எதுவரைக்கும் தேவனாகிய கர்த்தர் நம்மீது இறங்காது இருப்பார்? எப்பொழுது இந்த சூழ்நிலை மாறும்?

Share this page with friends

கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் (சங்கீதம் 6:3).

கொரோனா நோயானது முதலாம் அலை, இரண்டாம் அலை, மூன்றாவது அலை என்று போய்க்கொண்டே இருக்கிறது. எதுதுவரைக்கும் தேவனாகிய கர்த்தர் நம்மீது இறங்காது இருப்பார்? எப்பொழுது இந்த சூழ்நிலை மாறும்?

அவசரமான ஒரு வேலைக்காக இரண்டு பேர் வேகவேகமாக நடந்து போய் கொண்டிருந்தனர். திடீரென மழை வந்து விட்டது. இரண்டு பேரும் ஒரு கடையோரம் மழைக்கு ஒதுங்கினார்கள். அவர்களில் ஒருவர் ‘என்ன இது, இந்த நேரம் பார்த்து மழை வந்து விட்டதே!’ என சலித்து கொண்டார். இன்னொருவரோ ‘மழை பெய்வது சகஜமானது. ஆனால் இது எவ்வளவு நேரம் பெய்யப்போகிறதோ தெரியவில்லையே’ என்று அங்கலாய்த்து கொண்டார். மனித வாழ்க்கையிலும் துன்பங்களும் கஷ்டங்களும், பிரச்சனைகளும், சகஜமானதே. ஆனால் வந்துவிட்ட கஷ்டங்களும் சோதனைகளும் எவ்வளவு காலம் இப்படியே தொடரப்போகிறது? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் போகும்போது தான் சலிப்பும், பயமும், சோர்வும், நம்பிக்கை இழப்பும், மனத்தளர்வும் ஏற்பட்டு விடுகிறது.

1️⃣கர்த்தர் சொல்லியிருக்கிற கர்ப்பத்தின் கனியை கண்களால் காண இனியும் எதுவரைக்கும் காத்திருப்பது, என்ற கேள்வி ஆபிரகாமிற்கு நிச்சயம் தோன்றியிருக்கும்.

2️⃣எத்தனை காலம் இந்த அந்நிய நாட்டில் சிறை கைதியாக முடங்கி கிடப்பது என்ற கேள்வி யோசேப்பிற்கு கட்டாயம் ஏற்பட்டிருக்கும்.

3️⃣மனநிலையும் உடல் நிலையும் பாதிக்கப்பட்டு எதுவரைக்கும் வியாகுலப்பட்டு கொண்டிருப்பது என்ற கேள்வி யோபுவிற்கு நிச்சயம் எழுந்திருக்கும்.

ஆனால் எதுவரைக்கும் என்ற கேள்விக்கு இந்த மூன்று பேருமே முடிவை கண்டனர். எதுவும் அப்படியே எந்நாளும் தொடர்ந்து விடப்போவதில்லை. தேவன் மேல் நம்பிக்கை வைத்து அவரை சார்ந்து கொண்டு வாழ்கின்றவர்கள் தங்கள் துன்பங்களுக்கு ஒரு முடிவை காணாமல் போய் விடுவதில்லை. இரவு எத்தனைதான் இருள் நிறைந்ததாக இருந்தாலும் வெளிச்சம் வீசும் பகல் வராமல் போவதில்லை. எதுவரைக்கும் இந்த கொரோனா துன்பம் தொடரபோகிறது? என்ற கேள்விக்கு விடை காண்பது கடினம். ஆனால் தேவன் அவைகளை அறிவார். சில சூழ்நிலைகளில் அந்த கேள்விக்கு விடை காணும் பொறுப்பு நம்மிடமே இருக்கும். அவற்றில் ஒரு சிலவற்றை நாம் காண்போம்.

சில துன்பங்களுக்கு, நோய்களுக்கு, வேறு யாரும் அல்ல, நாம் தான் காரணம். தவறான முடிவுகள், தவறான குணங்கள், தவறான ஆலோசனை, தேவனை சார்ந்து செயல்படாமை போன்றவையும் துன்பங்கள் நீங்காமல் தொடர வழி வகுக்கும். இவைகளை உணர்ந்து திருத்தி கொள்ளவும், தவறுக்காக மனம் வருந்தி ஒப்புரவாகும்போது மட்டுமே துன்பங்கள் நீங்குவுதற்கான சூழ்நிலை உருவாகும்.

ஒருவேளை நம்மிடம் போதிய அளவு தாழ்மை இல்லாமலிருக்கலாம். நம்மிடம் போதியளவு சகிப்புத்தன்மையும், விட்டு கொடுக்கும் பண்பும் இல்லாமலிருக்கலாம். ஆகவே நம்மை பக்குவப்படுத்தி தேவனுக்கு உகந்த பாத்திரமாக மாற்ற தேவன் துன்பங்களை உபயோகிக்க கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் யோபுவை போல ‘அவர் என்னை சோதித்த பின் சுத்த பொன்னாக விளங்குவேன்’ என்று நாமும் நம்பிக்கையோடு பேச பழகி கொள்வோம்.

அன்பானவர்களே, நீங்கள் தேவனுடைய ஆளுகைக்கு உட்பட்டு அவருடைய வழியில் நடக்கும்போது நம் துன்பங்களை தேவன் தம்முடைய நாமம் மகிமைப்படும் விதமாக பய்னபடுத்துவார் என்பது உண்மை. ஒருவேளை நீங்களும் ‘எதுவரைக்கும் இந்த துன்பங்கள்’ என்று கேட்பீர்களானால், ‘அவருக்கு உகந்தவர்களாகவும், அவரது திட்டத்திற்கு ஏற்றவர்களாகவும் மாறும்வரை என்பதே தேவ சமுகத்தின் பதிலாக இருக்கும். ஆமென் அல்லேலூயா!

ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் எங்களுக்கு வரும் துன்பங்கள், நோய்கள் எதுவரைக்கும் என்று தவித்து இருந்தாலும், நிச்சயமாகவே முடிவு உண்டு என்று எங்களை ஆறுதல் படுத்துகிற உமது வார்த்தைகளுக்காக உமக்கு ஸ்தோத்திரம். இரவு என்று ஒன்று உண்டென்றால், அது முடிந்த பிறகு பகல் நிச்சயம் வரப்போவதற்காக நன்றி. எங்கள் துன்பங்களில் நாங்கள் சோர்ந்து போகாமல் உம்மையே சார்ந்து ஜீவிக்க எங்களுக்கு உதவி செய்யும். நிச்சயமாகவே எங்கள் துன்பங்களுக்கு பதிலாக நன்மைகளை செய்யப்போகிற கிருபைக்காக ஸ்தோத்திரம். உம்மையே நாங்கள் நம்பியிருக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


சகோதரி. க்ளாடிஸ் ஹெஸ்லிட்
gladyshazlitt@gmail.com


Share this page with friends