தேவன் உண்டு என்பதை எப்படி நிரூபிப்பது?

Share this page with friends

கடவுள் இல்லை! எதையும் ஆழமாக கற்று தெரிந்தால் தெய்வம் ஒன்றும் இல்லை என்றே சொல்வார்கள், இதை வேதம் படித்தவர்களே சொல்வார்கள் என்று வேதத்தை வாசித்து கொண்டே விரக்தியாக வாழ்பவர்கள் பெருகி கொண்டு இருக்கும் இந்த காலத்தில் தேவன் உண்டு என்பதை எப்படி நிரூபிப்பது?

தேவன் இல்லை என்று சொல்வதே தேவன் உண்டு என்கிற சிந்தனை இருப்பதால் தான் அந்த எதிர் சிந்தனையே தேவைப்படுகிறது. எனவே தேவன் உண்டு என்கிற கருத்தை வாதத்தின் பெயரில் கூட ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும்.

அப்படி என்றால் இந்த உலகில் எத்தனையோ பேர் ஈவு இரக்கம் இல்லாமல் அழிந்து போகும் போது அவர்களை காப்பாற்றாமல், அதுவும் பாவம் செய்ய தூண்டின சாத்தானை தோட்டத்தை விட்டு துரத்தாமல், அவர்களை மன்னிக்காமல் சபித்து வெளியே துரத்துவது தான் தேவ செயலா? அப்படி செய்யாமல் இருந்து இருந்தால் இன்று இந்த நிலை வந்து இருக்குமா? நாம் நமது பிள்ளைகள் கூட தவறு செய்தால் மன்னித்து விடுகிறோம் தானே! அப்படி என்றால் தேவன் மன்னிக்க கூடாதா?

என்று கேள்வி கேட்கும் நபர்கள் கவனிக்கவும்!

A. தேவன் அன்புள்ளவர் அதே நேரத்தில் நீதி உள்ளவர். அவர் பரிசுத்தர். அறம், தவம் ஒழுக்கம் அவரிடம் நிரம்பி இருக்கிறது. அவரது இரக்கம், தயவு எல்லாம் இந்த பரிசுத்தம் மற்றும் அரம் சார்ந்த நீதிக்குள் தான் கட்டு பட்டு இருக்கிறது.

