பரமன்குறிச்சியில் மாபெரும் இலக்கிய விழா மற்றும் இலக்கிய போட்டிகள்

உடன்குடி, டிச. 26: பரமன்குறிச்சி அருகேயுள்ள சீயோன்நகரில் பூரண கிருபை ஏஜி சபையில் தமிழ் கிறிஸ்தவ நெட்வொர்க் மற்றும் ஆறுதல் எஃபம் குழுமம் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு இலக்கிய விழா மற்றும் இலக்கிய போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சபையின் தலைமை போதகர் பெமிலிட்டன் தலைமை வகித்து ஜெபித்து விழாவைத் துவக்கிவைத்தார். தமிழ் இலக்கியத்தின் சிறப்புகள், தமிழ் இலக்கியத்திற்கு கிறிஸ்தவர்கள் ஆற்றிய தொண்டுகள் குறித்தும் ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர், வேதநாயகம் சாஸ்திரி, சீகன் பால்கு போன்றவர்கள் தமிழ் இலக்கியத்தில் செய்த தாக்கம் குறித்து ஒளிப்படம் மூலம் கோயமுத்தூரை சேர்ந்த ஆய்வாளர் வெங்கடேசன் விளக்கம் அளித்தார்.
அதனை தொடர்ந்து நவீனமயமாக்கப்படும் இக்காலத்தில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவதை சுட்டிக்காட்டி இலக்கிய படைப்புக்களின் அவசியம் மற்றும் மேன்மை குறித்து ஆன்மீக எழுத்தாளர் பெவிஸ்டன் எடுத்துரைத்தார்.
பின்னர் தமிழ் மொழியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு கிறிஸ்தவர்களின் பங்கு மற்றும் புத்தாண்டு தீர்மானம் போன்ற பல தலைப்புகளில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி, வினாடி- வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பல்வேறு குழுக்களாக பிரித்து நடத்தப்பட்டது.

விழாவில் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் நடுநிலையோடு செயல்படவும், அவர்களுக்குரிய உரிமைகளும் அங்கிகாரமும் முழுமையாக கிடைக்கவும், அவர்களது வாழ்வாதார நலனுக்காகவும் சிறப்பு பிராத்தனைகள் ஏறெடுக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் நிர்வாகிகள் மற்றும் ஆறுதல் எஃபம் ஒருங்கிணைப்பாளர் கிருபன் யோசுவா மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
