துபாயில், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து சாண்டா ஓட்டம்

Share this page with friends

கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை முன்னிட்டு துபாய் பெஸ்டிவல் சிட்டி பகுதியில் நேற்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட ‘சாண்டா ஓட்டம்‘ நடந்தது.

துபாய் பெஸ்டிவல் சிட்டி பகுதியில் நடைபெற்ற சாண்டா ஓட்டத்தில் உற்சாகமாக கலந்துகொண்ட பொதுமக்களை படத்தில் காணலாம்

துபாய்:

துபாயில் ஆண்டுதோறும் பெஸ்டிவல் சிட்டி பகுதியில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உற்சாகமாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக ‘சாண்டா ஓட்டம்’ இருந்து வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையில் ‘சாண்டாகிளாஸ்’ என்ற பெயரில் அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா அணியும் சிவப்பு நிறத்திலான உடை மற்றும் தொப்பியை அணிந்து கொண்டு பொதுமக்கள் இந்த ஓட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நேற்று நடைபெற்ற சாண்டா ஓட்டத்தில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். இதில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தினர், சிறுவர், சிறுமிகள் மற்றும் வயதானவர்களும் கலந்து கொண்டனர். அனைவரும் சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளை கடைபிடித்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். குழந்தைகளை தாய்மார்கள் ‘ஸ்டிரோலர்’ எனப்படும் தள்ளுவண்டியில் அமர வைத்து கலந்து கொண்டனர். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கரங்களுடன் கூடிய அலங்கார வண்டிகள் பயன்படுத்தப்பட்டது. அரசுத்துறைகளின் அனுமதியுடன் நடைபெற்ற இந்த ஓட்டத்தில் பெரியவர்களுக்கு 5 கி.மீ. தொலைவும், சிறியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகபட்சமாக 2½ கி.மீ. தொலைவும், குறைந்தபட்சமாக 1 கி.மீ. தொலைவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற உடற்பயிற்சி நிகழ்ச்சியில் உற்சாகமாக அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில், அனைவரும் தங்களுக்குள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அனைவரும் அணிந்திருந்த உடை காரணமாக அந்த பகுதி முழுவதும் சிவப்பு நிறமாக காட்சியளித்தது.


Share this page with friends