அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்: விளக்கவும்.

Share this page with friends

கேள்வி: நியா 14:4 அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்: விளக்கவும்.

பதில்: இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்திருந்தார். நியா 13:1, 14:4

இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்து பெலிஸ்தரின் கையினின்று இஸ்ரவேலரை விடுவிக்கும்படியாக தாயின் கருவில் உருவாகும் முன்பே, சிம்சோனை தேவன் தேர்ந்தெடுத்திருந்தார். நியா 13:3-5

ஆகவே, சிம்சோனின் வாழ்க்கையின் நோக்கமே – இஸ்ரவேலர்களை பெலிஸ்தியர் கையினின்று விடுவிப்பதாகும். நியா 13:7.

சிம்சோன் எப்படி வளர்க்கப்படவேண்டும் என்ற தகவல் முதற்கொண்டு நேரடியாக வானத்திலிருந்து அவனது பெற்றோருக்கு வழங்கப்பட்டிருந்தது. நியா 13:12-20

தன்னுடைய சித்தம் நிறைவேறும்படி தேவன் அவனிடத்தில் தன் கிரியை துவங்கினார். நியா 13:25

திம்னாத் என்ற ஊரில் பெலிஸ்திய பெண்ணைக் கண்டு அவள் மீது பிரியப்பட்டு அவளை திருமணம் செய்து வைக்க தன் பெற்றோரிடம் கேட்கிறார். நியா 14:1-3

நியாயபிரமாணத்தினிமித்தம் இஸ்ரவேலரல்லாத அந்நியரிடத்தில் திருமணம் செய்வதை அவனது பெற்றோர் மறுக்கின்றனர். நியா 14:3, உபா 7:3

இருந்தபோதிலும், அவனது பிடிவாதத்தினால், அந்த பெண்ணை மனமுடிக்க அவனது பெற்றோர் சம்மதிக்கின்றனர். நியா 14:5

இந்த சூழு்நிலையை, அனுமதிப்பதற்கு தேவனுடைய உள்நோக்கம் பிரதானமாக இருந்தது என்று வசனம் தெரிவிக்கிறது. நியா 14:4

அதாவது, இஸ்ரவேலர்கள் அடிமைகளாகவும் பெலிஸ்தியர்கள் ஆட்சியாளர்களாகவும் இருக்கும் இந்த சூழலில், தங்களை ஆளுகிறவர்களை (பெலிஸ்தியரை) நியாயமாய் எதிர்க்கும்படியும், அவர்களை அழிக்கும்படியும் ஒரு முகாந்திரம் உண்டாக இந்த சம்பவத்தை தேவன் அனுமதிக்கிறார்.

இந்த வைபவத்தின் போது, சிம்சோன் ஒரு விருந்தை ஏற்பாடு செய்கிறார். நியா 14:10

அப்போது, சிம்சோனுடன் இருக்கும்படி பெலிஸ்திய வாலிபர்கள் 30 பேர் வருகிறார்கள். அந்த சந்தோஷமான சூழ்நிலையில் ஒரு விடுகதையை சிம்சோன் அவர்களிடம் சொல்லி அதற்கான விடையை “விருந்துண்கிற ஏழுநாளைக்குள்ளே கண்டுபிடித்து விடுவித்தால், தான் முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பதாக“ அறிவித்தான். இல்லையென்றால், அந்த 30 வாலிபர்களும் சிம்சோனுக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்கவேண்டும் என்பது பந்தயம். நியா 14:12-14

ஏழாம் நாள் வரைக்கும் அந்த விடுகதையை கண்டுபிடிக்கமுடியாததால், அந்த வாலிபர்கள் நேரடியாக சிம்சோனின் மனைவியிடமே (பெலிஸ்திய பெண்) போய், அந்த விடுகதையை உன் கணவரிடம் நயமாக பேசி அதை எங்களுக்கு தெரிவிக்கும்படி நீ முற்படவேண்டும். இல்லாவிடில் உன்னையும், உன் தகப்பன் வீட்டையும் தீக்கொளுத்தி விடுவோம் என்று மிரட்டினர். நியா 14:15

அவனது மனைவி தினம்தினம் இரவில் சிம்சோன் முன்பதாக அழுது புலம்பி அவனது மனதை நோகடித்து விடுகதையில் விடையை பெற்று தன் ஜனத்து வாலிபரிடம் தெரிவிக்கிறாள். நியா 14:16-17

ஏழு நாளைக்குள் அவர்கள் விடையை சொன்னதின் நிமித்தம் நிபந்தனையின்படி, சிம்சோன், 30 துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் அந்த வாலிபருக்கு கொடுக்கவேண்டும். நியா 14:12

1- அதினிமித்தம், அஸ்கலோன் என்ற ஊருக்கு போய் அங்கு முப்பதுபேரைக் கொன்று 30 துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் அந்த வாலிபருக்கு கொடுத்து கோபத்துடன் தன் ஊருக்குச் சென்றுவிட்டான். நியா 14:19 (முதல் சம்பவம்)

சிம்சோன் கோபத்தோடு தன் ஊருக்கு போய்விட்டதால், அவளுடைய பெஞ்சாதியை வேறொருவனுக்கு மணமுடித்துவிட்டார்கள். நியா 14:20

2- கோபம் தீர்ந்து, சிம்சோன் தன் மனைவியைக் காண திரும்பி வரும்போது, நடந்த சம்பவத்தை அறிந்து, கடுங்கோபமூண்டு, சிம்சோன்: நான் பெலிஸ்தருக்குப் பொல்லாப்புச் செய்தாலும், என்மேல் குற்றமில்லை என்று அவர்களுக்குச் சொல்லி, புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக்கட்டி, பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தரின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புக்களையும் சுட்டெரித்துப்போட்டான். நியா 15:3-5 (இரண்டாம் சம்பவம்)

3- இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள். நியா 15:6 (மூன்றாம் சம்பவம்)

4- அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்கினாலொழிய இளைப்பாறேன் என்று சொல்லி, அவர்களைச் சின்னபின்னமாகச் சங்காரம்பண்ணினான். நியா 15:7-8 (நான்காம் சம்பவம்)

இதினிமித்தம் பெலிஸ்தியர்கள் சிம்சோனை பிடிக்க புறப்பட்டு லேகி என்ற ஊருக்கு வந்தார்கள் (நியா 15:9-10)

5- யூதர்கள், சிம்சோனை கட்டி பெலிஸ்தரிடம் ஒப்புக்கொடுக்க, அங்கு சென்றதும் அந்த கயிறுகளை அறுத்தெறிந்து கையில் கிடைத்த ஒரு கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு ஆயிரம் பெலிஸ்தியரை கொன்று போட்டான். நியா 15:15-16 (ஐந்தாம் சம்பவம்)

இவ்வாறு, திம்னாத்தில் பெண் கொண்டதினிமித்தம் ஐந்து முறை பெலிஸ்தியரைக் கொல்லுவதற்கு முகாந்திரம் (தேவசித்தம்) உண்டாயிற்று.

எடி ஜோயல் சில்ஸ்பி
கர்த்தருடைய வேலைக்காரன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,


Share this page with friends