அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம் – ராமதாஸ், அன்புமணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

Share this page with friends

Ramadoss and Anbumani wishes TN people for Christmas

சென்னை: இந்த உலகில் இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் பாமக சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அன்பின் அடையாளமாகவும் கருணையின் வடிவமாகவும் வாழ்ந்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களிடம் மட்டும் அன்பு காட்டினால் போதாது. எதிரிகளிடமும் அன்பு காட்ட வேண்டும். மனதார மன்னிக்க வேண்டும். யாராவது உங்கள்மேல் கோபமாக இருந்தால், உடனடியாக அவரிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதேபோல் நீங்கள் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டுமென போதித்தவர் இயேசுபிரான்.

கிறித்துமஸ் கொண்டாடப்படுவதன் நோக்கங்களில் முதன்மையானவை மனிதருக்குள் நல்லுறவும், சமத்துவமும், ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் உண்டாக வேண்டும்; பூமியில் உள்ளவர்கள் இணக்கமான சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்; ஏழை, எளிய மக்கள் புதுவாழ்வு பெற வேண்டும்; இயற்கையை சுரண்டாமல் இசைந்து வாழும் தன்மை ஏற்பட வேண்டும் என்பன உள்ளிட்டவையாகும். இந்த நோக்கங்களுக்காகவே கிறித்துமஸ் திருநாளை மாதத்திற்கு ஒருமுறை கூட கொண்டாடலாம். ஆனால், இன்றைய உலகில் இயேசு விரும்பிய நல்லிணக்கமும், சகிப்புத் தன்மையும் இல்லை. அவற்றுக்குத் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. அந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக கிறித்துமஸ் போன்ற விழாக்கள் அனைத்து மதங்களிலும் ஈடுபாட்டுடன் கொண்டாடப்பட வேண்டும்.

இயேசுபிரான் விரும்பியதைப் போல உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்; போட்டி பொறாமைகள் அகல வேண்டும்; ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்; உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வாழ்த்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எதிரிகளிடமும் கருணை காட்ட வேண்டும் என்று போதித்த இயேசுபிரான் பிறந்த நாளை கிறித்துமஸ் விழாவாகக் கொண்டாடும் கிறித்துவ சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் இயேசுபிரான் அன்பு காட்டினார். உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். தமது வாழ்நாளின் கடைசி நொடி வரை அன்பையும், கருணையையும் காட்டியது மட்டுமின்றி, எதிரிகளுக்கு மன்னிப்பையும் வழங்கினார். இன்றைய உலகிற்கு தேவை பொருளாதார வலிமையோ, படைபலமோ அல்ல. மாறாக அவற்றை விட மிகவும் சக்தி வாய்ந்த அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை ஆகியவை தான். இவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதை உலகில் நிகழும் பல நடப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த நிலை மாற வேண்டுமானால் இயேசுபிரான் போதித்த கொள்கைகள் அனைவரின் மனதிலும் பதியும் வண்ணம் பரப்பப்பட வேண்டும்.

இயேசுவின் கொள்கைகள் பின்பற்றப்படுவதற்கு சிறந்த முன்னுதாரணங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இவையே கர்த்தருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும். இயேசு நமக்கு வழங்கிய போதனைகளின்படி, இந்த உலகில் இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம். அதன் மூலம் இயேசு விரும்பிய அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருகுவதற்காக உழைக்க உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends