திருமணத்தில் தேவசித்தம் அறிய

திருமண வயதில் எதிர்கால வாழ்க்கைக்காக காத்திருக்கும் பல வாலிபர்கள், வாலிப பிள்ளைகள் இந்த வரன் தேவ சித்தமா? என்று கேட்பதை நாம் பார்த்திருக்கலாம். திருமண காரியங்களில் தேவசித்தத்தினை அறிய அங்கலாய்ப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவசித்தத்தினை அறிந்துகொள்ள ஒரு எளிமையான வழியை இதில் பார்ப்போம். ஜெபத்துடன் தொடர்ச்சியை வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் பேசுவார் ஒரு தெளிவு கிடைக்கும்.
பரிசுத்த வேதத்தில் ஏதேன் தோட்டத்தில் நடந்த திருமணம் முதல் திருமணமாகும். இதில் மணமகன் ஆதாம் தேவனால் உண்டாக்கப்பட்டவன். இந்த ஆதாமுக்கு ஏற்ற துணையை உண்டாக்குவேன் என்று தேவனே கூறினார். தேவனால் உருவாக்கப்பட்டு அவருடைய ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களுக்கு அவரே ஏற்ற துணையை உருவாக்குவார். இது வேதசத்தியம்.
முதலில் அவனுக்கு ஏதேன் தோட்டத்தில் மண்ணினால் விலங்குகளை உருவாக்கி அவன் அருகே கொண்டுவந்து என்ன பேரிடுவான் என்று பார்த்தார். அவைகளுக்கு அவனும் பேரிட்டான். ஆனால் அவைகளில் எதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் அது ஆதாமைப்போல் இருக்கவில்லை. அவனுடைய ரூபமும் அவைகளுக்கு இல்லை. அவனுடைய மாம்சமும் இல்லை. எனவே அவைகளில் எதையும் அவனுக்கு துணையாக கொடுக்கவில்லை. அதேபோல்தான் நம்முடைய சுபாவத்திற்கு மாறாக இருப்பவர்களையும், பிடிக்காதவர்களையும் தேவன் துணையாக கொடுக்கிறதில்லை. (ஆதி 2:18-20)
ஆதாமுக்கோ இன்னும் ஏற்ற துணை காணப்படாமல் இருந்தது. உடனே தேவனாகிய கர்த்தர் அவனுக்கு அயர்ந்த நித்திரையை கொடுத்து, அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி அவனிடம் கொண்டு வந்தார். தேவன் செய்தது எதுவும் அவனுக்கு தெரியாது. அவன் மயக்கத்தில் இருக்கின்றான்.
ஏவாளை பார்த்தவுடன் இவள் என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள் என்று கண்டு பிடித்துவிட்டான். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்றும் அழைத்தான். மகிழ்ச்சி அவனுக்குள் வந்தது. தெய்வீக சமதானம் அவனுக்குள் வந்தது. சரி, எப்படி அவள்தான் தன் மனைவி என்று கண்டுபிடித்தான்? ஆதாமின் சுபாவம் அவளிடம் காணப்பட்டது. ஆதாமின் ரூபமும் அவளுக்கு இருந்தது. உடனே மனுஷி என்று பேரிட்டான். அவர்கள் திருமணம் நடந்தது.
தனக்கென்று தேவனால் உருவாக்கப்பட்ட துணை வரும்போது, தன்னிடம் இருக்கும் சுபாவம் தன் துணையிடம் வெளிப்படும். தன்னை போல் அவர்களும் இருப்பார்கள். மிக முக்கியமான காரியம் இருதயத்திற்குள் ஒரு பூரிப்பு உண்டாகும். அதைவிட சமாதானம் நதியாக பாய்ந்தோடும். இதுதான் அடையாளம். இதை வைத்தே இது தேவசித்தம்தானா என்பதனை அறிய முடியும்.இப்படி தேவசித்தம் வெளிப்படும் போது பணத்தையோ, கௌரவத்தையோ, அழகையோ படிப்பையோ பார்க்கமாட்டார்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.
திருமணத்தில் துணையை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.. ஆனால் ஏற்ற துணையை தேவனால் மட்டுமே தரமுடியும்.