அந்த அன்பை, அந்த கிருபையை, அந்த இரக்கத்தை பெற வேண்டுமெனில் தண்டனை என்கிற கொடிய அனுபவம் வேண்டும் அன்றோ! தண்டனை இல்லாமல், நான் செய்த தவறுக்கு ஒரு தண்டனையும் இன்றி இரக்கம் அல்லது கிருபை கிடைத்தால் அதினால் கிடைப்பது நிர்விசாரம்! தேவன் பரிசுத்தில் சமரசம் செய்து நம்மை நிர்விசாரிகளாக மாற்ற விரும்பவில்லை! அதினால் தான் தான் கோபத்தை வெளிப்படுத்தி துரத்தி விடப்பட்ட ஆதாமுக்கு தன் அன்பினால் தோல் ஆடையை உடுத்தி கொடுத்தார். பிள்ளைகள் தவறு செய்யும் போது கோபம் கொள்ளாமல் எப்போதும் மன்னித்து கொண்டே ஒரு தகப்பன் இருந்தால் அவன் தகப்பன் என்று எப்படி சொல்ல முடியும். தண்டனை இல்லாத அன்பு ஒருபோதும் ஒழுக்கத்தை பிறப்பிகாது. ஒரு முறை நான் வீட்டில் தவறு செய்து பிடி பட்ட பொழுது ரப்பர் வாரினால் என் தகப்பன் கையினால் சரியான தாங்க முடியாத அடி வாங்கினேன்! அடியின் முடிவில் என் உடம்பு முழுவதும் காயங்கள்! என் அம்மா ஒரு புறம் அழுகை! இதை கண்ட என் தகப்பனார் காயதிருமேனி எண்ணெய் போட்டு கண் கலங்கிய நிலையில் நீ தப்பு செய்ய கூடாது என்று தான் இந்த தண்டனை என்று சொல்லி என் காயம் முழுவதும் எண்ணெய் போட்டு கொடுத்ததை எளிதில் மறந்து விட முடியாது. அதன் பின்னர் அந்த தப்பை நான் செய்யவே இல்லை. ஒரு உலக தகப்பனே நம்மை நீதி படுத்த, பரிசுத்த படுத்த இவைகளை செய்ய கூடும் என்றால், சர்வ வல்லமை யுள்ள தேவன் எப்படி பட்ட பரிசுத்தர், நீதிபரர் என்பதை இந்த நிர்பந்தமான மனிதன் எப்படி அறிய முடியும். அவரை நமக்கு இணையாக பார்க்கும் போது தான் பாவமே வருகிறது. *அவர் நம்மை விட உயர்ந்தவர், சர்வ வல்லமை உள்ளவர். அவரது ஸ்தானத்தில் இருந்து அவரை அறிய முயற்ச்சி எடுக்க வேண்டும். ஆனாலும் தேவன் நம்மை அவரது இந்த அரம் நீதி ஒழுக்கம் பரிசுத்தம் சார்ந்த ஆவி ஆத்துமா, சரீர சாயலாகவே ஆணும் பெண்ணும் ஆக சிருஷ்டித்தார். *நாம் உலகில் செய்வது எல்லாம் செய்வோம்! தண்டனை கொடுக்க கூடாது என்று சொன்னால் இது எப்படி சரியாகும்?* இந்த பரிசுத்த சர்வ வல்லமை உள்ள தேவனுக்கு முன்பாக நிற்க தக்கவன் யார்? எல்லாரும் அவரவர் வழியில் எல்லாம் சரி என்று அல்லவா ஓடி கொண்டு இருப்பார்கள்! எனவே இந்த அன்புள்ள தெய்வத்தை முதலில் அவரின் வல்லமை அறிந்து, அவரின் நீதி அறிந்து, அவரின் பரிசுத்தம் அறிந்து அவரை தேடினால் அவரை கண்டு கொள்ள முடியும். ஏனெனில் தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்கிறான் என்று Bible நமக்கு சொல்கிறது.

