கேள்வி: இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதனால் கிறிஸ்தவர்கள் நாம் 40 நாள் உபவாசம் இருந்து ஆக வேண்டுமா?

Share this page with friends

கேள்வி: இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதனால் கிறிஸ்தவர்கள் நாம் 40 நாள் உபவாசம் இருந்து ஆக வேண்டுமா? இயேசு ஏன் உபவாசம் இருந்தார்? பிசாசின் சோதனையை வெல்வதற்கா? தான் பிதாவோடு அதிகதிமாக ஐக்கியமா இருப்பதற்காகவா?

பதில் : உபவாசத்தை குறித்து முழுமையாக இதில் பதிவிடுவது அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும் என்று கருதி எல்லா கோணங்களிலும் விளக்கப்படுத்துகிறேன்.

ஆன்மீக காரணத்திற்காக “உணவு மற்றும் பானம் இரண்டிலிமிருந்து” விலகி இருப்பது உபவாசம்.

ஒரு வேளை மாத்திரம் சாப்பிடுவதும், பழ சாறு மாத்திரம் குடித்துக்கொள்வதும், பால் மாத்திரம் குடித்துக்கொள்வதும், தலைக்கு பூ வைக்காமலும், பட்டுப்புடவை கட்டாமல் இருப்பதும், அழுது ஜெபிப்பதும் உபவாசம் அல்ல – அதன் பெயர் ஒடிக்கிக்கொள்வது !! சில காரணங்களுக்காக தங்கள் மனதைக் கட்டுப்படுத்திக்கொள்வது.

நியாயபிரமாணத்தின்படி ஒரே ஒரு உபவாசம் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டதாயினும் யூதர்கள் அடிக்கடி பழைய ஏற்பாட்டு சகாப்தத்தில் கடைபிடித்தார்கள்.

பாவநிவிர்த்தி நாளில் ஒவ்வொரு ஆண்டும் எபிரேயர்கள் இருக்கவேண்டியது. லேவி. 16:31, ஏசா. 58:3.

அதுபோல ஒரு “கட்டாய உபவாச கட்டளை கிறிஸ்தவர்களுக்கு வேதாகமத்தில் விதிக்கப்படவில்லை” என்றாலும், புதிய ஏற்பாடு தேவனுடைய பிள்ளைகள் அவ்வப்போது உபவாசம் இருந்திருப்பதைக் காணமுடிகிறது.

கர்த்தருடைய சீஷர்கள் உபவாசம் இருப்பதில்லை என்று விமர்சிக்கப்பட்டபோது, ​​இயேசுவின் பதில் “மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார். லூக். 5:34-35).

தொழுகையின் ஒர் அங்கமாகவும் ஒழுக்கமாகவும் கடைபிடிக்க முனையும் போது கிறிஸ்துவின் ஒர் எச்சரிக்கை “நீங்கள் “உபவாசிக்கும்போது”, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார் – மத் 6:16.

இந்த வசனத்தில் நீங்கள் கவனிக்க வேண்டியது முக்கியமாக “உபவாசித்தால் என்று சொல்லவில்லை – உபவாசிக்கும் போது என்றார்” !!

கிறிஸ்தவருக்கு உபவாசம் என்பது அவரவர் மனதைப் பொருத்தது.
உபவாசம் இருப்பது ஒரு சடங்காகவோ கட்டாயத்தின் பேரிலோ அல்ல – உள்ளார்ந்த தீவிரமான தேவையின் உணர்விலிருந்து அவசியப்படுவதை பொருத்தது.

உபவாசத்தின் விளைவும் பிரயோஜனமும் என்ன?
“தனிப்பட்ட துக்க காலங்களில்” உபவாசம் ஆன்மீக ரீதியில் பயனளிக்கும். சவுலின் மரணம் குறித்து தாவீதும் அவனுடைய ஆட்களும் துக்கம் அனுஷ்டித்தனர் (2 சாமு. 1:12).

எருசலேமின் அழிந்த நிலையைப் பற்றி நெகேமியா அறிந்தபோது அவ்வாறே செய்தனர் (நெகே. 1:4).

