மலைமேல் உள்ள பட்டணம் போல…

Share this page with friends

800

மலைமேல் உள்ள
பட்டணம் போல வாழலாமே! 


மலையேறுவது கடினம்
உருண்டு விழுவது சுலபம்

ஏறும்போது எச்சரிக்கையாக இருந்தால்
விபரீதங்களுக்கு
விலகிக்கொள்ளலாம்

உன் ஜீவன் தப்ப ஓடிப்போ
பின்னிட்டுப் பாராதே
இந்த  சமபூமியில்
எங்கும் நில்லாதே
நீ அழியாதபடிக்கு
மலைக்கு ஓடிப்போ

கர்த்தர் இட்ட  
இந்தக் கட்டளைகளுக்கு
மறுப்புத் தெரிவித்து,
கறுப்புக் கொடி காட்டி
மலைக்கு ஓடிப்போக
என்னால் முடியாது
தீங்கு என்னைத் தொடரும்
நான்  மரித்துப்போவேன்
என்று மறுத்துப் பேசி
குட்டிப் பிரசங்கம்
பண்ணிக்கொண்டு,
தனது தாத்தாவான  
தேராகு போல
தாமதித்துக்கொண்டிருந்தார் லோத்து

கீழ்ப்படியாமை
என்ற தலைப்பில்
(அதிகப்) பிரசங்கம்
பண்ணியவர் திருவாளர் லோத்து 
ஆண்டவரின் அவசரத்தை
உணராமலிருந்த
குடும்பத் தலைவன்

ஆபிரகாம்
விசுவாசிகளின் தகப்பன்
நமக்கு இவர் 
தூரத்துச் சொந்தம்
லோத்துவுக்கோ
பக்கத்துப் பந்தம்


பெரியப்பாவை
நிழல் போலத் தொடர்ந்து
மரம் போல வளர்ந்தபின்
தொடர்பு எல்லைக்கு
அப்பால் சென்று
தொலைந்து போய்விட்டார்


ஜீவனைத் தப்புவிக்க
கர்த்தர் திசை காட்டினார்
முக்காடு என்ற அர்த்தம் கொண்ட
லோத்துவோ
மரணத்தைப்பற்றிப் பேசி,
மாற்றுத் திறனாளி போல
கர்த்தருக்கு
மாற்றுத் திசையொன்றைக்
காட்டிகொண்டிருந்தார்

மலைக்கு ஓடிப்போக
முடியாது என்று
மலைத்து நின்றவர்,
சமபூமியிலாவது
வாழ்ந்துகாட்டியிருக்க
வேண்டும்!

சுறுசுறுப்பும் வேகமும்
விவேகமும் இல்லாத
அவரின் அசைவுகள்,
திசைமாறிச் செல்லும்
படகைப் போலிருந்தது


தண்ணீரற்ற மேகங்களை,
இலையுதிர்ந்து கனியற்று
இரண்டுதரஞ்செத்து
வேரற்றுப் போன மரங்களைப்
பார்த்திருக்கிறோம்
லோத்துவின் செயல்பாடுகளும்
அப்படியே காணப்பட்டது!


சர்வ வல்லவரின்
கட்டளையை மீறிய
கீழ்ப்படியாத குடும்பம்,
லோத்துவின் குடும்பம்
என்று சொன்னால்
வழக்குத் தொடுக்க யாருமில்லை!


வீட்டை இழந்து, நாட்டை இழந்து,
சமபூமியில் வாழமுடியாமல்
சோவாருக்குள் நுழைந்து
விரைந்தோடிக்கொண்டிருந்தது  
மூன்று ஜோடிக் கால்கள்!


அப்போது சூரியன் உதித்தது
வானம் கந்தகத்தையும்
அக்கினியையும் கொட்டியது
பட்டணங்களும் கட்டடங்களும்
மடமடவென்று சரிந்து விழுந்தது


அப்போதாவது அந்தச் சமவெளியில்
முக்காடு என்ற அர்த்தமுடையவர்
தன்னையும், குடும்பத்தையும், 
அழிவுக்கு தப்புவித்த தேவனுக்கு
பலிபீடம் கட்டி
பணிந்துகொண்டிருக்கலாமே!


