தமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தக தொகுப்பாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை, டிச 20
6200 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பாடல்களை நேர்த்தியாக தொகுத்து பாடல் புத்தகமாக உருவாக்கி வழங்கியதற்காக கடையநல்லூரை சேர்ந்த பாஸ்டர். ராபின்சன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார்.
சென்னை மியூசி கேர் அறக்கட்டளையின் சார்பாக ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் விருது தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 19 அன்று ஆன்லைன் மூலமாக மியூசி கேர் சார்பில் நடைபெற்ற 12 மணி நேர சுவிசேஷ கலாச்சார இன்னிசை நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அமைந்துள்ள பெத்தேல் அசெம்பிளிஸ் ஆஃப் காட் சபையின் தலைமை போதகரும் உன்னதப் பாடல்கள் புத்தகத்தின் தொகுப்பாளருமான பாஸ்டர். ராபின்சன் அவர்களுக்கு மியூசி கேர் கலாச்சார அறக்கட்டளை நிறுவனரும் பிரபல கிறிஸ்தவ பாடகருமான திரு. ஜாலி ஆபிரகாம் மற்றும் சென்னை கே.கே நகரை சார்ந்த அப்போஸ்தல கிறிஸ்தவ சபை போதகர் பாஸ்டர். ஆனந் அவர்களும் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி பாராட்டினர்.
பெந்தேகொஸ்தே ஸ்தாபனத்தை சேர்ந்த இவர் சபை பாகுபாடில்லாமல் பழைய கீர்த்தனை பாடல்கள் உட்பட நவீன ரக பாடல்கள் வரை இசைக்குறிப்புகளோடும் பாடலுக்கான பிரிவு மற்றும் விபரங்களோடும் பாடல் புத்தகத்தினை தயாரித்துள்ளார். இப்புத்தகத்திற்கு திருச்சபை போதகர்கள் மற்றும் விசுவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விழாவில் புத்தக வெளியீட்டாளர் திரு. செல்வராஜ் அவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னதாக திரு. ரோகித் விருது விபரங்களை வாசித்தார்.