நாம் கையிட்டு செய்யும் வேலைகளில் திறம்படச் செய்வது எப்படி?

Share this page with friends

How to excel in our work? நாம் கையிட்டு செய்யும் வேலைகளில் திறம்படச் செய்வது எப்படி?

வேலைகள் அல்லது கிரியைகள் நிச்சயம் பலன் தரும். நாம் செய்யும் செயல்கள் மரணத்திற்கு பின்னரும் நம்மை பின்தொடரும் என்று வசனம் நமக்கு சொல்கிறது.

  1. எதை செய்தாலும் தேவ நாம மகிமைக்காக கர்த்தருக்காக செய்கின்றோம் என்கிற உணர்வில் செய்ய வேண்டும்

ஊழியத்தையும் வேலையையும் பிரித்து பார்க்கக் கூடாது. நெகேமியா, தானியேல், செருபாவேல், அமோஸ், தாவீது, மோசே, சீஷர்கள் ஏன் நமது மீட்பருமான இயேசு கிறிஸ்து கூட நாம் சொல்லும் உலக வேலையை தான் முதலில் செய்தார்கள் பின்னர் தான் ஊழியத்தில் தேவனால் பயன்படுத்தப் பட்டனர். பவுலின் ஊழியத்தில் கூட கைகளால் வேலை செய்ய அவர் தயக்கம் காட்ட வில்லை. எனவே எதை செய்தாலும் அதில் தேவன் மகிமைப் படுவார் என்கிற எண்ணத்தில் கர்த்தருக்காக செய்யவேண்டும்.

  1. நாம் செய்கின்ற காரியம் நல்லது என்று அறிகின்ற வரைக்கும் நேர்த்தியாக செய்ய வேண்டும்

வேற வழியில்லை செய்ய வேண்டி இருக்கிறது என்கிற எண்ணத்தோடு அல்ல, பரவாயில்லை செய்வோம் என்கிற எண்ணத்தோடும் அல்ல நம்மால் இயன்றவரை நேர்த்தியாக செய்ய வேண்டும். ஏனெனில் தேவன் தாம் உருவாக்கின எல்லாவற்றையும் நல்லது, மிகவும் நல்லது என்று கண்டார் ஏனெனில் அவர் excellence என்று அறியப்படுகிற தேவன். அவர் பூரணர் நாமும் அந்த பூரணத்திர்க்கு நேராக கடந்து செல்ல வேண்டும். அப்படி அறிவில், ஞானத்தில், திறமையில் சிறப்பாக செயல்பட்டவர்கள் ராஜாக்கள் முன் நின்று இருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

  1. கர்த்தர் கொடுத்த பிராமணத்தின் படி திட்டம் வகுத்து செய்ய வேண்டும்

கர்த்தர் அவரவருக்கு விதிக்கிற கட்டளைகள் படி சரியான planing மற்றும் goal setting அமைத்து செயல் பட வேண்டும். வேலை செய்யும் முன் பட்டயம் கூர்மையாக இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். கிறிஸ்து பிதாவின் சித்தம் செய்வதை தான் முதன்மையாக கருதினார். கட்டடம் கட்டும் முன் நமது திரானியை அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தர் நமக்கு விதிக்கிற திட்டத்தை அறிந்து வசனத்தின் படி தேவ சித்தம் செய்ய திட்டம் வகுக்க வேண்டும்.

  1. அவரவர் அழைப்பு, திறமை, கிருபை வரங்களுக்கு ஏற்றபடி செயல்பட வேண்டும்

பிறரை போட்டியாக கருதாமல் கர்த்தர் எதற்காக நம்மை முன் குறித்தாரோ அதை கண்டு பிடித்து, நமது கிருபை, திறமை, ஆர்வம், அழைப்பு என்ன என்று அறிந்து அதன் அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். திரானிக்கு மிஞ்சி தனக்கு இல்லாத கருமங்களில் தலை இட கூடாது. திறமைகளை புதைக்கமால், அவைகளில் திருப்தி அடைந்து ஓட வேண்டும். இருக்கிற திறமையை, வலிமையை முழுமையாக, சாமர்த்தியமாக, சரியாக பயன்படுத்துங்கள். இல்லாதததை குறித்து வருத்தம் அடையாதிருங்கள்.

