மனித குலத்திற்கு வெளிச்சமாக திகழ்பவர் இயேசு பிரான்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து..!

Share this page with friends

சென்னை: கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயேசுநாதரின் பெருமைகளையும், சிறப்புகளையும் பட்டியலிட்டு அவர் போதித்த உன்னத நல் வழியில் பயணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்;

ஓபிஎஸ் -இபிஎஸ்

இயேசுபெருமான் பிறந்த நன்னாளில் நாம் புதிய உலகம் படைக்க உறுதி ஏற்போம் என்றும் அனைத்து கிறிஸ்துவ பெருமக்களுக்கு தங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்துக்கொள்வதாகவும் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். கூட்டாக வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

ஸ்டாலின் வாழ்த்து

ஏழைகளுக்கும் – அடக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாரபட்சமின்றி உதவிக்கரம் நீட்டி, கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாள் ஒரு மாபெரும் மனித நேயத் திருவிழா. மகிழ்ச்சிக்குரிய இந்தப் பெருவிழாவினை, கொரோனா கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் கொண்டாடிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளும் அதேவேளையில் – எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்து, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவரும் வாழ்வில் நலமும் வளமும் பெற்றிட வாழ்த்துகிறேன்!

வைகோ வாழ்த்து

மனித குலத்திற்கு வெளிச்சமாக, கருணை வெள்ளமாகத் திகழும் இயேசு பெருமானின் போதனைகளை நினைவுகூர்ந்து, மன ஆறுதல் பெறவும், மகிழ்ச்சி அடையவும், உலகம் முழுமையும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.சகிப்புத்தன்மைக்கும், இன்னா செய்யாமைக்கும், இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்த உயர்பண்புக்கும் அவரது வாழ்க்கையே சிறந்த எடுத்துக்காட்டு.சகோதரத்துவமும், மனித நேயமும், மக்கள் மனதில் மேலோங்க, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அனைவரும் உறுதி மேற்கொள்வோம். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

காங்கிரஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

நாட்டு மக்களிடையே அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிப்பு உள்ளிட்ட தூய நற்பண்புகளை உலகிற்கு தந்த இயேசு கிறிஸ்துவின் வழியில் பயனிக்கிற கிறிஸ்துவ பெருமக்கள், அனைத்து மக்களோடும் இரண்டறக் கலந்து மதநல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறார்கள். கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து பிறந்த இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

காதர்மைதீன் வாழ்த்து

கிறிஸ்துமஸ்’ கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயம்நிறைந்த இனிய வாழ்த்துகL. ஏசு பெருமான், அமைதியின் தூதர், மக்களின் மன நலத்திற்கும் உடல் நலத்திற்கும் வழி காட்டியவர். பரம பிதாவின் மக்களாக, பாருலகினர் மதித்துப் போற்றப்பட வேண்டும் என்று நல்லுபதேசம் செய்த ஆன்மீக நேசர். உலக மக்கள் உள்ளன்போடு ஒன்றிணைந்து வாழும் நெறிமுறையைக் கற்பித்த மகான். அவரின் வழிநின்று, உலக மக்கள் யாவரும் ஒரு குடும்பமாக வாழ்வோம், அனைவரையும் வாழ்விப்போம்.

த.வா.க வாழ்த்து

தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பெருமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பும் அறமும் அநீதியை வீழ்த்தும் ஆற்றல்வாய்ந்த ஆயுதங்கள் என்பதை அமைதி வழியில் போதித்தவர் இயேசு பிரான். இயேசு பிரான் போதித்த அன்பு வழியை மக்கள் அனைவரும் பின்பற்றி வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம்.

அமமுக வாழ்த்து

அன்பு தான் உலகின் ஆக மிகப்பெரிய சக்தி என்பதை நிரூபித்தவர் இயேசு பிரான். உலகமெங்கும் அமைதியும், நல்லிணக்கமும் நிறைந்திருக்க வேண்டும் என டிடிவி தினகரன் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.


Share this page with friends