அன்புக்குரியவர் மோசமாக நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, ​​உபவாசம் இருந்தது பொருத்தமானதாகத் தெரிகிறது (2 சாமு. 12:16).

ஆத்தும வளர்ச்சிக்காக உண்மையான மனந்திரும்புதலோடு பாவ காரியத்திற்காக துக்கப்பட்டு வெளிப்புற அறிகுறியாக மனந்திரும்புதலுடன் உபாவசம் கடைபிடிக்கப்பட்டது (1 சாமு. 7:6). நினிவே மக்கள் தங்கள் பாவங்களை அங்கீகரிக்கும் போது உபவாசத்தை அறிவித்தனர் (யோனா 3:5).

மோசே நியாயப்பிரமாணத்தைப் பெற்றுக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் உபவாசம் இருந்தார் (யாத் 34:28).
அது போல வனாந்தரத்தில் கிறிஸ்து உபவாசம் இருந்தார் (மத் 4:2).

அந்த ஆபத்தான முதல் மிஷனரி பிரயாணத்தில் பர்னபாவையும் சவுலையும் அனுப்புவதற்கு முன்பு சபையார் உபவாசம் இருந்தார்கள். (அப் 13:2-3).

பவுலின் ஊழியத்தில் உபவாசம் ஒரு அங்கமாக இருந்தது (2 கொரி. 6:5; 11:27).

“உபவாசம் இருப்பவர்களுக்கான எச்சரிக்கைகள்”
உபவாசம் துஷ்பிரயோகம் செய்யப்படலாம் என்பது கவனிக்கப்படவேண்டியது.

தனிப்பட்ட தெய்வீக வாழ்க்கைக்கு “மாற்றாக” இந்த நடைமுறை ஒருபோதும் பயன்படுத்தப்படக்கூடாது.

உபவாசம் இருந்து கொண்டே உலக இன்பங்களை தொடர்ந்த ஜனங்களுக்கு ஏசாயாவின் எச்சரிப்பு பெரிய பாடம் (ஏசா. 58).

உபவாசம் என்பது ஒருவரின் மார்க்கத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் அல்ல. பரிசேயர்கள் இந்த விஷயத்தில் குற்றம் செய்தனர் (மத் 6: 16-18).

உபவாசம் என்பது ஒரு மார்க்க சடங்கு அல்ல !! அதுவே கண்ணியாகிவிடும். லூக்கா 18: 9-14.

“உண்ணாவிரதத்தின் நன்மைகள்”
ஆழ்ந்த மற்றும் நேர்மையான அர்ப்பணிப்பின் அடையாளமாக உபவாசம் இருக்கும் பட்சத்தில் தேவன் கவனிக்கிறவர் என்று வேதம் கூறுகிறது.

மிதமான உபவாசம் ஆரோக்கியத்திற்கு நன்மை.

உபவாசத்தில் மனம் அதிக ஒருங்கிணைக்கப்படுகிறது.

சுய ஒழுக்கத்தில் வளர்த்துக் கொள்ள உபவாசம் உதவும்.

“கிறிஸ்துவின் சோதனையைப் பற்றிய கேள்விகள்”

“நாற்பது நாட்களுமே இயேசு சோதிக்கப்பட்டாரா, அல்லது நாற்பது நாட்கள் உபவாசம் முடிந்தபின் சோதிக்கப்பட்டாரா?”

மத்தேயுவின் கணக்கைப் படிப்பதன் மூலம், இயேசு நாற்பது நாட்கள் உபவாசம் “இருந்தபின்”, பிசாசு அவரிடம் வந்ததை நாம் பார்க்கிறோம்.

ஆனால் கர்த்தர் “நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார்” என்று லூக்கா 4:2 பதிவு செய்கிறார்.

சோதனைகள் நாற்பது நாளும் நடந்து கொண்டிருப்பதை லூக்கா சுட்டிக்காட்டுகிறார்.

நாற்பது நாட்கள் உபவாசத்திற்குப் பிறகு நிகழும் மூன்று குறிப்பிட்ட சோதனையை லூக்காவும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் (லூக். 4:2-3).

