ஜாதிய கட்டமைப்பு எதனால் ஏற்பட்டது என்ற சூடான விவாதங்கள்.

Share this page with friends

▪️ஜாதிய கட்டமைப்பு எதனால் ஏற்பட்டது என்ற சூடான விவாதங்கள் மனுஸ்சுருதியை மையமாக கொண்டு தமிழகத்தில் உலாவி வரும் நாட்களில் நாம் இருக்கிறோம்.

▪️ஒரு சில நாட்களில் மக்களின் பேசும் பொருள் மாறிவிடக் கூடும்.ஆனால் ஒரு சில நாட்களுக்குள் அது ஏற்படுத்திய தாக்கம் எளிதில் மறைந்துவிடப்போவதில்லை.

▪️முன்பெல்லாம் உங்களுக்குள்ளும் ஜாதிவித்தியாசங்கள் இல்லையா என்று சிலர் கேட்பார்கள். 100 வருடங்களாக பதில் கொடுத்த அனுபவத்தில் என்னத்தையாவது அசடு வழிய சொல்லி சமாளித்துக்கொண்டோம்.
உங்கள் வேதாகமத்திலும் ஜாதிய வேறுபாடு, மற்றும் ஆணாதிக்க சிந்தனை தூக்கிப்பிடிக்கப்பட்டிருக்கிறதாமே என ஓரு நண்பர் என்னிடம் கேட்ட போது சில நிமிடங்கள் திகைத்து விட்டேன்.

▪️உங்கள் மதத்திலும் இல்லையா? என்ற முந்தய கேள்விகள் வந்த போது சப்பைக்கட்டி பதில் கொடுத்தவர்கள் கூட உங்கள் வேதத்திலும் இல்லையா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?

▪️சபைக்கு வெளியே விவாதிக்கப்படும் சில விவாதங்களை சபைக்குள் நுழைய விடாமல் தடுத்துவிட்டாலும், சபை மக்கள் அதை நினைக்காமல் இல்லை பேசாமல் இல்லை.

▪️குறைந்த பட்சம் சுவிசேஷ ஊழியத்திற்கு தடையாயுள்ள ஒரு முக்கியமான பிரச்சனை இன்றைய பேசும் பொருளாயிருக்கிறது. அதற்கான வேதத்தின் பதில்களையாவது சபை வெளிப்படையாக பேச துணிய வேண்டும்.

▪️ஒரு குறிப்பிட்ட ஜாதியே தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட உயர் குலத்தினர் , அதிலும் ஆண்களே ஆளப்பிறந்தவர்கள் என்பது வேதாகமத்தின் போதனையல்ல.
வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள யூத மத நம்பிக்கை, வாழ்க்கை முறை.

▪️புதிய ஏற்பாடு எழுதின அத்துணை ஆசிரியர்களும் யூத மதத்தை வேண்டாம் என அதை விட்டு வெளியேறியவர்களே.

▪️புதிய வாழ்க்கைமுறையை இயேசு கிறிஸ்து துவக்கி வைத்தார்.

▪️அவர் ஒழித்த யூத மத நம்பிக்கைகளின், சில தவறான வாழ்க்கை முறையை இன்றய நமது சபைகள் துணிந்து கைவிட்டு, இயேசுவின் போதனைகளை பின்பற்றத் துவங்கினால் இந்தியா மாபெரும் எழுப்புதல் அடையும்.

▪️இரட்சிக்கப்படுகிறவர்களை அனுதினமும் சபையில் சேர்த்து வந்தார் என்ற வேதாகம கால எழுப்புதல் நம் தலைமுறையில் காண வேண்டும் என்று விரும்பு வோராவது புதிதாக சிந்திப்போம்.

▪️புதிய ஏற்பாடு கற்றுத்தரும் வாழ்க்கைமுறையான கிறிஸ்துவுக்குள் ஆணொன்றும் இல்லை பெண்ணென்றும் இல்லை , யூதனென்றும் இல்லை கிரேக்கனென்றும் இல்லை, என்பதைத்தான் நாம் பின்பற்றுகிறோம் என்பதை இன்றைய இந்தியா நம்புமானால், நாம் கண்ணீருடன் கதறி அழுது போராடி அழைக்கிற எழுப்புதல் தானாக ஏற்பட்டுவிடும்.

▪️பழைய ஏற்பாட்டு வாழ்க்கைமுறையான ஜாதியப் பாகுபாடு, ஆணாதிக்கம் யூத மதத்தின் நம்பிக்கையே தவிர , கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டிய வேதாகமத்தின் போதனையல்ல என்பதை சபையாருக்கு கற்றுத்தருவது அவசியம்.

▪️ தற்காலத்திற்குத் தேவையான சீர்திருத்தங்களை எதிர்கால தலைமுறைகளாவது சிந்திக்கட்டும், பேசமுன்வரவேண்டும் என்ற ஆவலில் பதிவிடுகிறேன்.

– கலை தேவதாசன்


Share this page with friends