பிள்ளைகளை வளர்க்க கற்றுக்கொள்ளுங்கள்

Share this page with friends

A father lifting his adorable daughter into the air while enjoying a day at the beach

என் செல்லமே

பெற்றோர்களின் வாழ்க்கை பிள்ளைகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஒரு ஆம்புலன்ஸ் போகும் போது அதனுடைய சத்தத்தைக்கேட்டுப் பேருந்தில் சென்றுகொண்டிருக்கிற ஒரு குழந்தை கண்களை மூடிக்கொண்டிருந்தாள். என்ன செய்கிறாய் என்று கேட்ட பொழுது அந்த ஆம்புலன்ஸில் போகிறவர்களுக்காக ஜெபிக்கிறேன் என்றாள். ஆம்புலன்சில் போகிறது யார் என்றேன். யார் என்று தெரியாது. யாராயிருந்தாலும் பிழைக்க வேண்டும் என்று ஜெபிக்க அம்மா சொல்லியிருக்கிறார்கள் என்றாள். நம் பிள்ளைகள் நம் கைகளில் உள்ள களிமண் போன்றவர்கள். அவர்களை நாம் விரும்புகிறபடி குறிப்பிட்ட காலங்களில் நல்ல பழக்கங்களை அவர்கள் மனதில் பதிக்கவைக்க முடியும். இது அவர்கள் வாழ்க்கையில் நல்ல குணாதிசயங்களைப் பிரதிபலிக்கிறவைகளாக மாறும்.

திருடன் வீட்டில் வளருகின்ற பிள்ளை, திருடனாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. புகைபிடிப்பவர்களின் பிள்ளைகள் புகைபிடிப்பவர்களாக எளிதாக மாறலாம். குடிக்கிறவர்களின் பிள்ளைகள் அதிகபட்சம் குடிக்கிறவர்களாக மாற இயலும். காரணம் நாம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பதைக்காட்டிலும் நமது வாழ்க்கையின் செயல்பாடுகளே அவர்கள் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இயலும்.

உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டு வந்த உடன் பள்ளியில் அவர்களுக்கு அருகில் உள்ளவர்களோடு ஏற்பட்ட சின்னச் சின்ன சண்டைகள், அவர்களுக்கு இடையேயான உரையாடல்கள், அவர்கள் ஆசிரியர்கள் அவர்களைப் பாராட்டியது. கேம்ஸ் மிஸ் திட்டியது எல்லாவற்றையும் சொல்ல விரும்புகிறார்கள். ஆனால் பெரியவர்களுக்கு அவற்றைக்கேட்க நேரம் இல்லை. உடனே அவர்களுக்குக் காபி, பால் கொடுத்து, ஹோம் ஒர்க் செய்ய வைத்து, டியூஷனுக்கு அனுப்பி விடுகிறோம். நமக்கு டீ.வி-யில் சீரியல் பார்க்க வேண்டும். அவர்கள் தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு இரவு உணவு கொடுத்துத் தூங்க வைத்து விடுகிறோம்.

