சர்ப்ரைஸ் கொடுக்க ஆசைப்பட்டு அந்தரத்தில் தொங்கிய கிறிஸ்துமஸ் தாத்தா!

By Jaya Chitra | Published: Wednesday, December 23, 2020, 12:35 [IST]
Thanks: OneIndia
நியூயார்க்: அமெரிக்காவில் வானில் பறந்த போது மின்கம்பத்தில் சிக்கிய கிறிஸ்துமஸ் தாத்தாவால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தாக்கத்தையும் மீறி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகெங்கும் களைக்கட்ட துவங்கியுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் கட்டுப்பாடுகளை மீறி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
வழக்கமாக கிறிஸ்துமஸ் திருவிழாவின் போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்குவர். அந்த வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சேக்ரமெண்டோ நகரில் சாகசக்கார சாண்டா ஒருவர் வித்தியாசமான முறையில் பரிசுக்கொடுக்கச் சென்று அந்தரத்தில் தொங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொதுவாக தேவதைகள் வானத்தில் இருந்து வருவார்கள் என குழந்தைகளுக்கு கதை சொல்லியிருப்போம். அதை மெய்பிக்க நினைத்த அந்த கிறிஸ்துமஸ் தாத்தா, பை நிறைய பரிசு பொருட்களுடன் பாராகிளைடிங் (Paragliding) மூலம் வானில் பறந்து வந்து குழந்தைகளுக்கு சர்ஸ்ப்ரைஸ் கொடுக்க நினைத்திருக்கிறார்.
ஆனால் அவரது ஆசை பாதியில் வழியிலேயே நிராசையாகிவிட்டது. ஒரு உயரமான மலை முகட்டில் இருந்து குதித்து, வானில் பறந்து வந்த கிறிஸ்துமஸ் தாத்தா, வழியில் இருந்த ஒரு மின்கம்பத்தில் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டார். மின்கம்பத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சாண்டாவை பார்த்த மக்கள் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், மின் இணைப்பை துண்டித்துவிட்டு, பெரிய ஏணிகளை பயன்படுத்தி தலைக்கீழாக தொங்கிக்கொண்டிருந்த சாண்டாவை மீட்டனர்.