B. தேவன் பரிசுத்த உள்ளவர் தான் ஆனால் அதே நேரத்தில் பரிகாரம் செய்கிறவர். அவரை அண்டிகொள்பவர்கள் பாக்கியவான்கள்.

பாவத்தினால் தண்டனை வருகிறது. அவரை அண்டி கொண்டால் நாம் தப்புவிக்க படுவோம். மனிதன் தனக்கு தண்டனை வரகூடாது என்று என்னவெல்லாம் செய்து கொண்டு இருக்கிறான். தனது மத கற்பனையின் படியும், தனது எண்ணத்தின் படியும் பரிகாரம் தேடுகிறான். ஆனால் கர்த்தர் ஏற்படுத்தின அவரது பரிகாரத்தை தேடாமல் விட்டு விடுகிறான். ஒரு மனிதன் மூலம் பாவம் உலகில் வந்தது. அதே மனிதசாயல் கொண்டு தான் அதற்கு பரிகாரம் வர வேண்டும். உலகில் தீமைகள் அனுபவிப்பவர்கள், தீமையான மரணங்களை சந்திக்கிறவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று நாம் எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும். நன்மை செய்வார் ஒருவரும் பூமியில் இல்லை என்று வேதம் நமக்கு சொல்கிறது. எல்லாரும் சிந்தையிலும், எண்ணத்திலும் பாவம் செய்து கர்த்தரை தூசித்து அந்த மகிமையுள்ள தேவ சாயலை இழந்து இருக்கிறோம். அப்படியென்றால் அது பரிகரிக்கப் பட வேண்டும். அதினால் தான் பழைய ஏற்பாட்டில் பலிகளின் இரத்தத்தால், மனிதனுக்கு இரக்கம், நீதி, தயவு வர அவன் கண்களுக்கு முன்பே ஆடுகள், காளைகள், பறவைகள் பலியிட பட்டது ஆனாலும் மனிதன் அவைகளை advantage ஆக எடுத்து கொண்டான். அவைகளை தனக்கு சாதகமாக மாற்றி தவறுகளை தொடர்ந்து செய்தான். அந்த நிலை மாறவே அதே வேத வசனங்கள் படி, தேவன் நம்மில் அன்பு கூர்ந்ததினால் தாமே மனிதனாக அவதரித்து நன்மை செய்கிறவராக சுற்றி திரிந்து, பாவமற்றவராக அற்புத அடையாளங்கள் மூலம் தன்னை நீருபித்து, அதே பாவத்தை பாவ வழிகளில் அடி, தடி, அழி என்று அழிக்காமல் தாமே அதை ஏற்று கொண்டு, சகித்து பொறுத்து, தமது வலிமையை அடக்கி, தனது இரத்தம் சிந்தி நமது பாவத்திற்கு பரிகாரமாக சிலுவையில் மரித்தார். இந்த பாவமாற்ற கிறிஸ்துவின் மரணம் நமக்கு அன்பு, இரக்கம், தயவு, நீதியை கற்று கொடுக்கிறது. அதை புரிந்து கொண்டு அவரை அண்டி கொள்கிறவர்கள் பாக்கியவான்கள். இந்த இயேசு கிறிஸ்துவின் பரிகாரத்தை ஏற்று கொள்ளாமல் இருந்தால் நாம் எப்படி இரக்கம் பெற முடியும். இந்த இரக்கம் இந்த உலகத்தில் பெறுவதும் அன்றி நமக்கு நித்திய ஜீவனை பெற்று தருகிறது. பாடுகளை இது சகிக்க அழைக்கிறது, நிந்தனைகள், பரியாசங்கள், அவமானங்கள், தீமைகளை சகித்து பொறுத்து அன்பு காட்ட, மன்னிப்பு கொடுக்க, மற்றும் நீதி செய்ய கற்று கொடுக்கிறது. அதுவே பாவத்திற்கு பரிகாரம். அவரே வழியும் சத்தியமும் ஜீவனும் ஆக இருக்கிறார். இந்த பாதையை எல்லாரும் ஏற்று கொள்ள வேண்டும் அதுதான் தேவ திட்டம். ஆனால் நாம் என்ன நினைக்கிறோம் இயேசு கிறிஸ்து பட்டயத்தால், தனது வல்லமையால் தனக்கு தீமை செய்த எல்லாரையும் துவம்சம் செய்து இருக்க வேண்டும் என்கிற தீமையான எண்ணம் தான் கொண்டு இருக்கிறோம். தேவன் அப்படி செய்தால் மீட்பு இல்லையே! எல்லாரும் அடி தடி கொலை என்று இன்றும் போய் கொண்டு இருப்போமே! எனவே கிறிஸ்துவின் பரிகாரம் தான் உலகிற்கு வெளிச்சம். அவர் மகிமை உள்ள தேவனாக இருந்தும் தம்மை தாமே வெறுமை ஆக்கி மனுஷ சாயலாக மாறி நம்மை மீட்க தனது இரத்தம் சிந்தி மூன்றாவது நாளில் உயிரோடு எழுந்தார். இதுவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் வரும் பரிகாரம். இவர் நமது பெலவீனங்களில் தீமைகளில் பரிதபிப்பவர் அல்ல மாறாக நமக்கு உதவி செய்கிறவர். அவரிடம் தைரியமாக வாருங்கள். பரிகாரம் நிச்சயம் உண்டு ஏனெனில் அவர் நாம் போகிற இந்த வழிகளில் ஏற்கனவே போய்விட்டார். வெற்றியும் சிறந்தார். பகையை பகையினால் வெல்லாமல் அன்பினால் வென்றார். தீமையை நன்மையாக மாற்றினார்.

