இரட்சிக்கப்படாதவர்களை திருமணம் செய்வது சரியா? தவறா?

இன்றய கிறிஸ்தவர்களுக்கு நிறைய கேள்விகள், குழப்பங்கள் ஏற்படுவது சகஜம். அதுவும் திருமண காரியம் என்று வரும் போது நிறைய கேள்விகள் வரும்.
அதற்கான விடைகள் கிடைக்காமல் புலம்பிக் கொண்டிருக்கும் உங்களுக்காகவே இந்த கட்டுரையை தொகுத்து வழங்குகிறேன்.
அநேக நேரம் நாம் செய்வது சரியா? தவறா? என்று, நின்று நிதானிக்காமல் முடிவெடுத்து, செய்தபின் அதை சொதப்பிக் கொண்டு நிற்கும் போது தான் நாம் செய்த தவறையே உணர்கிறோம்.
காரணம், எல்லா மனிதர்களுக்குள்ளும் பொதுவாகவே, நான் சொல்வது தான் சரி என்கிற எண்ணம் ஆழமாக பதிந்திருக்கின்றது. ஆனால் தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், நம் மனதிற்கு சரியென்று தோன்றியதைச்செய்ய அழைக்கப்படவில்லை.
காரணம், “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” (நீதிமொழிகள் 16:2 ) என்று வேதம் கூறுகிறது.
எனவே நாம் எதை செய்தாலும் தேவ வார்த்தையின்படி‘ சரியா? தவறா?’ என நிதானித்துப் பார்த்து செய்வதே மிகவும் சிறந்தது.
இரட்சிக்கப்படாதவர்களை திருமணம் செய்வது சரியா? தவறா?
“அந்திய நுகத்திலே அவிசுவாசியோடு பிணைக்கப் படக்கூடாது” (2 கொரிந்தியர் 6:14) என வேதம் கூறுகிறது. ஆனால் சிலர் ‘நான் திருமணம் செய்துவிட்டு அவரை ஆண்டவருக்குள் நடத்துவேன் என்று கூறி திருமணம் செய்து கொள்கின்றனர்.
அப்படிப்பட்டவர்களிடம் வேதம் கேட்கும் கேள்வி, “ “நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?” (1 கொரிந்திர் 7:16).
சாலமோன் அந்நிய பெண்கள் மேல் ஆசைப்பட்டதினால் நீங்கள் அவர்களண்டைக்கும், அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாக தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தை சாயப்பண்ணுவார்கள் என்று எச்சரித்தும் கேளாமல் போனதினால் ஞானவானாகிய சாலமோன் தன் வயதான காலத்தில் அவனது புறஜாதி மனைவிகள் தேவனை விட்டு வழிவிலக செய்தனர் என்று 1 இராஜாக்கள் 11 ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.
இருளும் ஒளியும் ஒரே இடத்தில் இருக்க முடியாது (மாற்கு 10 : 8) இயேசு கிறிஸ்துவை தேவன் இல்லை என்று சொல்கிறவர்கள் எப்படி உன்னோடு ஆலயத்துக்கு வந்து ஒருமனதோடு தேவனை ஆராதிப்பார்கள்.
அவிசுவாசியோ பிணைக்கப்பட்டால் எப்படி ஒருமனம் வரும். சாத்தான் தான் அங்கு வாசம் செய்வான். ஆகவே இரட்சிக்கப்பட்டவர்களை திருமணம் செய்யும்போது தான் குடும்பத்தில் சந்தோஷம் சமாதானம் நிலைத்து நிற்கும்.
இரட்சிக்கப்படாத துணையை திருமணத்திற்கு பின் இரட்சிப்பிற்குள் நடத்துவேன் என்று சொல்கிறீர்களா? இதில் சவால் எல்லாம் வேண்டாம். இது தேவனின் ஆலோசனை கிடையாது, தேவனின் கட்டளை (1 இராஜாக்கள் 11) இதை பின்பற்றிதான் ஆக வேண்டும்.
அப்படி இல்லை என்றால் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்கிறாய் என்று சொல்லி, உங்களிடம் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களை, தேவனின் திட்டங்களை தேவன் உங்களிடமிருந்து எடுத்து மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார். (1 இராஜாக்கள் 11:11).
ஏசாயாவின் அதிகாரத்தில் அந்நிய தேவனை பின்பற்றுகிறவர்களை தேவன் சபிக்கிறார் என்று வாசிக்கிறோம். அப்படி நீங்கள் தேவனுடைய கட்டளைகளை மீறுவதினால் அநேக குடும்பங்கள் திருமணம் முடிந்த கொஞ்ச நாட்களிலேயே பிரிந்து விடுகின்றனர்.
