கடவுள் இருப்பது உண்மையென்றால், ஒருவர் சிறுமியை கற்பழிக்கும் போது அதை ஏன் கடவுள் தடுத்து நிறுத்தவில்லை?

Share this page with friends

கடவுள் இருப்பது உண்மையென்றால், ஒருவர் சிறுமியை கற்பழிக்கும் போது அதை ஏன் கடவுள் தடுத்து நிறுத்தவில்லை? உடல் பெலவீனத்தோடே சாகக் கிடக்கிறார்கள் அவர்களை காப்பாற்ற வேண்டியது தானே? இன்னும் அநேக கேள்விகள் எழுகின்றன எப்படி பதில் சொல்வது விளக்கம் தாருங்கள்.

பதில் : கொள்ளை நோயினால் உலகமே பீடிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில் இப்படிப்பட்ட கேள்கிகள் ஆத்திகர்களுக்கே எழும்புவது இயல்பு.

எந்த துர்ச்செயலும், பாவக்காரியமும் இவ்வுலகில் நடக்கும் போது பிசாசினுடைய தொடர்பு உள்ளது என்பதில் சந்தேகமில்லை.

தீமைக்கான கொடூரமான எடுத்துக்காட்டுகள் நம் கவனத்திற்கு வரும்போது, கடவுள் ஏன் இத்தகைய தீமைகளை நடக்க அனுமதிக்கிறார் என்று மக்கள் மனதில் பொதுவாக கேள்வி எழும்புகிறது.

நாத்திகர்கள் கடவுளுக்கு எதிராக வாதிடுவதற்கு வெளிப்படையான தீமையின் இருப்பைப் பயன்படுத்துவார்கள். “கடவுள் மிகவும் நல்லவராக இருந்தால்,” உலகில் ஏன் தீமை இருக்கிறது? ” தீமை இருக்கிறதென்றால், கடவுள் என்று ஒருவர் இல்லை என்ற தீர்விற்கு முயலுவார்கள்.

தீமை இருக்கும் அதே உலகில் நீதியும் இருக்கிறது. நீதி இருப்பதால், தீமை இல்லை என்று நாம் முடிவு செய்ய வேண்டுமா?

தீமை ஏன் அனுமதிக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிடுவதற்கு முன்பு, தீமை எது என்பதை நாம் வரையறுக்க வேண்டும். சிறுமிகள் நாசமாக்கப்படுவது, கொள்ளை நோயினால் பிஞ்சு குழந்தைகளும் அப்பாவிகளும் உயிரை இழப்பதென்பது தீமைக்கு மோசமான ஒரு பிரதான எடுத்துக்காட்டு என்பதில் சந்தேகமில்லை.

தீமை எப்போதும் பாவத்தை உள்ளடக்கியது. பாவம் தீயதே. சட்டத்தை மீறுவதே பாவம் என்று யோவான் வரையறுக்கிறார் (1யோ. 3: 4).

எந்த ஒரு சட்டமும், எப்போது கடைபிடிக்கப்படாமல் உடைக்கப்படுகின்றதோ அப்பொழுது தீமை உருவெடுக்கிறது.

சில நாடுகளில் தீமையை அகற்றுவதாக நினைத்து சில சட்டத்தை அகற்றி எளிதாக்கினார்கள்.

எ.கா. : போதைப்பொருள் பயன்பாடு, திருமணத்திற்கு முன்பு உடலுறவு போன்றவையை கண்டுக்கொள்ளாமல் விடுவது போன்றவை.

இப்படிப்பட்ட காரியங்களை சட்டத்திலிருந்து எடுத்துவிட்டால், சமுதாயத்தில் பிரச்சினை என்பதே வெளிவராது என்று நாம் சொல்லமுடியுமா?

இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது. அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; … ரோமர் 5: 12-14.

“இது சட்டவிரோதமானது என்று எனக்குத் தெரியாது!” என்று ஒருவர் சொன்னால் சட்டம் நமக்கு இல்லை என்று அர்த்தமா? சட்டத்தை அறியாவிட்டாலும் ஒழுக்கத்தை கடைபிடிக்க நாம் கடனாளியாகிறோம்.

அப்படியானால், பாவம் எங்கிருந்து உருவாகிறது?
ஒரு முச்சந்தியில் நிற்கும் போது, எந்த திசையில் செல்லவேண்டும் என்று தேர்வு செய்ய வேண்டும். ஏதோ ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதால், ஏதோ ஒரு பாதையை தேர்வு செய்ய முடியாது.

தவறான தேர்வு செய்யும் மக்களிடமிருந்து பாவம் வருகிறது என்று யாக்கோபு 1: 12-18 விளக்குகிறது. பாவம் மனிதரிடமிருந்து வருகிறது, கடவுளிடமிருந்து அல்ல.

நம் அனைவருக்கும் பலவேறு ஆசைகள் உள்ளன. நம் விருப்பத்தையடைய கடவுளின் கட்டளையை மீறக்கூடாது. கடவுளிடமிருந்து நம்மை பிரிப்பதற்கு சாத்தான் இதை பயன்படுத்துகிறான். இப்பேற்பட்ட பொறியிலிருந்தும் வலையிலிருந்தும் அகப்படாமல் தேவனுடைய சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் போது சுய ஒழுங்கு மாத்திரமல்ல சமுதாயத்தையும் பேணுகிறோம்.

