கேள்வி : ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்?
கேள்வி : “… ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்…” – அப். 8:31
பீகாரில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நக்சலைட் தீவிரவாதி, Gems மிஷனெரி இயக்கத்தின் தலைவர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களைப் பார்க்கும்படியாக ஆயுதங்களுடன் வந்து, நீங்கள் நடத்துகிற பள்ளியில் என் பிள்ளைக்கு படிக்க இடம் கொடுங்கள் என்று கேட்டான். அது கல்வியாண்டின் இடைப்பட்ட நேரமாக இருந்தபடியால் இன்னும் மூன்றுமாதம் கழித்துவாருங்கள் பள்ளியில் இடம் தருகிறேன் என்றதற்கு, நான் யார் தெரியுமா? என்னை கண்டாலே எல்லாரும் பயப்படுவார்கள் என்று மிரட்டினான். அதற்கு நீ யாராய் இருந்தால் எனக்கென்ன? உன்னை பெரிய ஆளாய் நினைத்துக் கொள்கிறாயே? நான் என் மனைவி பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு தைரியமாய் கடைத் தெருவிற்கு போவேன். உன்னால் அப்படி போக முடியுமா? என்று கேட்டார். அவன் கோபத்துடன் எழுந்து சென்றுவிட்டான். மறுநாள் மீண்டும் ஆயுதங்களுடன் மிக வேகமாக உள்ளே வந்தவன் மிஷனெரி தலைவர் முன்பாக எல்லா ஆயுதங்களையும் வைத்துவிட்டு, ஐயா, நீங்க சொன்ன அந்த ஒரு வார்த்தையை கேட்டு என் நிம்மதியே போய்விட்டது. என் மனைவி பிள்ளைகளை பல மாதங்களாக நான் பார்க்க முடியாமல் காடுகளில் மறைந்து வாழ்கிறேன். இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அப்பொழுது இயேசுவைப் பற்றி அவனுக்கு சொன்னவுடன் உடனடியாக இயேசுவை ஏற்றுக்கொண்டான்.
பழைய பாவங்களை விட்டுவிட்டு அவன் வாழ்ந்த நாட்களில் முன்செய்த கொலைகளுக்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டான். பாவம் செய்யும்போது எனக்கான தண்டனை கிடைக்கவில்லை. மனம் திரும்பியவுடன் எனக்கான தண்டனை கிடைத்திருக்கிறதே என்று கேட்ட போது “நீதிமானுக்கு பூமியிலேயே சரிக்கட்டப்படும்” என்று பதில் சொல்லி ஆறுதல்படுத்தினார் மிஷனெரி. 11 வருட சிறைத்தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தவனுக்கு ஒரு ஆசை வந்தது. கொலைகாரனான எனக்கு நீங்க இயேசுவைப் பற்றிச் சொன்னது போல நானும் மற்றவர்களுக்கு இயேசுவைப்பற்றி சொல்ல வேண்டும் என்று! வேதாகம கல்லூரியில் சேர்ந்து படித்து ஊழியமும் செய்கிறான்.
எத்தியோப்பிய மந்திரியின் இரதத்துடனே சேர்ந்துகொள்ள ஆவியானவர் பிலிப்புக்கு சொன்னபோது அவனும் அவ்வாறே செய்ய “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் எனக்கு எப்படி தெரியும்” என்ற மந்திரியிடம் பிலிப்பு இயேசுவைப்பற்றிச் சொல்லி ஞானஸ்நானமும் கொடுத்தார். ஒரு பாவி மனம் திரும்பும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டு. இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டிய காரியம் அநேகம் இருக்கிறது. அழிந்து போகிற ஆத்துமாக்களை குறித்த பாரத்துடன் நாம் செயலாற்ற வேண்டும். அது நம் கடமை. ஒரே ஒரு கேள்வி தீவிரவாதியை மாற்றியதே! கர்த்தருடைய கரத்தில் நாம் இருந்தால், ஆவியானவரால் வழிநடத்தப்பட்டால், நாம் பேசும் சாதாரண வார்த்தைகள் கூட பிறரை ஆண்டவரண்டை நடத்தக்கூடும். நாமும் தேவராஜ்ய பணிகளை செய்கிறவர்களாய் காணப்படுவோம்.
- Bro. ஹனீஷ் சாமுவேல்