நீங்கள் மிகுந்த விழிப்புடன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய மூன்று காரியங்கள்

Share this page with friends

நான் எப்பொழுதுமே பிரசங்கிமார்களுக்குச் சொல்லக்கூடிய மூன்று காரியங்கள் யாதெனில்,

1) பெருமை
2) பணத்தின் மேல் பற்று
3) பெண்ணாசை

என்ற தீமைகளைக் குறித்து அவர்கள் மிகுந்த விழிப்போடு இருத்தல் வேண்டும்.

1) பெருமை: பெருமையப் போல தேவன் உக்கிரமமாக வெறுக்கும் காரியம் வேறு எதுவுமே இல்லை. பெருமைக்கு அவர் முதல்தரமான எதிரியாவார். நமது தேசத்திலே புகழ்பெற்ற தேவ ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களண்டை நீங்கள் நெருங்கவே முடியாது. அதின் ஒரே எளிய காரணம், அந்த தேவ ஊழியர்கள் தங்களை மற்றவர்களைவிட ஏதோ உயர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பதுதான்.mசுவிசேஷத்தை பிரசங்கிக்கும் ஒரு தேவ ஊழியன், தான் ஒரு மாபெரும் தேவனின் ஊழியக்காரன் என்றும் தேவனுடைய ஜனத்தின் பணிவிடைக்காரன் என்றும் திட்டமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தேவ ஊழியன் பெரியவன் அல்ல, தேவன் ஒருவரே பெரியவர். நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்nm(லூக்கா 17-10) என்று இயேசு சொன்னது எவ்வளவு உண்மை.

2) பண ஆசை: தேவ ஊழியத்திலே கர்த்தரால் நீங்கள் நன்கு பயன்படுத்தப்படும் போது உலகப் பிரகாரமான செல்வம் உங்களண்டை தானாகவே வந்து சேரத் துவங்கும். தேவன் உங்களை அந்த செல்வத்தை வழிந்தோடச் செய்யும் ஒரு வாய்க்காலாக மாத்திரமே நீங்கள் இருக்க விரும்புகின்றார். அதற்கு மாறாக நீங்கள் ஒரு அணையைக்கட்டி உங்களண்டை வருகின்ற செல்வம் அனைத்தையும் ஒரு துளி கூட வெளியேறாதபடி தடுத்து நிறுத்தி ஒரு ஏரியாக அதைக் கட்டுக்குள் வைப்பீர்களானால் அது சவக்கடலாக மாறிவிடும். காரணம், சவக்கடலிலிருந்து எதுவுமே வெளியே செல்லுவதில்லை.

தேவனுடைய ஊழியன் வாங்குகிறவனாக மட்டுமல்ல, அவன் கொடுக்கிறவனாக கட்டாயம் இருக்க வேண்டும். பண ஆசை என்ற பேராசை அல்லது செல்வத்தை குறித்த இச்சை உனக்கு வரும்போது தேவனுடைய பரலோக உறவை நீ முழுமையாக இழந்துபோவாய். தந்திர சாத்தானும் இது விசயத்தில் அந்த மக்களுக்கு உதவிக் கரம் நீட்டி அவர்கள் மூலமாக தேவனுடைய ஊழியனை நித்திய அக்கினிக்கடலில் தள்ள இராப்பகலாக போராடிக் கொண்டிருக்கின்றான்.