சாத்தான் நம்மை சோதிப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே பாவத்தில் சிக்கியுள்ள மனிதர்களும் நம்முடைய ஆசைகளைத் தூண்டி தங்கள் இலக்குகளைப் பெறப் முயற்சிப்பர். (2பேதுரு 2:18-19).

இந்த உலகில் சோதனையானது மிகவும் அதிகமாக உள்ளது, யாரும் பாவத்திலிருந்து விடுபடுவதில்லை (1கொரி. 10:12). ஆயினும், நிலைமை நம்பிக்கையற்றது அல்ல. கடவுளின் சட்டங்களை மீற நாம் ஆசைப்படும்போது கூட கடவுள் நம்மில் செயல்படும் நிலையிலேயே உள்ளார். (1கொரி. 10:13).

உலக மக்கள் அனைவரும் சட்டத்தால் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருக்கிறோம். எனவே, சட்டத்தை மீறும் போது எந்தவிதமான காரணமும் இல்லாமல் நன்மையானது நம்மை விட்டுச்செல்கிறது.

இவ்வுலகில் ஏன் தீமை தொடர்கிறது? மக்கள் விரும்புவதால் பாவம் இருக்கிறது (எரேமியா 5: 30-31).

தீமையின் இருப்பை கடவுள் பொறுக்கிறார். ஏனெனில் அது நீதிமான்களுக்கும் பொல்லாதவர்களுக்கும் இடையில் வேறுபாட்டை உருவாக்குகிறது (ரோமர் 7:13).

நாம் பாவம் செய்யும்போதும், நம் வாழ்வில் தீமையின் தாக்கத்தை காணும்போதும், கடவுள் நீதியுள்ளவர், நேர்த்தியானவர் என்பதை தயக்கமில்லாமல் கற்றுக்கொள்கிறோம்.

தீமை தலைவிரித்தாடும்போதும், கொள்ளைநோயாக ஜனங்களை மரணம் கவ்வும் போதும், கடவுள் இல்லை என்று வாதாடும் நாத்திகர்கள் கூட கடவுளின் இருக்கைகை கேள்வி எழுப்ப அவர்கள் உள்ளம் தூண்டப்படுவதைக் கவனிக்கவும்.

பாவத்தின் இருப்பு மற்றும் பாவத்தைச் செய்யத் தயாராக உள்ளவர்களின் இருப்பு ஆகியவை மனிதகுலத்திலிருந்து எவ்வளவு மோசமானவை என்பதைக் காட்டுகின்றன (பிரசங்கி 3: 16-18).

நாம் பாவத்திற்கு எதிராகப் போராடும்போது, முயற்சியால் பலப்படுகிறோம் (யாக்கோபு 1:12).

பாவத்தை அங்கீகரிக்க மறுப்பதால் இந்த உலகில் தீமை தொடர்ந்து நிலவுகிறது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும் (ரோமர் 2: 17-24).

கடையில் ஒரு பொருள் வாங்கியபின் அதற்கான தொகையை மறைத்து வீட்டிற்கு வந்தால் அது திருட்டு செயல் தானே. உங்கள் வருமானத்தில் சிலவற்றை காண்பிக்காமல் வரி விலக்கு பெற்றால் அது பொய் அல்லவா.

இவற்றை செய்யும் ஒருவர், தான் அவ்வளவு மோசமானவர் அல்ல என்று இருந்தால் எப்படி அவர்களை பாவத்திலிருந்து வெளியேற்ற முடியும்?

அப்பாவிகளைக் கொல்வது எப்போதுமே தவறானது. மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது. ஆதி. 9: 6

இஸ்ரவேலர் பரிசுத்தமானவர்கள் என்பதால் அல்ல கானானியர்களையும் எமோரியரையும் ஏனாக்கியரையும் அழித்து அந்த இடத்தை இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்தது. தேவன் கானானை ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியினருக்கும் வாக்குறுதி அளித்ததன் விளைவு அது. தேசங்களின் பாவங்களுக்காகவே அவை அழிக்கப்பட்டன.

உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்துகையில், நீ உன் இருதயத்திலே: என் நீதியினிமித்தம் இந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமே கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார். உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார். ஆகையால், உன் நீதியினிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரிக்கக் கொடார் என்பதை அறியக்கடவாய்; நீ வணங்காக் கழுத்துள்ள ஜனம். உபா. 9: 4-6.

தீமை, அழிவு என்பது பாவத்திற்கான தண்டனை, தேவைப்படும்போது கடவுள் எப்போதும் செய்த ஒன்று.

தேவச்சட்டம் மீறப்படும் போது, கடவுளை நினைவுக்கூறும்படியாக சம்பவங்கள் நடந்தேறுகிறது.

தேசத்துக்கு விரோதமாக தேசமும், குடும்பத்திற்கு விரேதமாக குடும்பமும், ஜனத்திற்கு விரோதமாக ஜனமும் இப்படி ஒருவரை ஒருவர் தாழ்த்தி, கிண்டல் அடித்து, அராஜகம் செய்து, அநீதியிழைத்து, மீறுதலுக்குட்பட்டு, அநியாயத்தை தட்டிக்கேட்காமல் அமைதியாக இருந்து, அவற்றையெல்லாம் ஆதரித்து, ஜனம் வெகுவாக கெட்டுப்போகும் போது, தேவன் அமைதியாக இருப்பாரோ?

ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். (மத். 24:4-14)

எடி ஜோயல் சில்ஸ்பி
கர்த்தருடைய வேலைக்காரன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் – உலக வேதாகம பள்ளி

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends