நெகேமியா எப்படி 52 நாளில் அலங்கத்தை கட்டி முடித்தார்?

Share this page with friends

(கர்த்தருடைய ஆலயம் மற்றும் ஒரு மிஷனை நிறைவேற்ற துடிப்பவர்களுக்கான ஒரு பதிவு)

தேவன் நம் ஒவ்வொருவரையும் கொண்டு ஒரு தேவ திட்டத்தை குறித்த கால கட்டத்திற்குள் நிறைவேற்ற திட்டம் வைத்து அதற்குரிய தரிசனத்தை தந்து உந்துதலை தந்து தேவைகளை தந்து, அபிசேகம் தந்து, வரங்கள் தந்து நம்மை தெரிந்து எடுத்து நடத்துகிறார் என்பது தான் நம் வாழ்வின் மிக பெரிய நம்பிக்கை. அவைகளை நிறைவேற்ற நாம் என்ன செய்ய வேணடும் என்பவைகளை வேதாகத்தில் அநேக உதாரணங்கள் மூலம் கர்த்தர் எழுதி வைத்து காலம் காலம் நம்மோடு பேசி கொண்டு தன் சித்தத்தை நம்மை கொண்டு நிறைவேற்றி வருகிறார். அதில் நெகேமியாவின் தலைமையத்துவத்தில் வரும் சம்பவங்கள் ஒரு நல்ல உதாரணம். அவர் எப்படி அலங்கத்தை 52 நாட்களில் கட்டி முடித்தார் என்பதை தொடர்ந்து கவனிப்போம்.

A. கர்த்தரை சார்ந்து கட்டி முடித்தார்.

எருசலேமின் சூழ்நிலையை நன்கு கவனித்து வந்த நெகெமியா, அதின் மூலமே தேவ தரிசனத்தையும் திட்டத்தையும் பெற்று கொண்டான். எருசலேமின் நிலமையை குறித்து கேள்விப்பட்டது முதல், ஜெபத்தில் உபவாசத்தில் தனது நேரத்தை செலவிட்டார். அந்த தரிசனம் ஜெபத்தில், உபவாசத்தில் கற்பம் தரிக்க பட்டது. கர்த்தரின் தரிசனம் ஒருபோதும் கர்த்தரை சாராமல் நிறைவேற்ற முடியாது என்பதை நன்கு அறிந்த நேகேமியா தன்னை தாழ்த்தி, அழுது புலம்பினார். உள்ளம் நொருக்கபட்டார். கர்த்தருடைய இரக்கம் கிருபைக்காக காத்திருந்து முன்னோர்கள் செய்த பாவங்களையும் தங்கள் மீருதல்களையும் அறிக்கை பண்ணி தெய்வீக சுவாவத்திற்கு நேராக தன்னை கொண்டு வந்தான். தேவ தரிசனங்கள் முதலில் நம்மை சரிப்படுத்தும். நாம் சரியாக வேண்டுமெனில் தேவனை சார்ந்து கொள்ள வேண்டும். நாம் கர்த்தரை சார்ந்து கொள்கிற இடம் தான் ஜெபம் மற்றும் உபவாசம். ஜெபத்தில் உபவாசத்தில் உருவாக முடியாத எந்த தரிசனமும் நிறைவு பெறுவதில்லை. தரிசனத்தை தொடர்ந்து செய்யும் போது ஏற்பட்ட நெருக்கங்களில் கூட நேகேமியா கர்த்தரை சார்ந்து ஜெபித்து அவைகளை மேற்கொண்டதை கூட நாம் வேதத்தில் காண முடியும். எனவே கர்த்தரை சார்ந்தே அவரது தரிசனமும் நிறைவேற முடியும். எனவே நாம் தரிசனத்தை அவரிடம் இருந்து தான் பெற்று கொண்டோம் என்பதை கர்த்தருடைய சமூகத்தில் இருந்து முதலாவது உறுதி செய்து கொள்ள வேண்டும்.

