கல்வாரி நாயகனும் கவர்ச்சி நாயகர்களும்!வித்யா’வின் பதிவு

Share this page with friends

கவர்ச்சி நாயகர்களையல்ல, கல்வாரி நாயகனையே நோக்கிப்பார்

கவர்ச்சி.
இன்றைய உலகில்
மனம் கவரும் வார்த்தை.

ஒரு காலத்தில் சினிமாவுக்கும்
சிற்றின்பத்திற்கும்
சொந்தமாயிருந்த சொற்கள்,


இன்றைய நவநாகரீகத்தின்
நடுவாக இருந்து,
வீடு முதல் விளம்பரம் வரை,
அந்த வார்த்தையிலேயே
நாகரீகம் சுழன்றுகொண்டிருக்கிறது.

உடையில், நடையில்,
உரையாடலில்
ஒப்பனையில் இன்று
ஒட்டிக்கொண்டிருப்பது
கவர்ச்சிதான்
என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

முன்பு, பெண்கள்தான் கவர்ச்சிக்கு
முக்கியத்துவம் கொடுப்பார்கள்
என்று சொல்லுவார்கள்.

இப்போது ஆண்கள்
கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்கிறார்கள் என்றும்
சொல்லுகிறார்கள்.
  
அந்தக் காலத்தில் 1960 –களில்,
ஆன்மீகத்திற்கும் கவர்ச்சிக்கும்
கொஞ்சம்கூட ஒத்துவராது.
எதிரும் புதிருமாக இருந்த பண்புகள், 
இப்போது இணைந்து செயல்பட
ஆரம்பித்திருக்கிறது.

இரையைச் சம்பாதிக்க
வேண்டுமானால் உதவலாம்.
ஆனால்,
இது இறைபணிக்கு ஏற்றதா?

கவர்ச்சி  கலந்த விளம்பரம், 
கேட்போரை சுண்டி இழுக்கும் பாடல்கள்,
இசை, நடிப்பு, மேடைப்பேச்சு
இத்தனையும்
திரைப்படத்திற்குத்
தேவையாயிருந்தது.  
இன்றோ, இறைப்பணிக்கும்
கவர்ச்சி தேவை
என்ற நிலை வந்துவிட்டது.

இன்றைய உலகத்துடன்
இணைந்து செயல்பட்டு,
சமயப்பணி செய்தல்
வேண்டுமென
நினைத்து, கவர்ச்சி அரசியல் போல்
கவர்ச்சியுடன்
சமயப்பணியில் அல்லது
அருட்பணியில் ஈடுபட்டால்  
எந்த அளவுக்குப் பரிசுத்தத்தைப்
பாதுகாத்துக் கொள்ளமுடியும்?


முற்காலத்தில் ஆசிரியர்கள்,
குருமார்கள், துறவிகள்,
சமயத்தொண்டர்கள்,
சமூகப்பணியாளர்கள் அனைவரது
உடையிலும் பேச்சிலும் பணியிலும்
தூய்மையும் ஒழுக்கமும்
நிறைந்து காணப்பட்டன.

அடக்கம் இருக்கும்,
ஆடம்பரம் இருக்காது.  


அனைத்து நாகரீகங்களுக்கும்
கவர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டு
அவர்கள் விளங்கினார்கள்.

இப்போது அப்படியல்ல.
கடைசிக் காலம்.  

எங்கும் எதிலும் கவர்ச்சி!
எண்ணிக்கையும்,
காணிக்கையும்
கவர்ச்சிகரமாக
வந்துவிடலாம்.

ஆனால், எண்ணங்களில்
மாற்றத்தை
இறைமகன் இயேசு மட்டுமே
தரமுடியும்.

உன்னில் கவர்ச்சி இருக்கலாம்.
ஆனால்
உண்மை (சத்தியம்) இருக்கிறதா?  
இயேசு ஒருவரிடம்  மட்டுமே உண்டு.

அவருக்கு அழகுமில்லை,
சௌந்தரியமுமில்லை
அவரைப் பார்க்கும்போது
நாம் அவரை விரும்பத்தக்க ரூபம்
அவருக்கு இல்லாதிருந்தது.

அவர் அசட்டை பண்ணப்பட்டவரும்
மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும் 
துக்கம் நிறைந்தவரும்
பாடு அனுபவித்தவருமாய் இருந்தார்.

