யூதாஸ் தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான் என்பது உண்மையா? அல்லது தலைகீழாக விழுந்து வயிறு வெடித்து அல்லது இறந்தான் என்பது உண்மையா?

Share this page with friends

யூதாஸ் எப்படி மரித்தான்? தூக்குப் போட்டுக்கொண்டா? அல்லது குடல் சரிந்து வயிறு வெடித்தா?

இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்கு ஆசைப்பட்டு அவரின் சீடர்களில் ஒருவனாக இருந்த யூதாஸ் இஸ்காரியோத் எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கிறான். அவனுடைய மரணம் பற்றி கூறுகையில் பைபிள் முரண்படுகிறது போன்று தோன்றுவதாக சிலர் கேள்வியெழுப்புகின்றனர். கண்டிப்பாக ஒருவர் இரு முறைகளில் மரணமடைந்திருக்க முடியாது. இது பற்றிய பைபிளின் வசனங்கள்:

மத்தேயு 27:5- அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்று கொண்டு செத்தான். இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான் என்று இவ்வசனம் கூறுகிறது, ஆனால் பின்வரும் வசனம் யூதாஸ் தலைகீழாக விழுந்து, வயிறு வெடித்து, குடல் சரிந்து இறந்தான் என்கின்றது.

அப்போஸ்தலர் 1:18 – அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.

மத்தேயு 27:5 ல் யூதாஸ் நான்றுகொண்டு சொத்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அப்போஸ்தலர் 1:18 இல் அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.” என்று கூறப்பட்டுள்ளது. இம்முரண்பாட்டிற்கான காரணம் யாது?

யூதாஸ் தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான் என்பது உண்மையா? அல்லது தலைகீழாக விழுந்து வயிறு வெடித்து அல்லது குடல் சரிந்து இறந்தான் என்பது உண்மையா?

யூதாசின் மரணத்தைப் பற்றி லூக்கா எழுதியபோது, அவன் விழுந்ததால் அவனுடைய வயிறு வெடித்தது என்று அப் 1:18-ல் குறிப்பிட்டிருக்கிறார். அவன் எப்படி தற்கொலை செய்துகொண்டான் என்று மத்தேயு எழுதியிருக்கிறார், அவன் தற்கொலை செய்துகொண்டபோது என்ன நடந்தது என்று லூக்கா எழுதியிருக்கிறார். இரண்டு பதிவுகளையும் வைத்துப் பார்க்கும்போது,

யூதாஸ் ஒரு செங்குத்தான மலைமேல் இருந்த ஒரு மரத்தில் தூக்குப்போட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், கயிறு அறுந்ததாலோ மரக் கிளை உடைந்ததாலோ, கீழே இருந்த பாறைகள்மேல் அவன் தலைக்குப்புற விழுந்ததாகவும், அவன் வயிறு வெடித்ததாகவும் தெரிகிறது.

எருசலேமைச் சுற்றியுள்ள இயற்கை அமைப்பை வைத்துப் பார்க்கும்போதும், நாம் இந்த முடிவுக்கு வருவது நியாயமாக இருக்கிறது. இவ்விரு வசனங்களிலும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. யூதாசின் மரணத்தைப் பற்றியே இவ்விரு வசனங்களும் கூறுகின்றன. மத்தேயு பாலஸ்தீனாவில் வாழ்ந்த யூதர்களுக்கே தன் சுவிஷேசத்தை எழுதியமையால், அப்பிரதேச மக்கள் அறிந்திருந்த யூதாசின் மரண சம்பவத்தை விபரமாக எழுதாமல், ஒரே வரியில் அவன் நான்று கொண்டு செத்தான் எனக்குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் புறஜாதி கிறிஸ்தவர்களுக்கே லூக்கா அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை எழுதியமையால், அவர் யூதாஸின் மரணம் பற்றி பேதுரு கூறியவற்றை விபரமாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் யூதாஸ் தற்கொலை செய்வதற்காகக தூக்குப் போட்டுக் கொண்ட இடம் குத்துப்பாறைகளுடனான இடமாகும்.

அவன் தூக்குப் போட்டுக் கொண்ட சமயம், தூக்குக் கயிறு கட்டப்பட்டிருந்த மரத்தின் கிளை முறிந்தமையால் அவன் தலைகீழாக கீழே விழுந்தான். இதனால் அவனது வயிறு வெடித்து குடல்களெல்லாம் சரிந்து போயிற்று. அப்போஸ்தலர் லூக்காவைப் போல மத்தேயு விபரமாக எழுதாமல் சுருக்கமாக ஒரே வரியில் அவன் நான்று கொண்டு செத்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

● அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி, ஆலோசனை பண்ணினபின்பு, அந்நியரை அடக்கம் பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள். இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது. மத்தேயு 27:3-8.

● இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்தஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேற வேண்டியதாயிருந்தது. அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்கு பெற்றவனாயிருந்தான். அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான். அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது. அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது. அப்போஸ்தலர் 1:16-19

யூதாஸ், 30 வெள்ளிக்காசுகளை தூக்கி எறிந்து அதை வைத்து வேறொருவர் நிலம் வாங்கினார் என்பது உண்மையா? அல்லது யூதாஸே அதன் மூலம் நிலம் வாங்கினான் என்பது உண்மையா?
அந்நிலம் அவன் மரணத்திற்குப் பின் வாங்கப்பட்டது என்பது உண்மையா?
அல்லது அவன் இறந்ததே அவன் வாங்கிய நிலத்தில் தான் என்பது உண்மையா? “இரத்தநிலம்” என்று அந்நிலம் அழைக்கப்பட அவ்விரண்டில் எது உண்மையான காரணம்?

முதன்மை குருமார்கள் அந்த 30 வெள்ளிக் காசுகளை வைத்து ஒரு நிலத்தை வாங்கியதாக மத்தேயு மட்டும்தான் எழுதியிருக்கிறார். ஆனால், யூதாஸ் அந்த நிலத்தை வாங்கியதாக அப்போஸ்தலர் 1:18, 19 சொல்கிறது. அவன் தந்த காசுகளை வைத்து அந்த நிலத்தை முதன்மை குருமார்கள் வாங்கியதால் அது அப்படிச் சொல்லப் படுகிறது.

இன்னோம் பள்ளத்தாக்கின் தெற்குச் சரிவிலே, கீதரோன் பள்ளத்தாக்கோடு அது இணைவதற்குச் சற்று முன்பு, இந்த நிலம் இருந்ததாக கி.பி. நான்காம் நூற்றாண்டு முதற்கொண்டே நம்பப்படுகிறது. அந்தப் பகுதியில்தான் குயவர்கள் தொழில் செய்ததாகத் தெரிகிறது. அந்த நிலம் “இரத்த நிலம்” அல்லது அக்கெல்தமா என்று அழைக்கப்பட்டதாக மத் 27:8-ம், அப் 1:19-ம் சொல்கின்றன. மேலும் இச்சம்பவம் “எரேமியா” என்ற தீர்க்கத்தரிசியால் முன்கூட்டியே கூறப்பட்ட தீர்க்கத்தரிசனம் என்று மத்தேயு கூறுகிறார்.

“இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.” மத்தேயு 27:9,10

ஆனால் எரேமியா ஆகமத்தில் இது பற்றி ஒரு வார்த்தை கூட கூறப்படவேயில்லை. எரேமியா புத்தகத்தில் இது இல்லாவிட்டாலும், இதற்கு ஒப்ப வாசக அமைப்புள்ள ஒரு சம்பவம் “சகரியா” புத்தகத்தில் உள்ளது. இதற்கு காரணம் என்ன ?

“கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார். இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு. நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்து விட்டேன்.” சகரியா 11:13

மத் 27:9,10-ல் உள்ள மேற்கோள் முக்கியமாக சகரியா 11:12, 13-லிருந்து எடுக்கப்பட்டதாகும். ஆனால், அங்குள்ள வார்த்தைகளை மத்தேயு சுருக்கி எழுதியிருக்கிறார். அந்த வார்த்தைகள் நிறைவேறியதைப் பற்றிக் கடவுளுடைய ஆவியின் தூண்டுதலால் அவர் எழுதினார். மத்தேயுவின் காலத்தில், தீர்க்கதரிசன புத்தகங்களின் வரிசையில் எரேமியாதான் முதலில் இருந்தது. அதனால் எரேமியா என்ற பெயர், சகரியா உட்பட அந்தத் தீர்க்கதரிசன புத்தகங்கள் எல்லாவற்றையும் குறித்திருக்கலாம்.​

மேற்கோள் காட்டப்பட்டுள்ள வசனங்கள் சக 11:12, 13-ன் அடிப்படையில் அமைந்துள்ளன. மத்தேயுவின் காலத்திலே, தீர்க்கதரிசிகளுடைய புத்தகங்களில் எரேமியா முதலாவதாக இருந்தது; ‘எரேமியா’ என்ற பெயர் சகரியா உட்பட எல்லா தீர்க்கதரிசனப் புத்தகங்களையும் குறிக்கிற பொதுப் பெயராக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

Thanks: indestructibletruth.blogspot.com


Share this page with friends