நம்முடைய ஆண்டவர் பெரியவரா? சிறியவரா? டிஎல் மூடி சம்பவம்

Share this page with friends

இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான் “.
மத்தேயு 18:5

ஒருமுறை டி எல் மூடி பிரசங்கியார் ஒரு ஓய்வுநாள் சிறுவர் பள்ளிக்கு விஜயம் செய்தார். அங்கு பிள்ளைகள் பாடிய பாடல்களை கேட்டு மகிழ்ந்தார். பின்பு அவர்களை பார்த்து ஒரு கேள்வி கேட்டார். நம்முடைய ஆண்டவர் பெரியவரா? சிறியவரா? உடனே எல்லாப் பிள்ளைகளும் பெரியவர், பெரியவர் என்று கத்தினர். மூடி அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

ஆனால் ஒரு சிறு பிள்ளையோ எந்த பதிலும் பேசாமல் சிந்தித்துக் கொண்டே இருந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்து அவர்; ஏனம்மா நீ வாய் திறக்கவில்லை என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய் நம்முடைய ஆண்டவர் பெரியவரா சிறியவரா? என்று மறுபடியும் கேட்டார். அந்தக் குழந்தை அமைதியாக எழும்பி நின்று மிகப் பெரியவரும் அவர்தான் மிகச் சிறியவரும் அவர்தான் என்றது. எல்லோரும் ஆச்சரியத்துடன் அந்த குழந்தையை நோக்கிப் பார்த்தார்கள் . எப்படி அவர் பெரியவராகவும் அதேநேரத்தில் சிறியவராகவும் இருக்க முடியும் என்று அவர் மறுபடியும் கேட்டார். அதற்கு அந்த சிறுமி சொன்னாள்; ஐயா அவர் வானாதி வானங்களைப் சிருஷ்டித்த வானம் கொள்ளாதவர், அவர் பெரியவர். அதில் சந்தேகமே இல்லை. அதே நேரத்தில் என்னுடைய சிறு இருதயத்தில் வந்து வாசம் பண்ணுகிறாரே . இந்த சின்ன இருதயத்தில் வந்து வாசம் பண்ணுகிறார் என்றால் அவர் சிறியவர் தானே என்றாள்.

என் அருமை தேவஜனமே, இதை கேட்ட மூடி அவர்களுக்கு அளவில்லாத பரவசம். இதுவரை நான் எத்தனையோ இடங்களில் பிரசங்கித்தும் இந்த குழந்தைக்கு தெரிந்த பெரிய சத்தியம் பெரிய இரகசியம் எனக்கு தெரியாமல் போய் விட்டதே என்றார் அவர். அந்த சிறுபிள்ளையை போல நாமும் மனதளவில் குழந்தையைப் போல மாற வேண்டும். அப்படியாக எல்லாவற்றிலும் நாம் தேவனை தரிசிக்கிறவர்களாயும், சார்ந்திருக்கிறவர்களாயும் மாறும்போது நம் வாழ்வில் அனைத்து பகுதிகளிலேயும் தேவைகளிலும் தேவனின் கரம் நமக்காக கிரியை செய்வதை நாம் கண்ணார காண முடியும். அந்த சிறுபிள்ளையை போல நாமும் கர்த்தருக்காக மாறுவோம், தேவன் நம்மை படைத்த நோக்கத்தை நிறைவேற்றுவோம். ஆமென்!

இறைபணியில் என்றும்,

மக்னாயீம் ஊழியங்கள்,
திருநெல்வேலி.


Share this page with friends