B. ஏற்ற காலத்தில் நிதானத்தோடு கட்டி முடித்தார்.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சமயம் உண்டு. காலத்தை நிதானித்து அறிந்தால் அதுவே தேவ ஞானம். எருசலேமில் நடந்த பால்கடிப்புகளை கேட்ட நேகெமியா தன் காலத்தை உணர்ந்து கொண்டான். *ஜெபித்து காத்திருந்த போது ராஜாவிடம் இருந்து அனுமதியோடு கூட தேவைகளும் சந்திக்க படுகிறது. தேவ தரிசனம் மனித தயவில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். *ராஜ அனுமதி, ராஜ பாதுகாப்பு, ராஜ ஃபண்ட் மற்றும் ராஜ வழியனுப்புதல் பெற்ற நெகேமியா அவசரப்பட்டு தன்னை பிரகடன படுத்தாமல் ரகசியமாக அலங்கங்களை ஆராய்ந்து பார்த்தான். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் தனித்து இருந்தான். ஏற்ற நேரம் வந்த போது ஜனங்களிடம் அறிவித்து, வாருங்கள் எழுந்து கட்டுவோம் என்று ஊக்குவித்தார்.* ஜனங்கள் நெகேமியாவோடு ஒருமித்து கட்ட எழுந்து நின்றார்கள். தேவ தரிசனம் அற்பமான நிலையில் ஆரம்பிக்கப்பட்டாலும் தேவ பிரசனத்தால் அது மகிமை உள்ளதாகவே இருக்கிறது. எந்த திட்டத்தை ஆரம்பிக்கும் போது தேவ பிரசன்னம் என்கிற மகிமை வெளிப்படுகிறதோ அது தான் தேவ சமயத்தில் வெளிப்படும் அங்கீகாரம்.

C. ஆவலோடு மற்றும் உற்சாகத்தோடு கட்டினார்கள்.

அலங்ம் கட்ட தொடங்கின உடன் எதிர்ப்பும் கிளம்பியது. தேவ திட்டத்தில் பாடுகள் போராட்டம் இல்லை என்பது தவறான அணுகுமுறை. அதின் நடுவில் கர்த்தர் காரியத்தை நடத்தி முடிப்பார். அது தான் ரகசியம். சன்பல்லா தோபியா அலங்கம் கட்டபடுவதை பார்த்து எரிச்சல், பொறாமை அடைந்து, சக்கந்தம் பண்ணி, பரியாசம் செய்து என்னவெல்லாமோ செய்து விசனப்படுத்தினார்கள். அதின் நடுவிலும் ஜனங்களும் நேகேமியாவும் சோர்ந்து போகாமல் அலங்கத்தை ஆசையாக ஆவலோடு கட்டி முடித்தார்கள். பிறர் உற்சாகம் படுத்தும் போது ஒரு வேலையை செய்வது எளிது ஆனால் தேவ திட்டத்தை பிறர் விசனபடுத்தினாலும் எதிர்த்தாலும் அதின் நடுவில் அதை நிறைவேற்ற கர்த்தர் உற்சாகம் தருகிறார் என்றால் அதுவே தேவ திட்டத்தில் உள்ள மகத்துவம். தேவ திட்டத்தில் தேவ கரம் இருப்பதால் எந்த மனுசனும் அதை சோர்வடைய செய்ய முடியாது. எழுந்து கட்டுங்கள். கர்த்தர் கரம் என்றும் நமக்கு உண்டு

D. பழுதுப் பார்த்து காட்டினார்கள்.

தங்களுக்குள் இருந்த குறைகள், மற்றும் இடிந்து போன அலங்கங்கள் அனைத்தையும் செப்பனிட்டு, பழுது பார்த்து கட்டினார்கள். கோத்திரம் கோத்திரமாக இணைந்து தங்கள் தங்கள் பகுதிகளில் பழுது பார்த்து கட்டினார்கள். எந்த இடத்தில் அவரவர் தகுதிக்கு ஏற்ப இணைந்து ஒருவரை ஒருவர் தாங்கி காரியங்கள் நடத்தப் படுகிறதோ அங்கு தான் தேவ திட்டம் பரிபூரணம் அடையும். அவரவர் பொறுப்பு உணர்ந்து ஒருமனதோடு ஒரே நோக்கத்தோடு செயல்படும் இடம் தான் தேவ திட்டத்தின் அஸ்திபாரம். நான் தான் இங்கு எல்லாம் என்கிற தனித்துவம் இங்கு இல்லை. ஒற்றுமை தான் இங்கு தனித்துவம். திரியேக தேவன் ஒற்றுமையில் சிறந்தவர்.

