நோயில் விழுந்து பாயில் படுத்தவன்

Share this page with friends

யூதர்களுக்கு அது ஓர்
பண்டிகையின் நாள்  
நோயில் விழுந்து பாயில்
படுத்தவனுக்கோ அது ஓர்
விடுதலையின் நாள்

பண்டிகைகள் பல
வந்து போகலாம்  
விடுவிக்கிறவர் வந்தாரா?
விடுதலை தந்தாரா?
சிந்திக்கவேண்டிய விஷயம்!

பெதஸ்தா என்னப்பட்ட
குளத்தில், அன்றையதினம்
நடைபெற்ற விடுதலைப் பெருவிழாவின்
இறுதியில் அனைவரின்
கண்களும் குளமானது!

ஆனந்த கண்ணீர்
அந்த ஆட்டுவாசலருகே
பெருக்கெடுத்து ஓடியது  

இயேசு செய்த
மூன்றாம் அற்புதம் இது என்று
முழு உலகத்திலும்
பேசப்படுகிறது

மாயைக்கு ஒப்பான
இந்த மனுஷன்
இயேசு பிறப்பதற்கு முன்பே
பிறந்துவிட்டான்

இருண்ட காலத்தில்,
வாழத்தெரியாமல் வாழ்ந்து
வாதம் பண்ணிக்கொண்டிருந்த போது
பக்கவாதம் இவனைச் சந்தித்தது

இதனால் நோயில் விழுந்து
பாயில் படுத்துவிட்டான்

அவனது  நாட்கள் சாய்ந்துபோகும்
நிழலுக்குச் சமானமாய் இருந்தன
 
அன்றைய தினம்
சர்வவல்லவரின் நிழல்
அவன்மீது பட்டது 
 
தேவ தூதன் வந்து இறங்கி
குளத்தைக் கலக்குவது வழக்கம்
 
தூதனின் வருகை எப்போது என்று
அறியாத நோயாளிகள்
அடிக்கடி கலங்கித் தவிப்பதும் வழக்கம்

குருடர், சப்பாணிகள்  
சூம்பின உறுப்புடையவர்கள்
முதலான வியாதிக்காரர்
அநேகர் படுத்திருந்து
தண்ணீர் எப்பொழுது கலங்கும்
என்று காத்துக்கொண்டிருப்பார்கள்  

ஒட்டுமொத்தத்தில், ஓட்டுரிமை
உட்பட அனைத்து உரிமைகளையும்
இழந்து தவிக்கும் நோய்க் குலம்,
குளம் கலக்கப்படும் முன்னும் பின்னும்
கலங்கித் தவிக்கும்

முப்பத்தெட்டு வருஷம்
வியாதிக்கொண்டிருந்த ஒரு மனுஷன்
முடவனைப் போல படுத்திருந்தான்  

நோயில் விழுந்து
பக்கவாதத்துடன் பழகி
குளத்தோடு கோபித்துக்கொண்டு
மண்டபத்தோடு நீண்ட கால
ஒப்பந்தம் செய்து படுத்திருந்தான்

முப்பத்தெட்டு ஆண்டுகளாக
படுத்தே கிடந்தாலும்
அந்த மண்டபத்தில்
மரணப் போராட்டம் ஏதுமில்லை
மனிதர்களோடுதான் போராட்டம்!  

உயிர்காக்கும் மருந்துகள் ஏராளம்
தள்ளுபடியிலும் தாராளம்
உயிரைத் தக்கவைத்து
மீண்டும் ஓடவைக்கும்
மருத்துவர்களும் ஏராளம்

பயிர் அறுவடையைவிட
உயிர் அறுவடை பெருகிவிட்டது

இந்தப் பரம  ஏழையின்
சுவாசத்தைக் கர்த்தர்
தமது கையில் வைத்திருந்தார்
பக்கவாதத்தால்
பாதிக்கப்பட்டிருந்த இவனது
வழிகளுக்கும்  அவரே
அதிகாரியாய் இருந்தார்.

