கிருபைக்குக் கிடைத்த கிருபை!

Share this page with friends

அன்னாள் என்றால் எபிரெய மொழியில்
கிருபை என்று அர்த்தம்
Hannah means Favour or grace

அந்நாள் முதல் இந்நாள் வரை
உலகமெங்கிலும்
உயர்வாகப் பேசப்படுகிற
அமைதியின் பாத்திரம்
அன்னாள் என்று சொன்னால்
அது மிகையாகாது

கிருபை அல்லது Grace என்று
அழைக்கப்பட்டாலும்
அந்தக் கிருபைக்கு,
தேவ கிருபை தேவைப்பட்டது!

ஏனோ, அன்னாளின் குடும்பம்
இரண்டாகிப் போனது
பெனின்னாளின் பிரவேசத்தால்
பெரிய புயல் வீசியது

ஆகாரை, சாராள் என்பவள்
சாராய் பிழிந்தாள்
அன்னாளை
பெனின்னாள் என்பவள்
வார்த்தைகளால் வாதித்தாள்

ஆகார், விட்டுவந்த தேசத்திற்கு ஓடினாள்
அன்னாள், ஆசாரிப்புக் கூடாரத்திற்கு ஓடினாள்

முன்னவள் பெற்றது
மாம்சத்திற்குரியவன்
பின்னவள் பெற்றது
கர்த்தருக்குரியவன்

பெனின்னாள்
பிள்ளைகளால் மின்னினாள்
அன்னாளோ
பிள்ளையில்லாமல் தவித்தாள்

மின் வெட்டு ஏற்பட்டால்
இருண்டு போவது போல
அன்னாளின் வீடு அடிக்கடி
இருண்டு போவதுண்டு
பெனின்னாள் அவளை
மனமடிவாக்கும் போதெல்லாம்
அன்னாளின் இருதயம்
அமாவாசையாகிவிடுவதுண்டு

துயரத்தின் உயரத்தில்
இருந்தாலும்
கண்ணீர் ஆற்றுத்
தண்ணீரைப் போல
பெருக்கெடுத்து ஓடினாலும்,
உணவை வெறுத்து
உபவாசித்து
அழுதுகொண்டிருந்தாளேயன்றி
புத்தியில்லாத
ஸ்திரீயைப் போல
தன் கைகளால்,
தன் வீட்டைத் தானே
இடித்துப் போட்டுவிடவில்லை!

இப்படியாக உடைக்கப்பட்ட
பாத்திரங்களைக்
கண்டுபிடித்து, விசுவாசத்தைக்
கட்டியெழுப்பி
அதிலே ஆசீர்வாதத்தை
அளவில்லாமல் ஊற்றி
உலகையே திரும்பிப்
பார்க்க வைப்பதில்
கர்த்தருக்குப் பெரிய பங்குண்டு!

தேராகு (Terah) மரித்தபோது,
அப்படித்தானே
ஆபிரகாமைக் கண்டுபிடித்தார்

கணவனை இழந்த ரூத் என்ற
மோவாபிய பெண்ணைக் கூட
அப்படித்தானே அப்பத்தின் வீட்டில்
கண்டுபிடித்தார்

ஆபிரகாம் விசுவாசிகளின்
தகப்பனாகிவிட்டார்
ரூத் தாவீதின் முற்பிதாவாகிவிட்டார்

தாவீதின் வம்சத்தில்
விசுவாசத்தைத் துவக்கிய
இயேசு வந்து பிறந்துவிட்டார்

கர்ப்பத்தை அடைத்துவைத்த
கர்த்தர் மேலேயே
அன்னாள் சளைக்காமல்
விசுவாசம் வைத்தாள்

சக்களத்தியின் உபத்திரவங்களை
அன்னாள் சகித்துக்கொண்டாள்

சர்வ வல்லவர் எனக்கு
கசப்பைக் கட்டளையிட்டார்
என்று நகோமி போல
கர்த்தரை கசந்துகொள்ளவில்லை

நமது முற்பிதாவின் மனைவி
ராகேலைப் போல,
எனக்குப் பிள்ளை கொடும்
இல்லாவிட்டால் சாகிறேன்
என்று கணவனோடு
வழக்குத் தொடுக்கவில்லை

இனி இந்த வீட்டில் என்னால்
இருக்க முடியாது
எல்க்கானா அவர்களே,
நான் இப்போதே
கண்காணா
இடத்திற்குப் போகிறேன்
எனக்கென்று எதுவும் இல்ல
இப்பூமி சொந்தமில்ல
என்று பாடவில்லை!

சண்டைக்காரியுடன்
குடியிருப்பதைவிட
வீட்டின் மேல், ஓர்
மூலையில் …இல்லை இல்லை
மேலோகமே
போய்விடுவது மேல்
என்றெல்லாம்
கதை வசனம் பேசவில்லை

சூனேமியாளைப் போல
தனது தேவையை
மனிதனிடமோ
தீர்க்கதரிசியிடமோ
சொல்லாமல் மலடியைப்
பிள்ளைத்தாய்ச்சியாக்க
வல்லமையுள்ள மன்னவனிடம்
சீலோவுக்கு ஓடினாள்

சிறப்பான இந்தக் குணாதிசயத்தை
சம்பந்தப்பட்ட சகோதரிகள்
டவுன்லோடு செய்துகொள்வது நல்லது

அன்னாளிடம் வெளிப்பட்ட
ஆவியின் கனியை
இந்நாளில் இருக்கும்
விசுவாசியிடம் மட்டுமல்ல,
ஐந்து வகை ஊழியர்களிடமும்கூட
காண்பதரிது

சீலோவிலே அன்னாள் மனங்கசந்து
மிகவும் அழுது விண்ணப்பம்பண்ணினாள்

புதிய ஏற்பாட்டில் ஒரு ஸ்திரீ நளதம் என்னும்
தைலத்தை உடைத்து ஊற்றினாள்
இவளுக்கெல்லாம்
முன்னோடியாய் இருதயத்தையே
உடைத்து ஊற்றியவள்தான் அன்னாள்!

