இணக்கம் இல்லையேல் சுணக்கம்! (வித்யா’வின் பார்வை)

இணக்கம் என்று ஒன்று இல்லாததால் பிணக்கம் என்று ஒன்று உண்டாகிவிடுகிறது. இதனால் வாழ்க்கையில் எல்லாத் தரப்பிலும் சுணக்கம் (மந்தம்) ஏற்பட்டுள்ளது. பவுல் இதைக் குறித்து எழுதிவைத்தது நினைவுக்கு வருகிறது.
மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு (2 தீமோத்தேயு 3:3-5)
இணங்காதவர்கள், இளங்கிளையைப் போல தழைத்தோங்கியிருக்கிற காலமிது. கடைசிக் காலத்திற்கு இவர்கள் அடையாளமாய் இருக்கிறார்கள்.
நண்பா கொஞ்சம் பண்பா நடந்துகொள்
விசுவாசியே விசுவாசப் பரீட்சைக்கு நின்றுவிடு
இந்தப் பரீட்சை ஆன்லைனில் நடக்காது!
ஆனால் விசுவாசத்திற்கு சோதனை
ஆன்லைனில் உண்டு!
என்பதை நினைவில் கொள்
பாவத்திற்கு இணங்கிவிடாதே
பரிசுத்தவான்களோடு இணக்கமாய் இருந்துவிடு
சுபாவ அன்பை இழந்து சாரமற்ற உப்பாக மாறிவிடாதே
பாவத்திற்கும் பன்றிகளுக்கும் பச்சைக்கொடி காட்டிவிடாதே
சீ என்று தள்ளிவிடவேண்டியதை
வா என்று அழைத்துவிடாதே
இயேசுவானவர் உபவாசத்தையும்
வனவாசத்தையும் முடித்த உடனே
சோதனைக்காரன் SPOT க்கு
அவன்பாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டான்
அவனது மூன்று முப்பரிமாண சோதனைகளையும்
வார்த்தையால் இயேசு ஜெயித்தார்.
இறுதிச் சுற்றில் அப்பாலே போ சாத்தானே
என்று கடிந்துகொண்டு அவனை மேற்கொண்டார்
பிசாசோடு அந்தக் குறிப்பிட்ட எப்பிசோடு
அந்த நிகழ்வோடு, அந்தக் கட்டுக்கதையோடு
இணக்கம் வேண்டாம்.
சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.
(1 தீமோத்தேயு 4:7)
(மேற்படியானுடைய) தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே (2 கொரிந்தியர் 2:11)