3) பெண்ணாசை: விபச்சாரப் பாவத்தில் விழ வேண்டும் என்று தீர்மானித்து அதில் வீழ்ந்த அல்லது அந்தக் கொடிய பாவத்தைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்த எந்த ஒரு தேவ ஊழியனையும் நான் உலகில் கண்டதே இல்லை.ஒரு காலத்தில் விடிவெள்ளி நட்சத்திரங்களாக தேவனுக்கென்று ஜொலித்த பரிசுத்தவான்களை தந்திர சாத்தான் விபச்சார பாவத்தின் மூலமாக மடங்கடித்து அவர்களின் சுவடே இல்லாமல் செய்து விட்டானே! நம் தமிழ் நாட்டிலும் பரிசுத்தமான தேவ ஊழியர்கள் பலர் இந்த கொடிய பாவத்தில் வீழ்ச்சியடைந்தார்கள் என்பது நமக்கு தெரியும். என்று ஒரு தேவ ஊழியன் தேவன் அருவருக்கும் விபச்சார பாவத்தில் வீழ்ந்துவிட்டானோ அன்றே அவனுடைய மாட்சியான கிரீடமும் அவன் தலையிலிருந்து மண்ணில் வீழ்ந்துவிடும். கடந்த நாட்களில் அவன் தேவதூதனைப் போல பிரசிங்கித்த அவனது வல்லமையான பிரசங்கங்கள் எல்லாம் தேவ மக்களின் மனதிலிருந்து பகலவனைக் கண்ட பனி போல அப்படியே மறைந்துவிடும். அவைகளை அவர்கள் திரும்பவும் நினைத்துப் பார்த்து மகிழ விரும்புவதில்லை. அவன் எழுதிய ஆவிக்குரிய அருமையான புத்தகங்களை தங்களுடைய இதர நல்ல புத்தகங்களுடன் இப்பொழுது வைக்க விரும்பாமல் அவைகளை எடுத்து பழைய பேப்பர் கடைக்கு அனுப்பி விடுகின்றார்கள். அந்த மனிதரின் தேவச் செய்திகள், மற்றும் அவருடைய ஆவிக்குரிய ஆழமான வேதபாட போதனைகள் அடங்கிய C.Ds., DVDs குறுந்தட்டுகள், நெடுந்தட்டுகள் எல்லாம் குப்பைக் குழியை தாங்களாகவே போய்ச் சுதந்தரித்துக் கொள்ளுகின்றன. உண்மைதான் பண ஆசை, பொய், களவு, பெருமை, மாய்மாலம் போன்ற பாவங்களைச் செய்தால் கூட தேவ மக்களின் தாராள மன்னிப்பு உண்டு. ஆனால், விபச்சாரம், வேசித்தனம் செய்த கர்த்தருடைய ஊழியனை எந்த ஒரு நிலையிலும் தேவ மக்கள் ஏற்றுக் கொள்ளுவதுமில்லை, மன்னிப்பதுமில்லை, அவர்களின் முகங்களைக் கூட அதற்கப்பால் ஏறெடுத்துப் பார்க்கவும் கூட விரும்புவதில்லை.

இந்த கடைசி நாட்களில் அநேகர் இந்தக் கொடிய பாவத்தை மறைவாக செய்து கொண்டே தங்கள் மனச்சாட்சியை மழுக்கி தேவ ஊழியங்களையும் பெரிய பரிசுத்தவான்களைப் போலச் செய்து கொண்டிருக்கின்றனர். எத்தனை பயங்கரம் பாருங்கள்! அந்தோ, இந்த மாய்மாலக்கார மக்களை சங்கரிக்க தேவன் தம்முடைய பட்டயத்தை கருக்காக்கிக் கொண்டிருக்கின்றார் என்பது இவர்களுக்குத் தெரியாது. வேசிக்கள்ளரான பேலியாளின் மக்களாகிய ஓப்னி, பினெகாஸ் என்பவர்களை சங்கரிக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த கர்த்தர் இப்படிப்பட்டவர்களுக்கும் எதிராக உருவின பட்டயத்தோடு நின்று கொண்டிருக்கின்றார் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு பரிசுத்த தேவ பிள்ளையை, விசேஷமாக தேவனுக்கு ஊழியம் செய்யும் கர்த்தருடைய ஊழியனை மனுஷ கொலைபாதகன் விபச்சாரம், வேசித்தனத்தில் வீழ்த்த இரவும் பகலும் கண் விழித்துப் போராடிக் கொண்டிருக்கின்றான்

பழைய ஏற்பாட்டின் புத்தகத்திலே யோசேப்பு நம் அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்துவுக்கு முன் மாதிரியாக விளங்குகின்றார். அவர் நாம் மேலே கண்ட மூன்று காரியங்களுக்கும் தன்னை விலக்கிக் காத்துக்கொண்ட தேவ மனிதனாவார்.


Share this page with friends