அவனுக்கு சக்தியில்லாதிருந்தால்

Share this page with friends

லேவியராகமம் 5: 7, 11.

தான் செய்த பாவத்திற்கு பாவ நிவாரணபலியும், சர்வாங்க தகனபலியும் செலுத்த ஒருவனுக்கு ஆட்டை வாங்க சக்தியில்லாவிட்டால், அதாவது அவன் ஏழையாயிருந்தால் 2 காட்டு புறாக்களையாவது, 2 புறா குஞ்சுகளையாவது கொண்டுவரலாம். இதற்கும் சக்தியில்லாவிடில் ஒரு எப்பா அளவான மாவில் பத்தில் ஒரு பங்கை காணிக்கையாக கொண்டு வரக்கடவன் என கர்த்தர் கட்டளையிட்டார்.

 1. ஆம், அப்படியானால் சர்வ வல்லமையுள்ள நம் தேவன் ஏழைகளை, சக்தியில்லாதவர்களை, பணபெலன் இல்லாதவர்களை, திக்கற்றவர்களை, சமுதாயத்தால் குடும்பத்தால் மறக்கப்பட்டவர்களை, புறக்கணிக்கப்பட்டவர்களை மறந்து விட வில்லை. அவர்களுடைய பாவங்களும் நிவிர்த்தி ஆகும் படி ஒரு இலகுவான வழியை உண்டுபண்ணினார். ஆனால் இன்று நாம் ஏழைகளை மறந்து விடுகிறோமா? நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறஸ்துவும் நமக்காக ஏழை கோலம் எடுத்தார் என்பதை நினைவுகூருவோம். நம் தேவன் ஏழைகளை நேசிக்கிறவர். நம் குடும்பங்களில், சபைகளில் ஏழைகளை புறக்கணியாதபடி எச்சரிக்கையாக இருப்போம்.
 2. ஒரு நாள் இயேசு ஜெப ஆலயத்தில் காணிக்கை பெட்டி அருகில் உட்கார்ந்து காணிக்கை போடுவதை பார்த்து கொண்டிருந்தார். அநேக ஐசுவரியவான்கள் அதிகமாய் போட்டார்கள். ஆனால் ஒரு ஏழை விதவை ஒரு துட்டுக்கு சரியான 2 காசை போடுகிறாள். ஆனால் இயேசுவோ காணிக்கை போட்ட எல்லாரை விடவும் இந்த ஸ்தீரி அதிகமாய் போட்டாள என்றார். மாற்கு 12: 41 – 44. ஆம், நம் தேவன் ஏழைகளின், விதவைகளின், திக்கற்றவர்களின் தேவன் என்பதை மறந்து போக வேண்டாம்.
 3. கர்த்தர் ஏழைகளின் விண்ணப்பத்தை கேட்கிறவர். சங்கீதம் 69: 33.
  ஏழைகள் கூப்பிடும் போது ( ஜெபிக்கும் போது) அவர்களை விடுவிப்பவர், விசாரிப்பவர், இரட்சிப்பவர். சங்கீதம் 72: 12, 13.
  ஏழைகளுக்கு பெலனானவர், திடனானவர், அடைக்கலமும், நிழலுமானவர். ஏசாயா 25: 4. மட்டுமல்ல,
  எழியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறவர். சங்கீதம் 113: 7
 4. ஆம், இன்று நாம் ஏழையாய், வசதி குறைவோடு, தேவைகளோடு காணப்படுகிறோமா? நம் தேவன் நம் மேல் நினைவாயிருக்கிறார். ஏற்ற காலத்தில் அவர் நம்மை உயர்த்த அவருடைய பலத்த கரத்தில் அடங்கியிருப்போம். நாம் ஆவிக்குரிய ஐசுவரியவான்களாய் மாற ஜெபிப்போம். யெகோவா யீரே நம் தேவைகளை சந்திப்பார். ஆசீர்வதிப்பார், உயர்த்துவார்..
 5. மட்டுமல்ல, இந்த சிறியவர்களுக்கு நீங்கள் எதை செய்கிறீர்களோ, அதை எனக்கே செய்கிறீர்கள் என இயேசு கூறினார். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்ப கொடுப்பார். நீதிமொழிகள் 19: 17.

ஆம், கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும், நம் பரம பிதாவை போல சக்தியில்லாதவர்களை மறவாது, நினைவுகூருவோம். உதவி செய்வோம். ஆமேன். அல்லேலூயா.

Dr. Padmini Selvyn.


Share this page with friends