உள்ளதை உடைத்து
ஊற்றுகிறவர்களுக்கும்
உள்ளத்தையே
உடைத்து ஊற்றுகிறவர்களுக்கும்
வித்தியாசம் உண்டு

அன்னாளும் அந்த ஸ்திரீயும்
மறக்கமுடியாத பெண்மணிகள்
இவர்களிடமிருந்து உலகம் இன்னமும்
பாடம் படித்துக்கொண்டிருக்கிறது

ஏலி என்னும் ஆசாரியனுக்கோ இருதயத்தை
உடைத்து ஊற்றுகிறவர்களுக்கும் பாட்டிலை
உடைத்து ஊற்றுகிறவர்களுக்கும்
வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது

இது பார்வைக் கோளாறு அல்ல
பரிசுத்தக் கோளாறு

அதனால்தான் என்னவோ
அன்னாளைப் பார்த்து, நீ எதுவரைக்கும்
குடித்து வெறித்திருப்பாய்?
உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்று
பிரசங்கம் செய்தார்

தன் வீட்டில் குடியிருக்கும்
ஓப்னி பினெகாஸ் ஆகிய இரண்டு
குடி’மகன்களை பார்த்து
இப்படி பிரசங்கிக்கவில்லை

கர்த்தரோ, அன்னாளின்
ஜெபத்தைக் கேட்டு
கடைசி நியாதிபதியை
உருவாக்க திட்டமிட்டுவிட்டார்

இக்கால அன்னாளிடம்
அக்கால ஏலி சிக்கியிருந்தால்
ஏலியின் பாடு பெரும்பாடுதான்

அன்னாள் ஓர் கிருபையின் பாத்திரம்
கேட்டதை பெற்றுக்கொண்டதோடு
பெற்றுக்கொண்டதை கொடுத்தவரிடமே
அர்ப்பணிக்கும் ஓர் அழகிய பாத்திரம்

கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும்
உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின்
தலையீற்றனைத்தையும் கர்த்தருக்கு
ஒப்புக்கொடுப்பாயாக, அவைகளிலுள்ள
ஆண்கள் கர்த்தருடையவைகள்
(யாத்திராகமம் 13:12)
என்று அன்னாளுக்கு
பிரசங்கித்தது யாரோ?

வருஷத்திற்கு ஒருமுறை ஆலயம் சென்றவளுக்கு
இருந்த அர்ப்பணிப்பும் ஆர்வமும்
வாரந்தோறும் சபைக்குச் செல்லும் சகோதரிகளுக்கு
இருக்குமானால் சாமுவேல்களுக்குப் பஞ்சமிருக்காது

அன்னாள் என்ற அம்மாவின் ஜெபமும்
எல்க்கானா என்ற அப்பாவின் ஆதரவும் இணைந்து
தேவனுடைய தேசத்தின் தேவையைச் சந்தித்தது!

திசைமாறிச் செல்லும்
“தேசம் என்னும் கப்பலுக்கு’’
கலங்கரை விளக்கமாய்
சின்னஞ்சிறு குடும்பம் ஒளிவீசியது

அழுகையில் ஆரம்பித்த
உபவாச ஜெபம்
ஆர்ப்பரிப்பில் முடிந்தது
ஆர்ப்பரிப்பில் ஆரம்பிக்கும்
உபவாச ஜெபக்கூட்டங்கள்
விழுகையில் முடிகிறது

கர்த்தரிடத்தில் கேட்டுப்
பெற்றுக்கொள்ளும் எதுவுமே
சாம் என்றிருந்தாலும்
சாமுவேல் என்றிருந்தாலும்
அது தேவனுக்குரியதுதான்

முதலாம் அதிகாரத்தில் அழுதவள்
இரண்டாம் அதிகாரத்தில்
ஆவியில் நிறைந்து துதித்தாள்

ஆம். அன்னாள் ஓர் தீர்க்கதரிசனப் பாடகி
ஆக மொத்தம் ஆறு பிள்ளைகளுக்குத் தாய்

அன்னாளே, நீ அன்று ஜெபித்தாய்
அன்னாளே, நீ சரித்திரம் படைத்தாய்
அன்றுமுதல் உலகையே
ஜெபிக்க வைத்தாய்
அன்னாளே, நீ மரித்தாய்
ஜெபத்தாயே
ஜெபத்திற்கு ஏது மரணம்?

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்,
மதுரை -14

என்னை எழுத வைத்த வசனங்கள்
1 சாமுவேல் முதலாம் அதிகாரம் முழுவதும்
ஆதி. 16:6 / நீதி. 14:1 / ஆதி.11:32 , 12:1 /
ரூத் 1:20 / ஆதிக்க, 30ல் / நீதி. 21:9 /
2 இரா. 4:13 / கலாத்தியர் 5:22,23 /
மாற்கு 14:3 / 1 சாமுவேல் 2 ம் அதிகாரம்

English Version:


Share this page with friends