அநேகர் கர்த்தரின் கட்டளையை மீறி தங்கள் கண்கள் இச்சித்ததை செய்து தங்கள் வாழ்க்கையை இழந்து நிற்கிற அநேகரை பார்க்க முடிகிறது.
எப்படி என்று கேட்கிறீர்களா? உங்களை தான் அந்த மார்க்த்திற்கு கொண்டு போவார்களே தவிர, அவர்கள் உங்கள் மார்க்கத்திற்கு வருவது கொஞ்சம் கஷ்டம்.
அதன்பின்பு இரட்சிக்கப்பட்ட உங்களாலேயே ஆலயத்துக்கு செல்ல முடியாத பின்மாற்ற நிலைக்கு செல்வீர்கள். எனவே 100 % இது சாத்தியமில்லை என்றே சொல்லலாம்.
இரட்சிக்கப்பட்ட துணையை தேர்ந்தெடுத்தவர்களின் சில திருமணங்கள் கூட தோல்வியில் முடிகிறதே ஏன்? தேவ சித்தத்தின்படி திருமணம் நடைபெற்றால் மட்டும் போதாது. தொடர்ந்து நமது குடும்ப வாழ்விலும் தேவசித்தம் செய்யப்பட்ட வேண்டும்.
சுயம் (ஈகோ) தலைதூக்கும் போது அங்கு தேவசித்தம் மீறப்படுகிறது. 1 கொரிந்தியர் 10 : 24 ன்படி தனக்கானவைகளையல்ல தன் துணைக்கானவைகளை யோசித்து நடந்து, வசனத்தின்படி கணவன் மனைவி இருவருக்கும் இடையே தேவனை மட்டுமே வைத்து நடத்தப்படும் குடும்பம் மட்டுமே தோல்வியின்றி ஆசீர்வாதமாக வாழ முடியும்.
முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது (பிரசங்கி .4 : 12) கணவன் + மனைவி + தேவன் ) . எனது நெருங்கிய உறவில் ஒருவருக்கு தேவசித்தப்படி திருமணம் நடந்தது. ஆனால் அவரோ என் கணவரை தேவனைவிட அதிகமாக நேசிக்கிறேன் என்றார்.
தேவனுக்கு அங்கு இடமில்லாமல் போனது. அந்தோ 10 வருடங்களில் அவர்கள் பிரிந்து விட்டனர். திருமணத்திற்காக காத்திருக்கும் வாலிப தம்பி, தங்கச்சி நமது குடும்ப தலைவராக, முடிவெடுக்கும் நபராக கர்த்தர் இருப்பாரானால் நமது குடும்ப வாழ்க்கை என்றுமே மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவே இருக்கும் (ரோமர் 8:39) என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
இரட்சிக்கப்பட்டவர், இரட்சிக்கப்பட்டோரை திருமணம் செய்துகொள்ளும்போது கேட்க வேண்டியவை? எத்தகைய பழக்கங்களை கொண்டிருப்பார்! என் குடும்பத்திற்கு சமாதானத்தை கொண்டு வருவாரா? அல்லது சமாதான குறைச்சலை உண்டுபண்ணுவாரா என்பதை பகுத்தறிதல் கெட்ட பழக்கம் எதாவது இருக்கிறதா என்று விசாரித்து அல்லது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எந்த ஆணையோ , பெண்ணையோ புற அழகைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.
அவன் அல்லது அவள் ஆவிக்குரிய வாழ்க்கை (சபை கூடிவருவதல, ஆராதனை, தனிப்பட்ட ஜெப வாழ்க்கை) எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அன்பான வாலிப தம்பி, தங்கச்சி கிறிஸ்தவர்களில் பத்தில் எட்டு பேர் கிறிஸ்தவரல்லாதோரை திருமணம் செய்து கடைசியில் தேவனையும் சபையையும் விட்டு விலகி போவதாக புள்ளி விவரம் கூறுகிறது.
விசாரிக்காமல் திருமணம் செய்து வாழ்க்கை முழுவதும் கண்ணீர் விடுவதைவிட தாமதித்தாலும் பொறுமையோடு காத்திருந்து பெற்றோரின் உதவியாடு ஆண்டவரின் சித்தத்தின் படி நல்ல துணையை தேர்ந்தெடுப்பது நல்லது.
கிறிஸ்தவரல்லாதவரோடு திருமணம் ஒப்பந்தம் செய்வதற்கு முன் அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப் படாதிருப்பீர்களாக என்ற வசனத்தை நினைவுகூர்ந்து எச்சரிக்கையுடன் இருங்கள் . அவசரப்பட்டு முடிவு எடுத்து வாழ்நாளெல்லாம் கண்ணீர் சிந்த வேண்டாமே!