C. தேவன் நீதிபரர், பரிசுத்தர், பரிகாரம் செய்பவர், அண்புள்ளவர், இரக்கம் உள்ளவர் தான் ஆனாலும் அவரை விசுவாசிக்கிறவன் அல்லது அவரை நம்புகிறவன் தான் பாக்கியவான்.

நம்பிக்கை விசுவாசம் தான் வாழ்வில் விசேஷமான ஒன்று. நாம் நமது பிள்ளைகளிடம் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை எதிர்பார்க்கிறோம். எப்படி? நாமே அவர்களுக்கு எது சரி எது தவறு என்று அறிந்து அவர்களை பராமரித்து, போசித்து, காப்பாற்றி, புத்திமதி சொல்லி நடத்துகிறோம் ஏனெனில் நமக்குள் இருக்கும் பிள்ளை என்கிற உணர்வு தான் அதை செய்கின்றது. அதே நேரத்தில் பிள்ளைகளுக்கு எப்படி அதை நீறுபிக்க முடியும்? அவர்கள் அறிவு வரும் போது அதை புரிந்து கொள்வார்கள்! நீ எனக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை என்று சொல்லி வேறு வழிகளில் நடந்து தங்கள் காரியங்களை செய்தால் அது நம்மால் ஏற்று கொள்ள கூடுமா? அதே போல தான் தேவ வழிகளில் தேவனை அறிய நாம் தவறும் போது அவரை தேட, அவரை நம்ப, அவரை விசுவாசிக்க, பல வழிகளில் நமது கவனத்தை பெற இன்றும் அவர் இவிதமான செயல்களை செய்து கொண்டு தான் இருக்கிறார். இப்படி தான் அன்பு, இரக்கம், பரிசுத்தம், மன்னிப்பு, நீதி இவைகள் எல்லாம் நாம் வளர வளர தேவனை தேவனாக அறிய அறிய அல்லது அப்படி அறிந்தவர்களாக இருக்கும் போது தான் வருகிறது. அப்படி பட்டவர்களால் அறிந்து உலகிற்கு சொல்லபட்டவைகள் தான் இந்த அன்பு etc. ஆனாலும் நான் பெரியவன், நான் தான் இந்த உலகில் பெரியவன் என்று இன்றும் அகங்காரம் கொண்டு நான் இந்த உலகில் நீண்ட நாள் வாழ்வேன், இந்த உலகம் தான் எனக்கு எல்லாம், மரணம் எனக்கு வாராது என்று நித்திய ஜீவனை குறித்து எண்ணாமல் நமது போக்கில் போய் கொண்டு இருந்தால் யாருக்கு தான் கேடு! நமக்கு தான்! நான் அவரை நம்ப மாட்டேன் ஆனால் அவர் எனக்கு உதவ வேண்டும் என்று விதண்டாவாதம் பேசி, அவரை அற்பமான எண்ணத்தில் பேசி ஆனால் அவர் தீடீரென்று தோன்றி எங்களை காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால் இயேசு கிறிஸ்து வித்தை காட்டும் ஒரு மாயவித்தை காரர் அல்ல! மாறாக அவரை விசுவாசித்து, அவரில் அன்பு கூருகிறவர்களுக்கு அவர் இன்னும் இரச்சகராக தான் இருக்கிறார். நீங்கள் விசுவாசித்து பாருங்கள் தேவ மகிமையை காண்பீர்கள்.

D. அவர் சர்வவல்லமை உள்ளவர், அன்புள்ளவர் அவரிடத்தில் சகல ஞானம் அறிவு இருக்கிறது, சகலமும் அவருக்கென்று அவருக்காகவே உருவாக்க பட்டு உள்ளது ஆனாலும் அதை அறிவதும் அறியாததும் அவரவர் கையில் தான் இருக்கிறது. அவர் யாரையும் நிர்பந்தம் செய்கிறவர் அல்ல! அவர் கண்ணியமான தேவன். இருதய கதவை தட்டுகிறவர், அதை திறந்தால் உள்ளே வருவார். அப்படி வந்தால் அந்த சுதந்திர சந்தோசத்தை அனுபவிக்க முடியும்.