பிள்ளைகளுக்கு நீங்களே ஆசிரியர்கள் பிள்ளைகள் எவ்வளவு வளர்ந்தாலும் அவர்களைப்பார்த்து இதைச் செய்யாதே, இதைச்செய் என்று நாம் கூறிக் கொண்டுதான் இருக்கிறோம். மழையில் நனையக்கூடாது. வெயிலில் விளையாடக் கூடாது என்று எல்லாக் காலத்திலேயும் பிள்ளைகளைப் பார்த்து ஆலோசனை கூறிக் கொண்டேயிருக்கிறோம். அந்த அளவிற்குப் பிள்ளைகள் மீது நமக்கு அக்கறை உள்ளது. ஆனால் பிள்ளைகளை நாம் பள்ளிக்கு அனுப்பிவிட்டால் நம்முடைய கடமைகள் எல்லாம் முடிந்துவிட்டது என்று ஒதுங்கிக் கொள்ள ஆரம்பிக்கிறோம். நாம் பிள்ளைகளுக்காக எவ்வளவு பணம் கொடுக்கவும், நல்ல பள்ளியில் சேர்க்கவும், நல்ல பாடத்தைத் தேர்வு செய்யப் பணம் கொடுக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். ஆனால் பிள்ளைகள் அந்தப் பள்ளியில் சேர்ந்த பின்னர் எப்படிப் படிக்கிறார்கள், அவர்கள் நண்பர்கள் யார், எங்கெல்லாம் போகிறார்கள், பள்ளியில், கல்லூரியில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? என்பதைக் குறித்து நாம் கேட்க மறந்துவிடுகிறோம். படிக்கும் போது அவர்களுக்கு எந்தவிதத்தில் நாம் உதவலாம். அவர்கள் எந்தப் பாடத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்? எந்தப் பாடத்தில் நாட்டம் இல்லை? எந்த மிஸ் உடன் நல்ல நட்பை வைத்திருக்கிறார்கள்? என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பள்ளி ஆசிரியருடன் நாம் சரியான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நமது பிள்ளைகள் வகுப்பறையில் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள். ஏன் படிப்பில் ஆர்வம் குறைந்துள்ளது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். நாம் ஒரு தொழில் செய்தால் அதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு நமக்கு லாபம் கிடைக்கும். அது போன்று நமது பிள்ளைகள் வாழ்க்கையிலும் எவ்வளவுக்கு நாம் கவனம் செலுத்துகிறோமோ அந்த அளவிற்குப் பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உருவாகும். பிள்ளைகள் தங்கள் காரியங்களைப் பகிர்ந்து கொள்ளவே நேரம் இருப்பதில்லை. பள்ளியிலும் தன்னுடைய காரியத்தைக் குறித்து ஆசிரியரிடம் கூறினால் "போடா சும்மா பேசாமல் போய் இரு" என்கிறார்கள். வீட்டிற்கு வந்தால் அம்மா "இதையெல்லாம் கேட்க எனக்கு நேரம் இல்லை என்கிறார்கள். டியூஷன் சென்றால் அங்கு பேசினால் அடிக்கிறார்கள். பிள்ளைகளின் உணர்வுகள் மதிக்கப்படாமல், மன இறுக்கத்துடன் வாழ வேண்டிய காலக்கட்டத்திற்குள் பிள்ளைகள் தள்ளப்படுகின்றனர். இப்படி மன இறுக்கத்துடன் பிள்ளைகள் வாழ்வதால் சின்னக்காரியங்களுக்கும் தற்கொலை செய்யும் மனப்பான்மை சிறுவயதிலே வந்துவிடுகிறது. சிறுவன் ஒருவன் கால்வருடத் தேர்விலே இரண்டாம் இடத்தைப் பெற்றுவிட்டு வீட்டிற்கு வந்தான். அம்மா திட்டுவார்களோ என்று பயந்தான். அப்பா ரேங்க் கார்டில் கையெழுத்து வைக்க மாட்டேன் என்று கோபப்படுவாரே என்று மனம் வேதனைப்பட்டான் . ஆசிரியரும் நீ மோசமாகி விட்டாய் இதுவரை முதல் மதிப்பெண் பெறுகிறவன் இப்படி கழுதை தேய்ந்து கட்டெறும்பாய்ப் போய் விட்டாய் என்று பேசுகிறார்கள். இவையெல்லாம் மனதில் மிகப் பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்தது. அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் சென்று விட்டு வரவில்லை. வீட்டில் தனியாக இருந்தான். திடீர் என்று ஒரு யோசனை, ரோஜா செடிக்குப் பயன்படுத்த வைத்திருந்த மருந்தை எடுத்துக் குடித்தால் என்ன? நாம் எல்லாருடைய கோபத்தையும் சந்திப்பதற்குப் பதிலாக இறந்து விடலாம் என மருந்தை எடுத்துக் குடித்துவிட்டுப் படுத்துக் கொண்டான். பெற்றோர் வீட்டிற்கு வருமுன் அந்த சின்னஞ்ச் சிறு சிட்டு உலகை விட்டுப் பறந்து சென்றது. பிள்ளைகளின் உணர்வுகளையும் திறமைகளையும் புரிந்து கொள்ளாமல் மிஷின் போன்று நாம் விரும்பியபடியெல்லாம் செய்ய வைக்க விரும்புவதைத் தவிர்க்க வேண்டும்.

பாராட்டி வளர்க்கவேண்டும் ஒரு பிள்ளை தன் தகப்பனிடம் ஓடி வந்தது. அப்பா இன்று பள்ளியில் நடைபெற்ற போட்டியில் நான்தான் முதல் இடம். அனைவரும் என்னைப் பாராட்டினார்கள் என்று மகிழ்ச்சியோடு கூறினான். அப்பா அம்மாவிடம் போய் சொல்லு என்று கூறிவிட்டார். அம்மாவோ டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் கண்டுகொள்ளவில்லை. பிள்ளையின் மனது மிகுந்த வேதனைப்பட்டது. அது முதல் அந்த பிள்ளை இந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.

பிள்ளைகள் தாங்களாக எதையாவது செய்துவிட்டால் அதைப் பெற்றோர், ஆசிரியரிடம் காட்டி அனைவருக்கும் முன்பாகப் பாராட்டப்படவேன்டும் என்று ஆசைப்படுகின்றார்கள். பாராட்டப்பாராட்ட அவர்கள் மேலும் புதிய காரியங்களைச் செய்வதற்கு முயற்சி எடுப்பர். ஆகவே உங்கள் பிள்ளைகளிடம் சரியான உறவை வளர்த்து நண்பராக விளங்குங்கள்.

அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்


Share this page with friends