அப்படித்தான் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்.. பஜ்ரங்தள் கோஷ்டியை வெலவெலக்க வைத்த கர்நாடகா பெண் நந்தினி!
By Hemavandhana Published: Monday, January 3, 2022, 14:24 [IST]
நாடு முழுவதும் சமீப காலமாகவே மதமாற்றம் செய்யப்படுவது நடந்து வருகிறது.. கட்டாயத்தின் பேரில் விருப்பமில்லாதவர்களை, மதமாற்றம் செய்யும் முயற்சியால் ஏராளமான வன்முறைகளும் நிகழ்கின்றன.. இதனால் அப்பாவிகள் பலரும் உயிரையே இழக்க நேரிடுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் டிச.25-ந் தேதி கொண்டாடப்பட்டது. இந்தியாவில் பல இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இந்துத்துவா இயக்கத்தினர் சீர்குலைக்க முயன்றதால் சர்ச்சை வெடித்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குள் உள்ளே சென்று தாக்குதல் நடத்துவது, படங்கள், பொருட்களை தீ வைத்து எரிப்பது என பல சம்பவங்கள் நிகழ்ந்தன.
கர்நாடக மாநிலமும் இதற்கு விதிவிலக்கல்ல.. மதமாற்ற விவகாரங்கள் இங்கும் தலைவிரித்தாடி கொண்டிருக்கின்றன..
கர்நாடகாவில் 39 சம்பவங்கள் கர்நாடகா மாநிலம் முழுவதும் 39 இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பங்கேற்றோர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்கிறது மக்கள் சிவில் உரிமைக் கழகம். கர்நாடகா மாநிலம் குனிகல் தாலுகாவில் உள்ள பிலிதேவாலயா கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எதிர்த்து கேட்ட பெண் அப்போது பஜ்ரங் தள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் அந்த் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், பிரார்த்தனைகளை நிறுத்த வேண்டும் என்று அந்த கோஷ்டி கூச்சல் எழுப்பியது. ஆனால் இதற்கு அஞ்சாமல் அங்கிருந்த நந்தினி என்ற பெண் இந்துத்துவவாதிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

சரமாரி கேள்விகள் அந்த வீடியோவில், நீ யார் எங்களை கேள்வி கேட்க? நாங்க தாலி அணிந்திருப்பது பற்றி எதுக்கு கேள்வி கேட்கனும்? நாங்களும் இந்துக்கள்தான்.. எங்களுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட பிடிக்கிறது.. இங்கே எங்க மதமாற்றம் நடந்துச்சு? மதமாற்றம் நடந்துச்சுங்கிறதுக்கு ஆதாரம் காட்டுங்க.. நாங்க கிறிஸ்துமஸ் கொண்டாட விரும்புறோம்.. கொண்டாடுகிறோம்.. அது எங்க விருப்பம் என ஆக்ரோஷமாக நந்தினி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சமாதானப்படுத்திய போலீஸ் அத்துடன் பஜ்ரங் தள் கோஷ்டியினர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த உடனே போலீசுக்கும் அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வழக்கு எதுவும் பதியவில்லை. இரு தரப்பினும் சமாதானமாக சென்றதாலும் வன்முறை சம்பவங்கள் நடைபெறாததாலும் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர் போலீசார்.
Thank you: One India