அன்று எதேன் தோட்டத்தில் எல்லாவற்றையும் உருவாக்கி வைத்து விட்டு, ஆதாமுக்கு கட்டளையும் கொடுத்து தீர்மானம் எடுக்க வேண்டிய காரியத்தை அவனிடமே விட்டு விட்டார். அவர் யாரையும் நிர்பந்திக்க மாட்டார். நன்மை இது, தீமை இது என்று சொல்லி இருக்கிறார். வேத வசனத்தை எழுத்து மூலம் தந்து இருக்கிறார். அவரை அறிந்து கொண்டவர்கள் மூலம் சொல்லி கொண்டு தான் இருக்கிறார். சில வேளைகளில் இப்படி சில தண்டனைகள் மூலம் மனித சிந்தைகளை தம் பக்கம் திருப்ப பார்க்கிறார். நாம் ஒன்றும் இல்லை, இரக்கம், அன்பு, பரிதவிப்பு, போன்ற சூழல்கள் கொண்டு மனிதன் நிலையற்ற தன்மையை கொண்டு உள்ளான் என்பதை உணர வைக்கிறார். அப்படி என்றால் கிறிஸ்தவர்களும் மரித்து போனார்கலே! Yes அவர்களின் மரணமும் மரணம் தான்! ஆனால் அவர்கள் தாங்கள் வைத்த நல்ல விசுவாசத்தின் பலனை அதாவது நித்திய ஜீவனை அடைந்து கிறிஸ்துவின் சாயலில் அவரோடு என்றும் வாழும் ஒரு வாழ்வை நோக்கி நகர்ந்து இருக்கிறார்கள். மரணம் அவர்களுக்கு ஜீவன். ஏனெனில் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்கிற நம்பிக்கையே இங்கு பெரியது. காலங்கள் அவர் கரத்தில் இருக்கிறது. ஆனால் நாம் அவர்களை விட மேலானவர்கள் அல்லவே! எனவே நம்மை நாமே நிதானித்து, அறிவு, ஞானம் பெற வேண்டியது நம்மை சார்ந்தது. தீர்மானம் எடுக்க வேண்டியது நாம் தான். ஒரு கடைக்கு சென்றால் எது நல்லது என்று நிதானித்து கொள்ள தெரிந்த நமக்கு இதை நிதானித்து கொள்ள முடியவில்லை எனில் நம்மை போல பரிதவிக்க பட்டவர்கள் எவரும் இருக்க முடியாது. இதுவே கடைசி காலம், சத்தியத்தை அறியுங்கள் அது நிச்சயம் நம்மை விடுதலை அடைய பண்ணும். இருளில் இருந்து வெளிச்சம் நோக்கி பிரயாணம் செய்வது உங்கள் கையில் ஏனெனில் ticket எடுக்காமல் யாரும் பிரயாணம் செய்ய முடியாதே!

கர்த்தர் நமக்கு கிருபை தருவாராக! நாம் இன்று காக்க பட்டு உள்ளோம் என்றால் இது அவரது கிருபையே! அந்த கிருபையின் எண்ணத்தை நம்மை சார்ந்த உறவுகள், நண்பர்கள் மற்றும் மனிதற்களுக்கு தேவன் கொடுத்ததினால் தான் நாம் இன்றும் உயிரோடு இருக்கிறோம்,அந்த கிருபையின் தூண்டுதல் தான் தெய்வீக தூண்டுதல் அது தான் மனிதனை இன்னும் வாழ வைக்கிறது. ஏனெனில் நாம் வாழும் காலம் ஒரு கிருபையின் காலம். அந்த பரிசுத்த தூண்டுதலின் கிருபை கூட மாற போகிற ஒரு நிலை வருவதற்கு முன்பே கர்த்தரை சந்திக்க ஆயத்தம் ஆவோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார்.

செலின்


Share this page with friends