E. பட்டயத்தோடு எச்சரிக்கை உணர்வுடன் கட்டினார்கள்.

எதிராளிகளின் சவால்கள், நெருக்கங்கள், எதிர்ப்புகள் பெருகின போது மிகவும் எச்சரிக்கையுடன் step step ஆக ஷிஃப்ட் போட்டு அலங்கம் கட்டினார்கள். இப்படிபட்ட நேரத்தில் இருபுறமும் கறுக்குள்ள பட்டயமாகிய கர்த்தருடைய வசனத்தையும் விசுவாசம் என்னும் கேடகத்தையும் பிடித்து கொள்ள வேண்டும். வாக்குத்தத்தம் ஒருக்காலும் மாறாது. ஏனெனில் வாக்கு சொன்னவர் மாரதவர். அவரது வசனம் எங்கும் ஊடுருவி செல்லும் தன்மையுள்ளது. அதை நம்புங்கள். கர்த்தரை நம்புகிற மனுசன், அவரது வசனத்திற்கு பயப்படுகிற மனுசனும் அவனது தேவ தரிசனமும் ஒரு போதும் அழிந்து போகாது.

F. பயப்படாமல் தைரியமாக கட்டினார்கள்.

எத்தனையோ மிரட்டல்கள், பயமுறுத்தும் வேலைகள், உள்ளடி வேலைகள் எதிராளிகள் கொண்டும் வந்தும், கையெழுத்து இடாத மொட்டை கடிதங்கள், கள்ள கடிதங்கள், பயமுறுத்தும் கள்ள தீர்க்கதரிசிகள் கொண்டும் தேவ திட்டத்தை முறியடிக்க பார்த்த போதும் அந்த எதிர் திட்டங்களையும் எதிராளிகளையும் கர்த்தரிடம் ஒப்பு கொடுத்து விட்டு தைரியமாக வேலையை செய்து முடித்தார்கள். இந்த நேரத்தில் அரசியல் தலையீடு என்று என்ன மிரட்டல்கள் வந்தும் நேகேமியா மற்றும் அவனது கூட்டத்தார் பயந்து போகவில்லை. வேலையை நிறுத்தவும் இல்லை. எனவே கர்த்தர் தந்த திட்டத்தை தொடர்ந்து செய்யுங்கள் கர்த்தர் பார்த்து கொள்வார்.

G. சமரசம் இல்லாமல் நிறைவாக கட்டி முடித்தார்கள்.

எதிராளிகள் செய்த எல்லா காரியங்களும் அவர்களுக்கு தோற்று போக சமரசம் பண்ண அழைக்கின்றார்கள். இங்கு தான் பகுத்தறியும் ஆவி நமக்கு தேவை. நமது தேவ திட்டத்தை தடுக்க, நிறுத்த, அதில் இருந்து நமது கவனத்தை திசை திருப்ப சத்துரு உதவி செய்வது போல, அனுகூலம் செய்வது போல கொண்டு வரும் எல்லா சூழ்ச்சிகளை இனம் கண்டு அறிந்து தேவ திட்டத்தை உயர்வாக மதித்து செயல்பட வேண்டும். நேகேமியா அலங்கம் கட்டுவதை உயர்வாக எண்ணியது தான் அவனது வெற்றியின் ரகசியம். நம்மை அழைத்தவர் உண்மை உள்ளவர் அவர் பாதி வழியில் விட்டு செல்பவர் அல்ல. முடிவு பரியந்தம் நம்மை நடத்துவார். பாதியில் விட்டு விட்டு relax செய்கின்றீர்கள் என்றால் தூசியை உதறி விட்டு எழும்பி செயல் படுங்கள். கர்த்தர் கைகளை திடபடுத்துவார். பிசாசின் தந்திரங்களை நீங்கள் அறியாதவர்கள் அல்லவே!

கர்த்தர் தாமே நமக்கு தந்த தரிசனங்களை நிறைவேற்றி தறுவாராக!

செலின்


Share this page with friends