நாற்பது நாட்களில் இயேசு கிறிஸ்து பல சோதனையைத் தாங்கியிருக்கலாம், ஆனால் மூன்று சோதனைகளும் இயேசுவின் வனாந்தர தனிமையின் உச்சக்கட்ட, மிகத் தீவிரமான சோதனை என்று கருத்தில் கொள்ளமுடிகிறது.

“சோதனை முடிந்த போது” பிசாசு அவரை விட்டு “சிலகாலம்” விலகியதாக லூக்கா கூறுகிறார் (4:13).

சிலுவையின் கடைசி பரியந்தமும் சோதிக்கப்பட்டுக்கொண்டே தான் இருந்தார். (மத் 16:22-23).

“கிறிஸ்துவின் சோதனையைப் பற்றிய இறையியல் கேள்விகள்”

பரிசுத்த ஆவியானவர் இயேசுவை சோதிக்க கொண்டு சென்றார் என்று எப்படிச் சொல்ல முடியும்?

இயேசு தேவனாக இருக்கும் போது எவ்வாறு சோதிக்கப்பட்டிருப்பார்?
கிறிஸ்துவின் சோதனையை ஒருவர் கருத்தில் கொள்ளும்போது இந்த கேள்விகளும் மற்றவையும் எழுகின்றன.

பரிசுத்த ஆவியானவர் இயேசுவை சோதனையில் வழிநடத்தவில்லை. மாறாக அவர் வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்றார்.

இயேசுவின் உடல் பலவீனம் மற்றும் சோர்வின் தருணத்தை சோதிக்க பிசாசு பயன்படுத்துவான் என்று தேவன் அறிந்திருந்தார்.

தேவன் தம்முடைய குமாரனை சோதனைகள் நிறைந்த சோதனையின் உலகத்திற்கு அனுப்பினார்.

இந்த சிரமங்கள் மாம்சத்தில் தேவன் இருப்பதன் ஒரு பகுதியாகும். பரிசுத்த ஆவியானவர் இயேசுவை தீமை செய்ய தூண்டினார் என்று அர்த்தமல்ல, தேவன் ஒருபோதும் யாரையும் சோதிப்பதில்லை என்று யாக். 1:13ல் பார்க்கிறோமே.

தன் குமாரன் உலகத்திற்காக பலியாக்கப்படுவதைக் காட்டிலும் வனாந்திரத்தில் சோதிக்கப்படுவது பெரிதானதோ?

இரட்சிப்பின் பணியானது மரணத்தை உள்ளடக்கியிருந்தது. கல்வாரிக்கான பாதை துன்பம், வேதனை மற்றும் சோதனையால் அமைக்கப்பட்டது. இதன் மூலம் மனிதகுலத்திற்கான பிரதான ஆசாரியராக அமர்த்தப்பட இயேசு பரிபூரணமாக தகுதிபெற்றார் (எபி. 2:10).

இயேசு கடவுளாக இருந்தால் அவர் எவ்வாறு சோதிக்கப்படமுடியும்?
கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை வேதம் தெளிவாக கற்பிக்கிறது (யோ 1:1; கொலோ. 2:9). அவர் சோதிக்கப்பட்டார் என்பதையும் இது கற்பிக்கிறது (மத் 4:1; எபி. 4:15).

மேலும் கடவுள் என்பவர் எப்படி சாக முடியும்? ஆனால் இயேசு சிலுவைக்குப் பின்னர் மரித்தார் !! இது எப்படி சாத்தியமானது?

கிறிஸ்துவானவர் – மாம்சத்தில் வந்த கடவுள். மனுஷகுமாரனாக வந்தார்.