பெதஸ்தா  மண்டபத்தில்
மணி அடித்தால் சாப்பாடு
அப்பங்களுக்கும் ஆடைகளுக்கும்
இல்லை கூப்பாடு
 
மண்டபத்தைவிட்டுத்
தப்பிவிடாதபடி தேவையான
அனைத்தையும் கொடுத்து
முப்பத்தெட்டு ஆண்டுகளாக
மு(ம)டக்கியே வைத்துவிட்டார்கள்

உணவும் உடையும் கொடுத்தவர்கள்
கொஞ்சம் முயற்சி செய்திருந்தால்
குளம் கலக்கப்படும் வரை காத்திருந்து
இந்த மனிதனை முதலாவது நபராக
குளத்தில் இறக்கி அற்புத சுகத்தைப்
பெற்றுக்கொடுத்திருக்கலாம்

ஏனோ அதைத் தவிர, மற்ற எல்லா
உதவிகளையும் செய்தார்கள்
 
இரட்சிப்பு கர்த்தருடையது
அதை வேறு யாரும் தரமுடியாது

இரக்கத்தின் வீட்டில்  அதாவது
அந்த பெதஸ்தாவில்  
தேவ இரக்கம் தவிர
தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட்டது

வியாதியின் அகோரத்தைப் பற்றியும்
பக்கவாதப் பாதிப்புகளை பற்றியும்
விடிய விடிய பேசி விசாரித்தவர்கள்
உன் விருப்பம் என்ன என்று
விசாரிக்க மறந்துபோனார்கள்

நோயைப் பற்றியும், பேயைப் பற்றியும்
பாயைப் பற்றியும் விசாரிப்பவர்களை
நோக்கிப் பாராதே

பாயை எடுத்துக்கொண்டு நட
என்று சொன்னவரை நோக்கிப்பார்

பர்வதங்கள் பல இருக்கலாம்
ஆனால் ஒத்தாசை வரும் பர்வதத்தை
நோக்கிப் பார்க்கப் பழகிக்கொண்டால்
எதுவும் நம்மை முடக்கி
வைக்க முடியாது.  

படுத்திருந்த அவனை இயேசு கண்டு
அவன் வெகுகாலமாய்
வியாதியஸ்தனென்று அறிந்து,
அவனை நோக்கி
சொஸ்தமாகவேண்டுமென்று
விரும்புகிறாயா?

அல்லது மரிக்கும்வரை
மண்டபத்திலேயே படுத்திருக்க
விரும்புகிறாயா?

கேள்விக்குள் மறைந்திருந்த கேள்வி
 
இந்தக் கேள்வியைக்
காதுக்கொடுத்துக் கேட்க
அவனது செவிகள் முப்பத்தெட்டு
ஆண்டுகளாகக் காத்துக்கிடந்தன

போதகர் இயேசுவை,
சார் என்றழைத்து ஒரு மினி
பிரசங்கம் செய்தான்

அந்தப் பிரசங்கத்திற்கு
இயேசு, நல்லது என்று சொல்லவில்லை

ஜெபத்தில் இயேசுவுக்கே
பிரசங்கம் செய்பவர்களுக்கு
இயேசு பதில் தருவதில்லை

இயேசு அவனை நோக்கி;
எழுந்திரு, உன் படுக்கையை
எடுத்துக்கொண்டு நட என்றார்

உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி,
படுக்கையை எடுத்துக்கொண்டு
நடந்துபோனான்
அந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது.  

அறுவை சிகிச்சை முடிந்து
ஆறு நாட்களுக்கு பின்பும்
தவணை முறையில் நடக்கிறவர்களை
நாம் பார்த்திருக்கிறோம்

பெதஸ்தா பயணம், 
பாதிக்கப்பட்டவர்களைச்
சுற்றிப் பார்க்க அல்ல.

பாவத்திலும் சாபத்திலுமிருந்த
மக்களைச் சுத்திகரிக்க

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனைச்
சுகமாக்கி,
சுற்றுப்புறச் சுவிஷேகனாக்க
என்பதை இந்த இடத்தில பதிவு செய்கிறேன்

உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட
என்று சொல்லி, உலகத்தையே
திரும்பிப்பார்க்க வைத்துவிட்டார் இயேசு!

எழுந்திரு, நட என்று மட்டும்
சொல்லியிருந்தால் பத்தோடு
பதினொன்றாக ஊருக்குள்ளே
ஊடுருவிப் போயிருப்பான்

அதோடு ஒன்பது
குஷ்டரோகிகளைப் போல
மாறிப்போயிருப்பான்.
அவனுக்கு பாய் என்பது
ஓர் அடையாள அட்டை
போலாகிவிட்டது

MAT  was a SMART CARD
FOR THIS SMART MAN

இதற்குள் பண்டிகைக்குச்
சென்ற யூதர்களும்
FATHER-களும் மண்டபத்திற்குத்
திரும்பிவிட்டார்கள்
படுக்கையுடன் சென்ற இவனைப்
பார்த்துவிட்டார்கள்

