி பயணித்தீர்களென்றால், உங்கள் நோக்கத்தை விட்டு தவற நேரிடும். தன் கண்ணுக்கு பிரியமானவளை/பிரியமானவனை அடைவதற்காக பல இளைஞர்கள் தாங்கள் அடைய விரும்பும் இலக்கையே மறந்துவிடுகிறார்கள்.

கர்த்தருக்காய் மிஷனரியாய் சென்று ஊழியம் செய்ய வேண்டும் என்று வாஞ்சையும் நோக்கமும் உள்ள ஒரு வாலிபன், திடீரென்று தன் நோக்கத்தை மாற்றிக் கொண்டான். நான் பிஸ்னஸ் செய்யப் போகிறேன் என்றான். காரணம் என்னவென்று பார்த்தால் இது தான். தன் கண்ணுக்கு பிரியமானவளை அடைவதற்காக தன் வாழ்வின் குறிக்கோளையே மாற்றி விட்டான்.

உங்கள் மனதின் விருப்பங்களை நிறைவேற்ற உங்கள் மேல் தேவன் வைத்துள்ள உன்னத நோக்கத்தை விட்டுவிடாதீர்கள். காத்திருங்கள். கர்த்தர் உங்களோடு சரியான நபரை, சரியான காலத்தில் திருமணத்தில் கொண்டு வந்து இணைப்பார். அந்த நபர் உங்களை வழிதவறச் செய்கிறவராய் அல்ல, உங்கள் மேல் தேவன் வைத்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற உதவுகின்ற நபராயிருப்பார்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்


Share this page with friends