கடவுளின் தெய்வீகமானது சாத்தியமில்லாத பல விஷயங்களை சாத்தியமாக்கியது. மாம்சத்தில் வருவதன் மூலம், இயேசு இறக்கும் திறன் மட்டுமல்ல, அவர் ஒரு மனிதனாக இருப்பதற்கான மற்ற குணாதிசயங்களுக்கும் பசி, சோர்வு போன்றவைக்கும் உட்பட்டார். அதேபோல், மாம்சத்தில் இருப்பது கடவுள்-மனிதனாக இருக்க முடிந்தது வேதவசனங்கள் சாட்சியமளித்தபடி சோதிக்கப்பட்டது. சகலவற்றிலும் நம்மைப்போல இருந்து சோதிக்கப்பட்டு ஜெயம் பெற அனுமதிக்கப்பட்டார்.

அப்படியென்றால் இயேசு உண்மையில் பாவம் செய்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாமே என்று கேட்க முடியுமா?
“இல்லை” என்று நாம் தெளிவாக சொல்ல வேண்டுமானால் சோதனையின் பொருள் என்ன என்பதை நாம் மறுவரையறை செய்ய அவசியம் உள்ளது. இயேசு சோதனையில் விழுந்திருந்தால் தானே அது ஒரு உண்மையான சோதனையாக இருக்க முடியும் என்று கேட்கலாம்.

கர்த்தர் சோதனையின் பேரில் ஈர்க்கப்படுவதல்ல. ஏனென்றால் அவர் கடவுளுடைய சித்தத்திற்கு முழுமையான தன்னுடைய சமர்ப்பிப்பை ஒருபோதும் சமரசம் செய்வதல்ல.

எபிரெயர் 4:15 “எல்லா விதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும் “பாவமில்லாதவராயிருக்கிறார் என்று வேதம் நமக்கு நிச்சயத்திருக்கிறது”

அதாவது நம்மைப்போலவே அவர் சோதிக்கப்டவில்லையென்றால் எல்லா சோதனையையும் அவர் “ஜெயித்தார்” என்று சொல்ல வழியில்லாதிருந்திருக்குமே !!

“கிறிஸ்து சோதனையின் மீது வெற்றி சிறந்தார்”

“நீர் தேவனுடைய குமாரன் என்றால், இந்த கற்களை அப்பமாக மாற்றும்படி கட்டளையிடும்” என்று பிசாசு சொன்னான். கர்த்தருடைய பதிலானது (மத் 4:4) இந்த சோதனையின் தன்மை பற்றிய கர்த்தரின் நுண்ணறிவை நமக்கு தெளிவாய் விளக்குகிறது.

உபவாசம் இருப்பதும் சோதிக்கப்படுவதும் தேவனுடைய சித்தம் என்பதை இயேசு அறிந்திருந்தார்.

அந்த கல்லுகளை அப்பங்களாக மாற்றும்படி ஓர் அற்புதத்தை அப்போது செய்திருந்தால் தான் தேவன் மீது வைத்திருக்கும் முழுமையான நம்பிக்கையைப் பிரதிபலித்திருக்கும். மாறாக வனாந்தரத்தில் இஸ்ரவேலருக்கு மோசேயின் அறிவுரையை மேற்கோள் காட்டுவதன் மூலம் (உபா 8:3), இயேசு தம்முடைய சொந்த முழு நம்பிக்கையையும் தேவனை நம்பியதையும் பிரதிபலித்தார். முயற்சி செய்து கடைபிடிப்பதல்ல – வார்த்தையின் முழு நம்பிக்கையை இது பிரதிபலித்தது.

கடவுளிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் நம்பத்தகுந்தவை, அவருடைய வாக்குத்தத்தங்களை சார்ந்து அவருடைய கட்டளைக்கு கீழ்படியும் போது நாம் பிழைத்து வாழ்வோம்.

“நீர் தேவனுடைய குமாரன் என்றால், தாழக் குதியும்” என்றான் பிசாசு.

இயேசுவை பாதாளத்தில் விழ தேவன் அனுமதிக்க மாட்டார் என்று சங் 91:11-12 குறிக்கிறது.