  1. செய்யும் வேலையில் விடாமுயற்சியையும் ஆவலையும் மற்றும் பிரயாசத்தையும் விட்டு விடாதிருக்க வேண்டும்

செய்கின்ற காரியங்களில், தடைகள், தோல்விகள், தொல்லைகள், கடின நிலைகள் மற்றும் சோர்வுகள் இருக்குமாறு தெரிந்தால் கூட ஈசாக்கை போன்று தேவன் குடி இருக்க சொன்ன இடத்தில் விதை விதைத்து, மூடிப் போன துரவுகளை தூர் வாரி, புதிய துரவுகளை வெட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நாம் வேலை செய்வதில் சுணக்கம் காட்ட கூடாது. அதினால் தான் ஈசாக்கை கர்த்தர் ஆசீர்வதித்தார். முடிவில் எதிராளிகள் உடன்படிக்கை பண்ணும் அளவில் கர்த்தர் உயர்த்தினார். கர்த்தர் பார்த்து கொள்வார், கிருபை கிருபை என்று முயற்ச்சி செய்யாமல் இருந்து விடக் கூடாது. சத்தியம் என்னவெனில் நமக்குள் இருக்கும் கிருபை தான் நம்மை பிரயாசப் பட வைக்கிறது. சன்பல்லா தோபியா எத்தனை முறையோ சக்கந்தம் செய்தும் ஜனங்களின் ஆவல் குறைய வில்லை. ஜெபித்தும், பட்டயம் கையில் பிடித்து கொண்டும், ஜாமக்காரரை ஏற்படுத்தி நெகேமியா 52 நாட்களில் அலங்கம் கட்டி முடித்தார் என்பதை நாம் வாசிக்க வில்லையா!.

  1. செய்யும் வேலையில் தாமதம் செய்து ஒத்தி போடாதிருங்கள். சரியாக நேரத்தை பயன்ப்படுத்துங்கள்

சோம்பேறித்தனம், வீணான காரியங்களில் நேரத்தை விரயம் செய்தல், யாரும் எனக்கு உதவி செய்ய வில்லை, எனக்கு வழியில்லை, என்னை யாரும் ஊக்கப்படுத்த வில்லை என்று ஒதுங்கி போய் விடாதிருங்கள். Self motivation இல் வளர கற்றுக் கொள்ள வேண்டும். தாவீது கர்த்தரில் தன்னை திடப்படுத்தி கொண்டு தான் பெலனற்ற சூழலிலும் யுத்தம் செய்து இழந்தவைகளை திருப்பி பெற்று கொண்டான். சூழ்நிலைகளை பார்த்தால் யார் விதைக்க முடியும்? காற்றைப் பார்த்தால் யார் அறுவடை செய்ய முடியும்?

  1. பிறரது ஆலோசனை மற்றும் அனுபவங்களை அற்பமாக எண்ணி மட்டம் தட்டக்கூடாது

ஆலோசனை இல்லாத இடத்தில் காரியங்கள் வாய்க்காமல் போய் விடும். எனக்கு எல்லாம் தெரியும் என்று தனித்தியங்கும் சுபாவத்தை விட்டு விட்டு, நாம் பிறரை சார்ந்து இருக்க வேண்டிய சுழல்களை அறிந்து பிறரது ஞானம், அறிவு, அனுபவம் மற்றும் திறனை பயன்படுத்த தயங்க கூடாது. வலை கிழிய மீன்கள் கிடைத்தபோது அவற்றை கரை சேர்க்க சீஷர்கள் உதவியை நாடினது போன்று, இயேசு கிறிஸ்து சீடர்களை தன்னகத்தே வைத்து செயல்பட்டது போன்று செயல்பட வேண்டும்.

  1. எதையும் பிறர் காண செய்யாதிருக்க வேண்டும். பெயர் புகழுக்காக எதையும் செய்யகூடாது

இந்த வேலை எனக்கு பெருமை சேர்க்கும், புகழ் கிடைக்கும், பிறர் மெச்சுவர் என்கிற கண்ணோட்டத்தில் வேலை செய்யகூடாது. அவமானங்களை சகித்து இயேசு கிறிஸ்து சிங்காசனத்தில் வீற்று இருக்கிறார் என்பதை எப்போதும் நினைவில் வைத்து இருக்க வேண்டும். பிறர் காண, பிறரது பாராட்டுதல் தான் நமக்கு உற்சாகம் தருகின்றது என்றால் நாம் மாயத்தில் பிடிக்கப்பட்டு விடுவோம். யார் பாராட்டினாலும் பாரட்டாவிட்டாலும் நாம் செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருந்தால், ஏற்றக் காலத்தில் அறுவடை செய்வோம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். கொஞ்சத்தில் உண்மை வேண்டும். எனவே சிறு சிறு காரியங்களையும் உதாசீனம் செய்யாதபடி சரி செய்ய வேண்டியதை சரி செய்து செய்கின்ற காரியத்தில் உண்மையாக செயல்பட்டால் நிச்சயம் ஆசீர்வாதம் கனத்தோடு கிடைக்கும்.

