அவயங்காத்தும் உபயம் உண்டா? வித்யா’வின் பதிவு

Share this page with friends

EASTER EGGS

இப்பூவுலகில் நடைப்பிணமாய்
நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கும்
மக்கள் ஏராளம்.


செத்துப்போன ஆத்துமாவைச்
சுமந்து செல்லும் பிரேத வண்டியாய்
வெளியலங்காரத்தோடு ஆனால்,
வெந்துபோன உள்ளதோடு
உலாவரும் மாந்தரைச்
சிந்திக்கத்தூண்டும்  
நாட்களில் ஒன்றுதான்
EASTER  (ஈஸ்டர் திருநாள்). 

சாவை வீழ்த்தி, பாவத்தை அழித்து
இருளை வெற்றிகொண்ட
இயேசு உயிர்த்தெழுந்த திருநாள்.

அவதி அவதியாய்
அரைவேக்காட்டு வாழ்க்கை
வாழும் மனித இனம்
முழு ஆத்துமாவுடன்
முழுமையான வாழ்க்கையைப்
பெற்றுக் கொள்ள
முற்றிலும் தன்னைத் தந்தவர்
ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்து ஒருவரே
.

மனுக்குலத்தின் பாவத்தை மன்னித்து,
பாவத்தின் காரணமாய்ச் செத்துப்போன
அவன் ஆத்துமாவைத்
தன்னுடைய ஜீவனைத் தந்து
உயிர்ப்பித்த தேவன் அவர்.

உயிர்தெழுதலின் வல்லமையுள்ள ஒருவரே
உன் ஜீவனை உயிர்ப்பிக்க முடியும்.
இயேசு சொன்னார்; நானே உயிர்த்தெழுதலும்
ஜீவனுமாயிருக்கிறேன்
(யோவான் 11:25).

அரைவேக்காட்டு கிறிஸ்தவர்கள்
ஆயிரமாயிரமாய் வாழ்கிறார்கள்.
(Half boiled egg)  சுவையாகத் தோன்றலாம்,
அவர்களுக்கெல்லாம்
ஈஸ்டர் என்பது
ஒரு சுவைக்கும் பண்டிகை
மட்டும்தான்.

ஆனால் ஒரு முட்டையிலிருந்து முழுமையான
புது உயிராக புதிய உலகைக் காண்பதுதான்
Easter Egg  என்பதின் தத்துவம்.

உன் ஜீவன் கிறிஸ்துவுக்குள்
புத்துயிர் பெற்று
உயிர்பிக்கப்பட்டிருக்கிறதா?

அவயங்காத்தும் குஞ்சு பொரிக்காத
கவுதாரியைப்
பற்றி வேதம் சொல்லுகிறது.
(எரேமியா 17:11)

எத்தனை முட்டைகள் அடைகாக்கப்பட்டாலும்  
ஒரே சீரான உஷ்ணம் எப்போதும்
அவைகளுக்குத் தேவை.

இதை அடைகாக்கும் பறவை
நன்கு அறிந்து, அவ்வப்போது
முட்டைகளின் இடத்தை முன்னும் பின்னும்
தன் அலகால்  மாற்றிக்கொண்டே இருக்கும்.
   
இதற்கிடையே  முட்டைகள் குளிர்ந்து போனால்,
முட்டைகள் பொரிப்பதில்லை!
ஜீவன் வெளிப்படுவதில்லை!

உணவுக்கும் பயனின்றி,
உயிர் பெறவும் வழியின்றி
“கூ” என்ற அடைமொழியை அன்பளிப்பாகப் பெற்று
அழைக்கப்படும் அவல நிலையை பார்த்திருக்கிறீர்களா?

ஆசிரியர் சில வேளைகளில்
கூமுட்டை என்று மாணவனைத்
திட்டுவதை கேட்டிருக்கிறோம்.

பரிசுத்த ஆவியின் அனல்
உங்களை என்றும் காக்குமானால்
நீங்கள் நிச்சயமாகப் புத்துயிர் பெற்றுப்
புதிய ஜீவன் உள்ளவர்களாய்,
பூரண வாழ்க்கை வாழ்ந்து,
கிறிஸ்துவின் நாளில் உயிர்த்தெழுவீர்கள்.


பட்டுப்புழுவாய் கூட்டிற்குள்
பதுங்கிப் பல நாட்கள் வாழ்ந்தாலும்
ஒருநாள் அந்தக் கூடு உடைபடும்.
புதிய உயிர், புதிய உருவம்,
புதிய சிறகுகள், புதிய உணவு (தேன்)
முற்றிலும் மறுரூபமான வாழ்க்கையோடு
பட்டுப்பூச்சி வெளியேறி பறக்கிறது
.

உன் வாழ்க்கை கூட்டுப் புழுவாகவே இருந்து,
கொதி தண்ணீருக்குள் போக வேண்டும் என்று
சாத்தான் விரும்புகிறான்.

நீ காஞ்சிபுரம் புடவையாக மாறி
மற்றவர்களை மகிழ்வித்தாலும்
அது மண்ணின் வாழ்க்கைதானே!
அதில் உனக்கென்ன பெருமை?


உன்னை வைத்து காஞ்சிபுரம்
பிழைத்துக்கொண்டிருக்கிறது!

அதை  வாங்கி நகோமி அம்மா
உடுத்திக்கொண்டிருக்கிறது.

அவ்வளவுதான்!  

நீ கூட்டை விட்டு வெளியேறி
விண்ணில் பறந்துசெல்லும்
புதிய ஜீவனாக மாறுவதுதான்
ஈஸ்டர் திருநாளின்
இறை தத்துவம்.
 
You are born to fly.

உயிர்த்த கிறிஸ்து முதற்பலன்.
நாம் கிறிஸ்துவுக்குள் இரண்டாவது பலன்கள்.

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்.
அவருக்குள் நாமும் உயிர்த்தெழுவோம். 


இதுதான் மனுக்குலத்தின் மகாப் பெரிய
நம்பிக்கையாய் இருக்கவேண்டும்.

இதற்காகவே இயேசு வந்தார்.
சிலுவையில் மரித்தார்.
மூன்றாம்நாள் உயிர்த்தார்.
அவருடைய நாமத்திற்கே
மகிமை உண்டாவதாக.

நானே அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும்,
அது பரிபூரணப்படவும் வந்தேன்
(யோவான் 10:10).

பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்
(1939- 01.03.2021) 

தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்
, மதுரை -14


Share this page with friends