“அப்படியானால் தேவனை முழுமையாக நம்புகிறீர்களா – கீழே விழுந்து முயற்சி செய்து அதை ஊர்ஜீதப்படுத்திக்கொள்ளலாமே என்று சந்தேகத்தை எழுப்புகிறான் பிசாசு. உண்மையுள்ளவர்களுக்கு தேவன் அளிக்கும் பாதுகாப்பு எப்போதும் நிபந்தனைகளோடு உள்ளது. கடவுளை இதுபோன்று முயற்சிப்பது அவரை பரிசோதிப்பதற்கு சமம் என்பதை இயேசு அறிந்தவர். மேலும் அவர் தனது தந்தையை ஒரு அற்பமான சோதனைக்கு உட்படுத்துவதில்லை. ஆகையால், உபாகமம் 6:16ல் இருந்து இயேசு மேற்கோள் காட்டினார். கடைசியாக, இயேசுவுக்கு உலக ராஜ்யங்களை ஒரு நிபந்தனையுடன் வழங்குவதாக பிசாசு உறுதியளிக்கிறான். “கீழே விழுந்து தன்னை வணங்கவேண்டும்” என்றான் பிசாசு.

இது ஒரு சோதனையாக கருதப்படுவது எப்படி?
மனிதகுலத்தின் “கடினமான வழியைத்” தவிர்ப்பதற்கான போக்கில் இந்த சோதனை இருந்தது. சிலுவை மரணம் என்பது கிறிஸ்துவுக்கு கடினமான துன்பம். நம் பாவத்தின் மீட்பிற்காக அவருக்கு குறிக்கப்பட்ட சிலுவையின் உடல் சித்திரவதை என்பது அவர் கடந்து செல்ல வேண்டிய வேதனை. அப்படிபட்ட கடினமான பாதையை கடப்பதற்கு பதிலாக சுலபமாக இந்த வழியை தேர்ந்தெடுக்கவில்லை. கற்பனை செய்யமுடியாத துன்பத்தின் மூலம் அவரைத் தூண்டினாலும், தேவ சித்தத்தை நிறைவேற்றுவதில் இருந்து மாறாமல் தன்னை முழுவதுமாக அதற்கு ஒப்புக்கொடுத்தார் (மத் 26:38-39). பிசாசு ஒரு பொய்யன் என்பதை அவர் அறிவார். கிறிஸ்துவைப் போலவே, நமக்குக் கற்பிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையை நம்ப வேண்டும். தேவனுடைய சித்தத்திற்கு முற்றிலும் உட்பட்டு இருக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

ஏனென்றால் அவர் மட்டுமே நம் நன்மையை மனதில் கொண்டுள்ளார்.இயேசு ஒருபோதும் பாவம் செய்யவில்லை. நாம் 40 நாள் உபவாசிக்க வேண்டும் என்று கிறிஸ்து நமக்கு கட்டளையிடவில்லை. நாம் கிறிஸ்துவின் கட்டளைக்கு முழுவதுமாய் கீழ்படியவேண்டும். ஓரிரு வேளை சரீரத்தை ஒடுக்கிக்கொண்டு ஜெபிப்பதற்கு நேரம் ஒதுக்குவது தவறல்ல… ஆனால் 40 நாள் உபவாசம் இருக்கிறேன் என்று பழச்சாறும் பாலும் அல்லது ஒரு வேளை மாத்திரம் சாப்பிட்டுக்கொண்டு “உபவாசம் என்று சொல்வது” தவறு. சரீர ஒடுக்கம் என்று சொல்லிக்கொள்வதில் எந்த தவறும் இல்லை..

உபவாசத்தை கொள்கையாக மார்க்க ரீதியாக கடைபிடிக்க கட்டளையிடுவதும் மற்றவர்களை கட்டாயப்படுத்துவதும் வேதத்திற்கு முரணானது. நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். மத் 6:17-18

(தேவ ஊழியர்களான வெய்ன் மற்றும் ஜேசனின் உறையிலிருந்தும் சிலவற்றை இந்த பதிலில் நான் உபயோகப்படுத்தியுள்ளேன்)

எடி ஜோயல் சில்ஸ்பி
கர்த்தருடைய வேலைக்காரன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,
ஆசிரியர் – உலக வேதாகம பள்ளி,


Share this page with friends