  1. அதீத வேலை என்று ஓடி சரீரத்தை ஓய்வுக்கு விலக்காதிருக்க வேண்டும். சரியான ஓய்வு பெற வேண்டும்

முன்னுரிமை கொடுக்க வேண்டியவர்களுக்கு, கொடுக்கவேண்டியவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். எதிலும் அதீதஈடுபாடு கொள்ளாதிருக்க வேண்டும். அது முடிவில் addiction இல் போய் விடும். ஆறு நாட்கள் வேலை செய்து தேவன் 7 வது நாளில் rest எடுத்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தருடைய சமூகத்தில் reflect செய்ய வேண்டும். குடும்பத்தோடு நேரத்தை செலவிட வேண்டும். ஆரோக்கியம் பேண கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாமல் எல்லாவற்றிர்க்கும் பதில் கொடுக்க வேண்டும், எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்ய வேண்டும் என்று பற்பல காரியங்களை குறித்து அல்லோலப் படகூடாது. சில்வற்றை வேண்டாம், முடியாது என்று சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும்.

  1. கடைசியாக நாம் இன்னும் ஏதோ விதத்தில் வேலைக்காரர்களே என்பதை அறிந்து நன்றியறிதலோடு வேலை நுணுக்கங்களை பிறருக்கு சொல்லித் தார வேண்டும்

நாம் செய்கின்ற வேலை நிச்சயம் காலம் கடந்து நிற்க வேண்டும். நாம் எஜமான் கொடுத்த வேலையை நிறைவேற்றின ஒரு வேலைக்காரன் தான் என்கிற உணர்வில் வளர்ந்து பெருக வேண்டும். அவரே கூலி தருவார் என்கிற திருப்தி அடைந்து நமது திறமைகளை எடுத்து செல்லும் சீடர்களை கண்டுப் பிடிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து தமது சீடர்களை அழைத்து ஆசீர்வதித்து, அதிகாரம் கொடுத்து, கட்டளை கொடுத்தது போன்று நல்ல ஒரு முடிவை கொடுக்கும் maturity க்கு நேராக வர வேண்டும். கடைசி வரை நான் தான் சகல கலா வல்லவன் என்கிற மனோபாவம் இருக்க கூடாது. தாவீது தன் மகனுக்கு தன் சிங்காசனத்தைக் கொடுத்து அவனை வாழ்த்தி விடை பெற்றார். மோசே தன் முடிவு காலத்தில் யோசுவாவுக்கு கனம் கொடுக்க தயங்கின போது கொஞ்சம் கனம் கொடு என்று கர்த்தரால் கடிந்து கொள்ளப் பட்டது போன்று இருக்க வேண்டாம். எலியா கடைசியாக எலிசாவை ஓட விட்டார் ஆனால் கிறிஸ்துவை பாருங்கள் கிட்டத்தட்ட 500 பேரை அழைத்துக் கொண்டு போய் அவர்களுக்கு காட்ச்சிக் கொடுத்து அவர்களை ஆசீர்வதித்து பரமேறிப் போனார். அதே மனோபாவம் நமக்கு இருக்கட்டும். Servant leadership அதுதான் கிறிஸ்துவின் சிந்தை அது நம்மிடம் வலுப்பெறட்டும்.

எனவே நிச்சயமாக நம் கிரியைகளுக்கு பலன் உண்டு. ஏனெனில் அவனவனின் கிரியைகளுக்கு தக்கப்பிரதிப்பலனோடு அவர் சீக்கிரம் வருகிறார். இல்லையெனில் நமது இளைப்பாருதலில் நமது கிரியைகள் சென்று பிரதிபலனை கொண்டு வரும் என்கிற நம்பிக்கையில் பெருகி அவரவர் அழைப்பில் முன்னேறுவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக!

செலின்


Share this page with friends