உடுக்கையுடன் செல்வோரைக் கூட
உற்றுப்பார்க்காதவர்கள்
படுக்கையுடன் சென்ற இவனை
முறைத்துப் பார்த்தார்கள
 
ஓய்வுநாளில் செய்யக்கூடாததை
இவன் செய்துவிட்டதாக
குற்றஞ்சாட்டி பாடாய்படுத்தி
இறுதியில் அவனை உறுதியான
பிரசங்கியாராக  
உருவெடுக்க வைத்துவிட்டார்கள்  

அன்றைக்கு  ஆட்டுவாசலினருகே
அவனுக்கு ஓர் திறந்த வாசலை
இயேசு திறந்து கொடுத்தார்

ஓய்வு நாளை அனுசரிக்க அல்ல  
அதற்கு முடிவு கட்டி,
கட்டப்பட்டவர்கள் வாரத்தின்
எல்லாநாட்களிலும் வந்து
விடுதலையைப் பெற்றுச் செல்ல
வழிசெய்துவிட்டார் இயேசு

இதற்காகவே இயேசு
அபிஷேகம்பண்ணப்பட்டு
இந்த பூமிக்கு அனுப்பப்பட்டார் (அப்.10:38)

இதை இந்தியர்கள் அறிந்த
அளவுக்கு இஸ்ரவேலர் அறியவில்லை

அந்தப் பழைய மண்டபத்தில்
படுத்துக்கொண்டே பிரபலமான
பட்டிமன்றப் பேச்சாளரைப்
போலிருந்தவன்

பாழாய்ப்போன அந்த
பழைய பாயை எடுத்துக்கொண்டு
நடந்துகொண்டே
நற்செய்தி ஊழியனாய்
மாறிவிட்டான்

அன்றியும், அந்த ஆட்டுவாசலுக்குள்
நுழைந்து மண்டபத்திற்குள்ளே
மறைந்து வாழ்ந்த அவனுக்குக்கூட
சகலமும் நன்மைக்கு ஏதுவாய் நடந்துவிட்டது  

மண்டபத்திலிருந்து
தேவாலயத்திற்குச் சென்றான்

யாரும் சொல்லாமலேயே
தேவாலயத்திற்குச் சென்றான்

சபை கூடிவருதலை
விட்டுவிடக்கூடாது என்று
எழுதப்பட்டிருக்கும்போதும்
சபையைப் புறக்கணிக்கிறவர்கள்
இருக்கிறார்களே!

இயேசு ஆலயத்திலே
அவனை சந்தித்தார்

அதிகக்  கேடானதொன்றும்
உனக்கு வராதபடி
இனிப்  பாவஞ்செய்யாதே  
என்ற எச்சரிப்பைத் தந்தார்

அந்த மனுஷன் போய் தன்னை
சொஸ்தமாக்கினவர் இயேசு என்று,
தன்னை அடக்கவும் ஒடுக்கவும் நினைத்த
யூதர்களுக்கே அறிவித்தான்

அத்தனை திரளான யூதர்கள்
நெருஞ்சி முட்களைப்போல  
நெருக்கினாலும்
குறுஞ்சிப் பூவைப் போல
மலர்ந்த முகத்துடன் காணப்பட்டான்

பாரமான பாயையும், பாழாய்ப்போன
பாரம்பரியத்தையும் தள்ளிவிட்டு,
தன்னை சொஸ்தமாக்கி,
விசுவாசத்தைத் துவக்கினவரும்
முடிக்க வல்லவருமாயிருந்த
இயேசுவை நோக்கி
தனக்கு நியமிக்கப்பட்ட
ஓட்டத்தில் பொறுமையோடே
ஓடத் தொடங்கினான்

முடவனாய் முப்பத்தெட்டு வருஷம்
கிணற்றில் போடப்பட்ட
கல்லை போல கிடந்தவன்
மானைப் போல
துள்ளிக் குதித்துச் சென்றான்

மரித்த லாசரு உயிர்த்தபின்
ஊழியம்செய்து வயதானபின்
மரித்தது போல

மண்டபத்து மனிதன்
பின்னொரு நாளில்
மரித்துப்போனாலும்

அவனுக்குச் செய்யப்பட்ட
அற்புதமும் அற்புதரும்
மரித்துபோகவில்லை
 
ஆம், இது முன்னாள் முடவனின்
புரட்(சிகர) புதுப் பயணம்.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்


Share this page with friends