ஏழைகள்

இயேசு கிறிஸ்துவை போல பேச பழகுவோம் (குறுநாடகம்)

Share this page with friends

இயேசு கிறிஸ்துவை போல பேச பழகுவோம்; சிறு கதை (குறுநாடகம்)

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் பார்வையற்ற ஒருவர் அமர்ந்திருந்தார். அவ்வழியாக ஒருவன் வந்து, “ஏய், கிழவா, இந்த வழியே எவனாவது வந்தானா” என்று கேட்டான். பார்வையற்ற முதியவர் “இல்லை” என்று பதிலளித்தார்

அவன் போன பிறகு, அவ்வழியாக வந்த இன்னொருவன் “ஐயா, எனக்கு முன் இங்கு யாராவது வந்தார்களா?” என்று கேட்க, சற்று முன் ஒருவன் அவ்வழியே சென்றதாகச் சொன்னார் முதியவர்

சிறிது நேரம் கழித்து அவ்வழியாக வந்த மூன்றாமவன், “மதிப்பிற்குரிய பெரியவரே வணக்கம்! தாங்கள் எனக்கொரு உதவி செய்ய வேண்டும். நான் வருவதற்கு முன்பாக வேறு யாரேனும் இவ்வழியாய் வந்தார்களா?” என்று கேட்டான்

பார்வையற்ற அந்த முதியவர், “மன்னா வாழ்க, உங்களுக்கு முன் முதலாவதாக ஒரு வீரனும் இரண்டாவதாக அமைச்சர் ஒருவரும் இவ்வழியே சென்றார்கள்” என்றார். இதைக்கேட்ட மன்னருக்கு அதிர்ச்சி. “ஐயா உங்களுக்கு கண் தெரியாது. அப்படியிருக்க என்னையையும் எனக்கு முன் வந்தவர்களையும் சரியாக எப்படிக் கண்டுபிடித்தீர்கள்” என்று கேட்க முதியவர், “மன்னரே ஒரு நபரை இன்னார் என்று கண்டுபிடிக்க பார்வை அவசியமில்லை; அவர்கள் பேசும் பேச்சு தொனியை வைத்தே சரியாய் கணித்து விடலாம்” என்றார்

ஆம், நம்முடைய பேச்சுகளின் வார்த்தை நலம் நாம் எப்படிப்பட்டவர் என்பதை உலகிற்கு காட்டி விடுகிறது. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் (மத் 12: 34) என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளார்.

நமது வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவை போல மாற வேண்டும்.

காட்டி கொடுத்த யூதாசிடம் பரிவாக பேசினார். கடுமையாய் விசாரித்த அதிகாரிகளிடம் அமைதியாய் இருந்தார். விடுதலையை விரும்பிய கள்வனிடம் நம்பிக்கை வார்த்தையை கூறியார். சபித்த பேதுருவிடம் அன்பை பற்றி பேசினார். பாவத்தை கண்டித்து பேசினார். பாவி திருந்தும்படி பேசினார். ஏழைகளின் நீதிக்காக பேசினார். அனைவரிடமும் நித்திய ஐீவனை பற்றி பேசினார். இன்று நாம் எப்படி பேசுகிறோம்? இயேசுவை போல வாழவும் பேசவும் தீர்மானிப்போமாக..

பாஸ்டர். பெவிஸ்டன் (தினகரன், ஆன்மீக மலர்)


Share this page with friends