ஐயா..அம்மா..நான்தான் எலிமா! (தொடர்ச்சி) வித்யா’வின் பார்வை

Share this page with friends

எலிமாவை பவுல் கடிந்துகொள்ளுதல்

மாயவித்தைக்காரனின்
சூழ்ச்சியைப் பாருங்கள்

(அப்போஸ்தலர் 13:1-12)

அதிபதியை விசுவாசத்தினின்று
திருப்பும்படி வகைதேடுகிறான்

பட்டணத்தில் மிக முக்கியமான ஒருவன்
மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொள்ள,
ஒரு தந்திரசாலி தடையாய் இருக்கிறான்.
எலிமா என்றால் எல்லா அறிவும்
படைத்தவன்
என்று பொருள் 

இன்றைக்கு, எல்லாம் எனக்கு தெரியும்,
என்று கூறிக்கொண்டு
வேதத்துக்கு விரோதமாக
பேசிக் கொண்டிருப்பவர்கள் உண்டு

தேவ வசனத்தைக் கேட்க,
ஆவலாய் இருக்கிறவர்களை
வஞ்சிக்கும்படி, பிசாசு வகை தேடி
சுற்றித் திரிகிறான்.

இந்த விஷயத்தில்,
தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும்
வஞ்சிக்கும்படி, விசுவாசத்தினின்று
திரும்பும்படி வகை தேடிக்கொண்டிருக்கிறான்

இருப்பதோ கடுகளவு விசுவாசம்
ஆனால், அதை பெரிதாக நினைத்து
திருப்ப (திருட) பிசாசு முயற்சிக்கிறான்
(யோவான் 10:10)

“கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது “
அதை எடுத்துவிட்டால் அவனது காரியம்
சுலபமாகிவிடும் என்பதால்,
அதற்காக வகைதேடி சுற்றித் திரிகிறான்.  

பெரிய கப்பலுக்கு அதிமுக்கியமான சுக்கான்
போலத்தான் விசுவாசம்.
சிறியதுதான் ஆனால் அரியது.
விசுவாசத்தை இழந்துவிடாதே.
வந்த விலைக்கோ,
எந்த விலைக்கோ விற்றுவிடாதே

அதிபதியை விசுவாசத்தினின்று
திருப்பும்படி வகைத் தேடினவனின்  
கண்களில் பவுலும் பர்னபாவும்
தட்டுப்பட்டுவிட்டார்கள்.
அவர்களைக் கண்ட
எலிமாவின் கண்கள் சிவந்தன. அவனது
முகரூபம் லாபானைப் போல மாறியது.
முறைத்துப் பார்த்து .
அவர்களை எதிர்த்து நின்றான்

உண்மையான ஊழியர்களை
முறைத்துப் பார்க்கிறவர்கள்
இதைக் கவனித்துப் பார்க்க
வேண்டுகிறேன்

வித்தைக்காரனின் வீழ்ச்சி!

பர்னபா தனது பெயருக்கேற்ப
ஆறுதலின் மகனாக
தனக்கே உரிய பாணியில்
எலிமாவைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனால் பவுலின்பார்வை
வித்தியாசமானது. 
அவர் ஆவியில் நிறைந்து
வைராக்கியத்தினால் எழும்பி
எலிமாவை உற்றுப்பார்த்தார்.


பவுல் பரிசுத்தாவியில் நிறைந்து
அந்நிய பாஷையில்
பேசவில்லை. 

எலிமாவுக்குத் தெரிந்த
எளிமையான பாஷையில்
அதேவேளையில் வலிமையான
வார்த்தைகளைப் பேசினார்.

எல்லாக் கபடமும்,
எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே,
பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே,
கர்த்தருடைய செம்மையான வழிகளை
புரட்டுவதில் ஓயமாட்டாயோ?
இதோ, இப்பொழுதே கர்த்தருடைய கை
உன்மேல் வந்திருக்கிறது,
சிலகாலம் சூரியனைக் காணாமல்
நீ குருடனாய் இருப்பாய்
என்றான்.

Elymas | British Museum

அவன்மேல் வந்த கர்த்தருடைய கை
எதைக் கொண்டுவந்தது?

மந்தாரத்தையும் இருளையும்
கொண்டுவந்து கொடுத்தது.
பக்குவமாய் தலையை விட்டுவிட்டு
பார்வையை மட்டும் பறித்துவிட்டது!