இப்படிச் செய்வது
ஆபிரகாமின் வழக்கம்
இவரது தம்பி மகனுக்கு இல்லை
இந்த பழக்கம்!
என்ன செய்வது?


கூடவே இருந்தாலும்
சிலர் விளாம்பழம் போல்
இருப்பார்கள்.

ஓட்டுக்குள் இருந்தாலும்
ஒட்டாமல் இருக்கும் பழம்

விளாம்பழம்!


திருமதி லோத்து அம்மையாரின்
நினைவுகளின் மேற்பரப்பில்
திடீர் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டது.

அந்த இரைச்சலில் பின்னிட்டுப் பாராதே,
என்ற கட்டளை காற்றில் கரைந்துபோனது
முக்காடு அல்லது மறைக்கப்பட்டவர் என்று அர்த்தம்
கொண்ட லோத்து மரத்துப்போன
மனிதரைப் போலாகிவிட்டார்


கட்டளையை மீறிய,
கட்டிய மனைவி
கட்டிய சீலையுடன் 
நொடிப் பொழுதில்
கண்முன்னே உப்புத் தூணாக
மாறிவிட்டதைக் கண்டு
உறைந்துபோனார் லோத்து

சோவாரில் சூரியன் உதித்தது
உண்மைதான் 
கர்த்தரின் கட்டளைகளை
மீறியவர்களின்
குடும்ப விளக்கு வழியிலே
அணைந்துபோனதும்
உண்மைதான்!

உயிரோடு இருந்த நாட்களிலும்
அடக்கம் இல்லை
உயிரை விட்டபின்னும் இன்னும்
அடக்கம் செய்யப்படவில்லை  


வீட்டுக்கு வீடு உப்பு தேவை
உப்புத் தூண் எதற்கு?
என்னைப் போல் இராதே என்று
தன்னைக் காண்போரை
எச்சரிப்பதற்காகவா?


உயிரோடு வாழும்போது
சாட்சியாபுரத்தில்
சாட்சியாய் வாழவேண்டும்
செத்தபின் இப்படி உப்புச் சிலையாகி
நிற்கக்கூடாது!


இப்போதாவது லோத்து,
பார்த்துப் பார்த்து
அடியெடுத்து வந்த
பெரியப்பாவான 
ஆபிரகாமைத் தேடிச்
சென்றிருந்தால் காரியம்
மாறுதலாய் முடிந்திருக்கும்
பிள்ளைகளுக்கும்
கல்யாணம் ஆகியிருக்கும்!


சோவாருக்குள்ளே
போய் சோர்ந்துபோனார்
மலைக்கு ஓடிப்போக
முடியாது என்றவர்
மலையிலும் குகையிலும் தங்கி
அன்றைய தினமே தான் பெற்ற
பெண் பிள்ளைகளாலே
சோரம்போய்விட்டார்


கர்த்தரின் சொல்லைக் கேட்டு
மலைமேல் ஏறி
மலைமேல் உள்ளப்
பட்டணம்போல

வாழவேண்டியவர்
மலையிலிருந்து உருண்டு
விழுந்தவனைப் போல
விபரீதங்கள் என்னும்
படுகுழியில் சிக்கி
சாபத்தின் சந்ததிக்குத்
தகப்பனாகிவிட்டார்.


நீங்கள் யாருக்குத் தகப்பன்?
சாபத்தின் சந்ததி(களு)க்கா?

ஆபிரகாம் ,
ஈசாக்கின் தகப்பன் மட்டுமல்ல,
அவர்தான்  அகில உலகத்திலுமுள்ள
விசுவாசிகளின் தகப்பன்


வாழ்க்கை என்னும்
மலையேறுவது கடினம்தான்
வழுக்கி விழ வாய்ப்புகள்
அதிகம்தான்
திசைகாட்டும் கருவி போல
வேதம் இருக்கும்போது
வழுவாதபடி காக்கக்
கர்த்தர் இருக்கும்போது
மலைமேல் உள்ள
பட்டணம்போல வாழலாமே
என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம்.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14


Share this page with friends