• Thursday 3 April, 2025 06:17 PM
  • Advertize
  • Aarudhal FM
கிறிஸ்தவ மதபோதகரின் உடலை அடக்கம் செய்த இந்து, முஸ்லிம்கள்

கிறிஸ்தவ மதபோதகரின் உடலை அடக்கம் செய்த இந்து, முஸ்லிம்கள்

  • கன்னியாகுமரி
  • 20240730
  • 0
  • 144

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற கிறிஸ்தவ மத போதகரின் உடலை இந்து, முஸ்லிம்கள் இணைந்து அடக்கம் செய்திருக்கிறார்கள். மனிதநேயத்துக்கு சிறந்த எடுத்துக்கட்டாக இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் போற்றுகிறார்கள்.

தமிழ்நாடு எப்போதுமே மத ரீதியான பிரிவினைகளை ஏற்காது. எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் மாநிலம் ஆகும். சாதி மத வேறுபாடுகள் மூலம் இங்கு அரசியல் செய்ய முடியாது. இன்ன சாதி என்றோ, இன்ன மதம் என்றோ கூறி, தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது. மக்கள் தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள்.

இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் மிகவும் ஒற்றுமையாக வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கோயில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்குவது இங்கு தான். இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழாவிற்கு முதல் வரிசையில் செல்வது இந்துக்கள் தான். இதுபோல் வேளாங்கண்ணி மேரி மாத ஆலயம் தொடங்கி பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மக்கள் செல்வார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை இந்துக்களுக்கு அடுத்தபடியாக கிறிஸ்தவர்கள் கணிசமான அளவு இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மிக ஒற்றுமையாக இருக்கிறார்கள். இங்கு மனித நேயத்திற்கு சிறந்த உதாரணம் என்கிற அளவில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் 90 வயதாகும் இயேசு ரத்தினம் (வயது 90). இவர் தென்காசி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மத போதகராக இருந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இயேசு ரத்தினம் கடந்த 30 ஆண்டுகளாக குடும்பத்தினரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் இந்திரா காலனியில் வசித்து வந்திருக்கிறார். அவருக்கு அப்பகுதியினர் உணவு வழங்கி வந்தார்கள்.

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக இயேசு ரத்தினம் நேற்று முன்தினம் இறந்து விட்டார். இதுகுறித்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தும் யாரும் அவரை பார்க்கவே வரவில்லை. இதனை அறிந்த சொக்கம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உடையார்சாமி, திரிகூடபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் செய்யது மீரான் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இந்து, முஸ்லிம்களும் சென்று, கிறிஸ்தவ மதச்சடங்கின்படி இயேசு ரத்தினம் உடலை அடக்கம் செய்தனர். கிறிஸ்தவ மத போதகரின் உடலை இந்து, முஸ்லிம்கள் இணைந்து அடக்கம் செய்த நிகழ்ச்சி மனிதநேயத்துக்கு எடுத்துக்காட்டாகவும், நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது.

Summary

Hindus and Muslims bury the body of a Christian preacher