அவரைவிட்டு நம்முடைய  முகங்களை
மறைத்துக்கொண்டோம்.
அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்.
அவரை எண்ணாமற்போனோம்

(ஏசாயா 53 :2,3)

பதினாயிரங்களில் சிறந்தவர்.
பூரண அழகுள்ளவர். நமக்காக,
நம் பாவங்கள் மன்னிக்கப்பட,
தன் ஜீவனையே பலியாகத் தந்தார்.
பாடுகள், மரணம், சிலுவையை
ஏற்றுக்கொண்டார்.
பரலோகத்தின் எல்லா மேன்மையையும்
நமக்காக துறந்தவர்.
எளிமையான மனுக்கோலம்
ஏற்றுக்கொண்டவர்.

தன்னைத்தான் வெறுத்து
தன் சிலுவையை எடுத்துக்கொண்டு
என்னைப் பின்பற்றுங்கள் என்று
சொன்ன இயேசுவை,
எப்படிப் பின்பற்றுகிறோம்?


ஆத்துமாக்களைக் குறித்து
ஏக்கப் பார்வையும், கண்ணீரும்,
பெருமூச்சும், பாரமும்,
கல்வாரிச் சிலுவையில் காயப்பட்ட
இயேசுவைக் காணும்போது,
பிரதிபலிக்கிறது.

கவர்ச்சி வேறு,
கல்வாரிக் காட்சி வேறு
.

கவர்ச்சி அல்ல.
கல்வாரியின் சிலுவையில்
கர்த்தரின் அன்பே நம்மை
இழுத்துக்கொள்ளும்.

வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய
சத்தமாக இருந்த
யோவான் ஸ்நானகனிடம்
என்ன கவர்ச்சி இருந்தது?

பாவமன்னிப்பிற்கேற்ற
எச்சரிப்பின் சத்தமாய்,
வேத வசனங்கள்
அக்கினிப் பொறியாய்
வெளிப்பட்டன.


மக்கள் பாவ உணர்வு
அடைந்தார்கள்.
விரியன்பாம்புக் குட்டிகள் போல,
விஷத்தன்மையுடன் ஊர்ந்து வந்தவர்கள்
மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்று
விசுவாசிகளானார்கள்.


அர்ப்பணிப்பு என்பதும்,
பிரதிஷ்டை என்பதும்,
உள்ளத்தில் மட்டுமல்ல
உலக வாழ்க்கையின்
வேறுபாட்டின் ஜீவியத்திலும்
பிரதிபலிக்கவேண்டும்.
 

கர்த்தராகிய நான்
பரிசுத்தராயிருக்கிறபடியினாலே
நீங்களும் எனக்கேற்ற
பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக;
நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு
உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப்
பிரித்தெடுத்தேன்
(லேவியராகமம் 20:26)

இயேசுவின் நாமத்தை
வீதி வீதியாக தெரு தெருவாக
எடுத்துச் செல்லவும் சொல்லவும்,
நாம் முன்வரவேண்டும்.
ஆனால் தேவனின்
மாபெரும் தியாகச் செயல்களை
வீணாக ஆரவாரிக்கும் தெருக்கூத்தாக
மாற்றிவிடக்கூடாது.

பார்வோனின் அரண்மனையில்
வாழ்ந்துகொண்டு,
அப்போதைக்கப்போது
தம் மக்களிடம் வந்துபோகும்
மோசேக்கள் வேண்டாம்.
அவர்கள் கற்பனைகளை மீறுகிறவர்கள்.


பார்வோனின் அரண்மனையைவிட்டு,
முற்றிலும் வெளியேறி
தேவனுடைய ஜனங்களோடே
துன்பத்தை அனுபவிப்பதையே
தெரிந்துகொண்டு
இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து
எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும்
கிறிஸ்துவினிமித்தம் வரும்
நிந்தையை அதிக பாக்கியம் என்று
எண்ணின மோசேக்களே வேண்டும்.

தியாகத்தோடும்
பாடுகளோடும்
போராட்டத்தோடும்
கிறிஸ்துவுக்காக
வாழும் விசுவாசியே,
ஊழியரே,
இனிவரும் பலன்மேல்
நோக்கமாயிருங்கள்

கவர்ச்சி நாயகர்களையல்ல,
கல்வாரி நாயகனையே நோக்கிப்பார்.  
இரட்சிப்பார்.  


உன் சிருஷ்டிகரே
உன் நாயகர்
(ஏசாயா 54:5)

பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்
போதகர் / எழுத்தாளர்

தொகுப்பு:
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவத்தண்ணீர் ஊழியங்கள்,
ஐயர் பங்களா,
மதுரை 625 014


Share this page with friends