பவுலுக்குள்ளே பரிசுத்தாவியானவரின்
புதிய ஒரு நிறைவு உண்டாயிற்று.  

எலிமா போன்ற ஆட்களைச்
சந்திக்கும்போதெல்லாம்

செலவழிந்துபோகும் உன்னத பெலனை
ஆவியில் நிறைந்து, அவ்வப்போது
புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 

எலிமாவை விடுங்கள்
உள்ளூர் பிசாசையும்
வெளியூர் பிசாசையும்

எதிர்க்க வேண்டுமே
அதற்காக
ஆவியில் நிரம்ப வேண்டுமே

அன்றொரு நாளில்
தேவாலயத்திற்குள்ளே
நுழைந்தபோது,
பேதுருவும் யோவானும்
அந்த அலங்காரவாசலில் இருந்த
பிறவிச் சப்பாணியை உற்றுப் பார்த்து
அவனுக்கு, இயேசுவின் நாமத்தில்
அற்புத விடுதலையை பெற்றுத்தந்தது வேறு.

ஆனால் இங்கே பவுல் உற்றுப்பார்த்ததால்
உள்ள பார்வையும் பறிபோனது.  
இது வேற விஷயம். 

எலிசா சபித்த போது
விரைந்தோடிவந்து
ஊழியம் செய்த கரடிகளைப்
போல!
(1 இராஜாக்கள் 2:24)

பரிசுத்தாவியில் நிறைந்த பவுலுக்கு,  
மந்தாரமும் இருளும்  கீழ்ப்படிந்து
உடனே எலிமா மேல் விழுந்தது.


எதிரிட்டு வந்த எலிமா,
பார்வையை இழந்து
தடுமாறி, கைலாகு
கொடுப்பவனைத் தேடினான்.

அதிபதியை
தடம்புரள வைக்க நினைத்தவன்
இப்போது ஐயா அம்மா நான்தான் எலிமா
கொஞ்சம் எனக்கு வழிகாட்டுங்களேன் என்றான்.

இப்போது அவனது மாய வித்தைகள்,
கண்கட்டி வித்தைகள்

அவன் கண்களைத் திறக்க முடியவில்லை.

அதிபதி சம்பவித்ததைக் கண்டு
கர்த்தருடைய உபதேசத்தைக் குறித்து
அதிசயப்பட்டு விசுவாசித்தான்


எலிமாவின் உதவியால்
பவுலின் ஊழியம் சுலபமாகிவிட்டது

பாப்போ பட்டணத்து மக்கள்
என்னதான் நடக்கிறது
பாப்போ(ம்) என்று ஓடி வந்தார்கள்.  

கபோதியாக்கப்பட்ட எலிமாவைப் பார்த்து
பிரமித்து நின்றார்கள்.
அந்தப் பட்டணத்தில் மாபெரும்
விழிப்புணர்வை ஏற்படுத்த, எலிமா
தன்னையே தாரைவார்த்துப் போட்டான்.

எலிமாவுக்கு ஏற்பட்ட
விபரீதத்தைக் கண்ட அதிபதி
ஆத்திரப்படவுமில்லை
ஆதங்கப்படவுமில்லை.
மாறாக, கர்த்தருடைய
உபதேசத்தைக் குறித்து
அதிசயப்பட்டு கர்த்தரை விசுவாசிதான். 

படிப்பாளியான பவுலைப் பிடிக்க ஒரு வழி 
அதிபதியான செர்கியு பவுலைப் பிடிக்க இன்னொரு வழி
இதுதான் இயேசுவின் தனி வழி

அதிபதியின் ஆசை நிறைவேறிவிட்டது
அதிமிதி பண்ணியவனின் ஆசை
நிராசையாய் மாறிவிட்டது.

அற்புத விடுதலை நற்செய்திக் கூட்டத்தை
முடித்துவிட்டு,
ஓரத்தில் நின்று எல்லாவற்றையும் 
உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த  
யோவானையும் கூட்டிக்கொண்டு,
கப்பலேறி பம்பிலியாவுக்கும் பெர்க்கே
பட்டணத்திற்கும் போய்விட்டார்கள்

இன்றைக்கும் எலிமாக்கள்
சந்திக்கப்பட்டால்

அதிபதிகள் கர்த்தருடைய உபதேசத்தைக்
குறித்து அதிசயப்பட்டு
விசுவாசிப்பார்கள்
என்பதில் சந்தேகமில்லை.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்,

ஐயர் பங்களா, மதுரை -14


     


Share this page with friends