யாரும் நினையாத நாழிகை – அந்த நாளை நினைத்ததுண்டா?

Share this page with friends

குழந்தை பருவமதில்
இரவெல்லாம் தூங்காமல்
உடலும் உள்ளமும் புரண்டெழ
மறுநாள் நண்பர்கள் புடைசூழ
கேக் வெட்டிக் கொண்டாடுவதை
ஆவலுடன் எதிர்பார்ப்பது
பிறந்த தினம்!

விடலைப் பருவமதில்
நேசிப்பவளி(ரி)ன் கவனம் பெற
சிறந்த பரிசை தேர்வு செய்து
சிரத்தையுடன் சேர்த்திட
காத்திருப்பது
காதலர் தினம்!

இல்லற வாழ்வில் இணைந்திட்ட
மங்கல நாளை மனதில் கொண்டு
மறவாமல் தம் இணையருக்கு
வாழ்த்துகள் கூற காத்திருப்பது
திருமண தினம்!

பெற்ற தாய் தந்தையருக்கு
உற்ற மரியாதை கொடுக்கும்
உயரிய நாளாய் நினைத்து
உணர்வுபூர்வமாய்
நெகிழச் செய்ய திட்டமிடுவது
அன்னையர் & தந்தையர் தினம்!

பிறந்த பொன் நாட்டின்
சிறந்த விடுதலையை
பட்டொளி வீசிடும்
கம்பத்துக் கொடியின் முன்
நினைவு கூர்ந்திட
அநேக நாள் பயிற்சியுடன்
அணிவகுத்து நிற்பது
நாட்டின் சுதந்திர தினம்!

உலகமே இணைந்து
உற்சாகப் பண்டிகையாய்
கொண்டாட காத்திருப்பது
உலகத்தின் பாவத்திற்காய்
மனிதனாய் அவதரித்த
கிறிஸ்து பிறந்த தினம்!

இவை மட்டுமா?

குடும்பங்கள் கொண்டாடும் தெய்வங்களாய்த் திகழும்
குழந்தைகள் தினம்!

கற்பிக்கும் ஆசான்களை
சிறப்பிக்கும் ஆசிரியர் தினம்!

உற்பத்தியைப் பெருக்கி
பொருளாதாரத்தை உயர்த்திடும்
உழவர் & உழைப்பாளர் தினம்!

பெண்மையின் ஆளுமையை
பிரசித்தப்படுத்திட துடிக்கும்
மகளிர் தினம்!

எனப் பல பல தினங்கள்
வாழ்வில் வந்து செல்கின்றன!
காலத்தின் சுழற்சியால்
கடந்து செல்கின்றன!
இதற்கிடையே –
கனவுகளும் தொடர்கின்றன!
காத்திருப்புகளும் தொடர்கின்றன!

யாரும் நினையாத நாழிகையில்
வரப்போகும் நாளொன்று உண்டு!
அந்நாள் பற்றி அறிந்தோர்
நம்மில் எத்தனை பேர்!?

அதுதான்!
வருகையின் நாள்!

நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
(மத்தேயு 24:44)

மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
(மத்தேயு 25:13)

இயேசு ராஜன் வரப்போகும்
அந்த நாளை எதிர்நோக்க
நாம் ஆயத்தமா!?

மற்ற நாட்களுக்காய்க்
விழித்திருக்கும் நாம்
அந்த நாளுக்காய் விழித்திருக்கிறோமா?

சிந்திப்போம்..
சீர்படுவோம்!

– சுகந்தி பிரபாகரன்


Share this page with friends