கிறிஸ்தவ மூதாட்டிக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்கு நடத்திய இஸ்லாமியர்கள்: கோழிக்கோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்

Share this page with friends

கேரளாவில் இறந்த கிறிஸ்தவ மூதாட்டியின் உடலை அரபி பாடசாலையில் வைக்க அனுமதித்ததோடு, முஸ்லீம் பெண்கள் இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி: தினகரன் பிப் 01, 2021

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பிரிட்ஜட் ரிச்சர்ட் (84). இவரது கணவர் ரிச்சர்ட். பிரிட்ஜட் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். ஓய்வுபெற்ற பின்னர் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி அருகே பொன்னாட்டு பகுதியில் ஒரு வீட்டை கட்டி வசித்து வந்தார். கடந்த 13 ஆண்டுகளாக இங்குதான் அவர் கணவருடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு பிள்ளைகள் கிடையாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரிச்சர்ட் இறந்தார். இதனால் பிரிட்ஜட் தனிமையில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிட்ஜட் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை பிரீசரில் வைத்து வீட்டுக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. ஆனால் வீட்டுக்குள் பிரீசரை கொண்டு செல்ல முடியாமல் அப்பகுதி மிகவும் குறுகலாக இருந்தது. இதையடுத்து அங்குள்ள அரபி பாடசாலையில் உடலை வைக்க அப்பகுதி முஸ்லீம்கள் முன்வந்தனர். இந்த அரபி பாடசாலையில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அங்குள்ள ஒரு வகுப்பறையில் பிரிட்ஜட்டின் உடல் வைக்கப்பட்டது. அந்த வகுப்பறை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அப்பகுதி முஸ்லீம் பெண்கள் பிரிட்ஜட்டின் உடலை குளிப்பாட்டி இறுதி யாத்திரைக்கு தயார் செய்தனர்.

பின்னர் அந்த வகுப்பறையில் வைத்தே கிறிஸ்தவ முறைப்படி இறுதி பிரார்த்தனையும் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து உடல் கோழிக்கோடு வெஸ்ட்கில் பகுதியில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பிரிட்ஜட்டின் இறுதி சடங்கில் கொண்டோட்டி எம்எல்ஏ இப்ராகீம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மத வேறுபாடில்லாமல் உதவ முன்வந்த இந்த சகோதரத்துவம் மற்றும் பரந்த மனப்பான்மை அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சிந்தனைக்கு: இவ்வுலகில் ஒவ்வொரு நாளையும் நாம் கடப்பது தேவனி்ன் பெரிய கிருபை. ஆகவே நாம் வாழும் நாட்களில் ஜாதி, மத, மொழி வேற்றுமைகளை களைந்து சகோதரத்துவத்தை, மனித நேயத்தை மனதார வளர்த்துக்கொள்வோம். பரிசுத்த வேதாகமம் இதைதான் நமக்கு கற்று கொடுத்திருக்கிறது.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends