தேவன் அனுப்பாத தீர்க்கதரிசிகள்

Share this page with friends

வருந்தவும் திருந்தவும் தேவனிடத்தில் மன்றாடுவோம்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் மறுபடியும் வருவார் என்று இரண்டு பிரபலமான ஊழியர்கள் சொன்ன தீர்க்கதரிசனம் பொய்த்துப்போய் விட்டதே? இதற்காக அவர்கள் வருந்துவார்களா? அல்லது திருந்துவார்களா?

இவர்களையெல்லாம் நம்புகிற ஊழியர்களும் கிறிஸ்தவர்களும் முதலாவது வருந்தவும் திருந்தவும் தேவனிடத்தில் மன்றாடுவோம்!

தேவன் அனுப்பாத தீர்க்கதரிசிகள்!

அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள், அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். எரேமியா 23:21 என்று தேவன் சொல்லுகிறதை கவனியுங்கள்.

தேவன் அனுப்பாதிருந்தும் ஓடுகிற, தங்களோடே தேவன் பேசாதிருந்தும் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகள் பலர் உண்டு!

தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அவர்களோடே பேசினதுமில்லை, அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள். எரேமியா 14:14 என்றும் தேவன் சொல்லுகிறதை கவனியுங்கள்!

சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன். எரேமியா 23:25
எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்தில் ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள். எரேமியா 23:26 என் ஜனத்தின் பிதாக்கள் பாகாலினிமித்தம் என் நாமத்தை மறந்ததுபோல, இவர்கள் தங்கள் அயலாருக்கு விவரிக்கிற தங்கள் சொப்பனங்களினாலே என் நாமத்தை அவர்கள் மறக்கும்படி செய்யப்பார்க்கிறார்கள். எரேமியா 23:27 என்று தேவன் பொய்தீர்க்கதரிசிகளைக் குறித்து வெளிப்படுத்தும் வேதனையான வார்த்தைகளையும் கவனியுங்கள்.

“பரலோகம் சென்றேன், பல காரியங்களைக் கண்டேன். கர்த்தர் இதை செய்யசொன்னார், இப்படி சொல்லசொன்னார்” என்று இவர்கள் சொல்லுகிறது இவர்களுடைய இருதயத்தின் வஞ்சகம் என்பதை இவர்களால் வஞ்சிக்கப்பட்டவர்களுக்குப் புரியாது.

தேவன்அனுப்பாதிருந்தும், ஜனங்களுக்குத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, அவர்களைப் பொய்யை நம்பப்பண்ணும் செமாயா போன்ற தீர்க்கதரிசிகள் இன்று அதிகம்! (எரேமியா 29:31)

வனாந்தர நரிகளுக்கு ஒப்பானத் தந்திரசாலிகள்!

இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். எசேக்கி.13:4 கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள். எசேக்கி.13:6 என்று தேவன் இவர்களை அடையாளம் காட்டுகிறதை கவனியுங்கள்.

இவர்கள் வனாந்தர நரிகளுக்கு ஒப்பான மிகப்பெரிய தந்திரசாலிகள்.

தாங்கள் தரிசித்த அபத்தத்தையும் பொய்க்குறியையும் கர்த்தரின் பெயரால் வியாபாரமாக்குகிறதில் கைத்தேர்ந்தவர்கள்!

தவறான போதனைகளையும் பொய்யான சொப்பனங்களையும் தரிசனங்களையும் கர்த்தரின் பேரில் சொல்லி, ஜனங்களை நம்பவைத்து, தேவனுடைய ஊழியராக காலத்தை ஓட்டிவிடலாம் என்கிற நம்பிக்கை இவர்களுக்கு அதிகம் உண்டு!

இவர்களுக்கு தைரியம் கொடுக்கும்
வஞ்சிக்கப்பட்டக் கூட்டம்!

எத்தனை முறை தாங்கள் சொன்ன தீர்க்க்கதரிசனம் பொய்த்துப்போனாலும், தாங்கள் கொடுத்த வாக்குத்தத்த வசனங்கள் நிறைவேறாமல் போனாலும், இவர்கள் அதற்காக வருந்தாமலும் திருந்தாமலும், தயங்காமல் தொடர்ந்து பொய் தரிசனங்களைச் சொல்லவும், வாக்குத்தத்த வசனங்களை அள்ளிவிடவும் காரணம், இவர்களைத் தொடர்ந்து நம்பும் ஒரு பெரியக் கூட்டம் இவர்களின் பின்னால் இருப்பதே!

கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 பேதுரு 2:1 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள். அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 2 பேதுரு 2:2 என்று இவர்களையும் இவர்களைப் பின்பற்றும் கூட்டத்தையும் குறித்து பேதுரு சொல்லுகிறதை கவனிக்கவும்.

கள்ளஊழியர்களைக் கொண்டாட ஒரு பெரிய பட்டாளம் அவர்களுக்குப் பின்னால் எப்போதும் இருக்கும்! அவர்கள் சொல்லுகிற அனைத்தும் இவர்களுக்குபா பிடித்திருக்கும!

தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள், ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள், இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது எரேமியா 5:31 என்று கர்த்தர் சொல்லுகிறதை கவனியுங்கள்.

ஒரு கூட்டக் கிறிஸ்தவர்களை தேவனே கள்ளஊழியர்களிடம் ஒப்புக்கொடுத்துவிடுகிறார்.

சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற கிறிஸ்தவர்கள் ஆக்கினைக்குள்ளாகும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவனே அவர்களுக்குள் அனுப்புகிறார். (2தெசலோ.2:11,12)

தேவனால் கொடிய வஞ்சகத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட சத்திய நாட்டமில்லாதக் கிறிஸ்தவரே கள்ளஅப்போஸ்தலர், கள்ளத்தீர்க்கதரிசி, கள்ள சுவிசேஷகர், கள்ளப்பாஸ்டர்கள் மற்றும் கள்ளப்போதகர்களின் பின்னால் வலம்வருவார்கள்!

இவர்களால் சத்தியத்தை நம்பமுடியாது. பொய்களை அப்படியே நம்புவார்கள்.

கள்ள ஊழியர்கள் சொன்ன பல காரியங்கள் பொய் என்று அறிந்தப் பின்னும், இவர்கள் தொடர்ந்து அவர்களை நம்புவார்கள்!

காரணம், சத்திய வாஞ்சையில்லாத இவர்கள் பொய்யை விசுவாசித்து நரகத்துக்குப் போகும்படி, கொடிய வஞ்சகத்தை தேவன் இவர்களுக்குள் அனுப்பியிருக்கிறார்!

கள்ளஊழியர்களுக்கு எத்தனை விசிறி குழுக்கள் (Fan Groups) இருக்கின்றன என்று முகநூலில் (Facebookல்) சென்று பாருங்கள் புரியும்!

ஆண்டவர் சகலஜாதிகளையும் தமது சீஷாக்கவே கட்டளையிட்டுள்ளார். (மத்.28:19,20) கள்ளஅப்போஸ்தலர்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும், கள்ளசுவிசேஷகர்களும் கள்ளமேய்ப்பர்களும் கள்ளப்போதகர்களும், விசுவாசிகளை தங்கள் விசிறிகளாக்குவதிலேயே விழிப்பாய் இருப்பார்கள்!

இவர்களை அடையாளம் கண்டு, இவர்களைவிட்டு விலகி, தேவஜனங்கள் தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும்!

– க. காட்சன் வின்சென்ட்.


Share this page with friends