காணிக்கை மேரியைக் கவனித்துப்பாருங்கள்!

சென்ற இயேசு,
அன்றையதினம்
வழக்கத்திற்கு மாறாக,
காணிக்கைப் பெட்டிக்கு
எதிராக உட்கார்ந்தார்
காசையே தொட்டுப் பார்க்காத இயேசு
காணிக்கை கொடுப்போரின் இதயத்தைத்
தொட்டுப்பார்க்க விரும்பினார்
இன்றைக்கெல்லாம் ஸ்கேன்
பண்ணிப் பார்த்தாலும்
யார் எவ்வளவு
காணிக்கை போடுகிறார்கள்
என்று கணிக்கவே முடியாது
அந்த அளவுக்கு திறமையாக
போட்டுவிட்டு
போகிறவர்கள் இருக்கிறார்கள்
சில நேரங்களில் பெட்டிக்கடையில்
செல்லுபடியாகாத நோட்டுகள்
சபைக்கு வருவதும்,
காணிக்கைப்பெட்டிக்குள்
நுழைவதும் வழக்கம்
காணிக்கைக்காக
கவர் கொடுப்பதும்
அதற்காக விசுவாசிகளைக்
கவர் பண்ணுவதும்
அக்கால வழக்கம் கிடையாது
அன்றையதினம்;
காணிக்கை மேரி…..
தயவுசெய்து மன்னிக்கவும்,
அந்த ஏழை விதவையான
கைம்பெண்ணுக்கு
ஒரு புனை பெயரைக்
கொடுத்துள்ளேன்
மற்றபடியல்ல.
வழக்கத்தின்படியே
ஜெபாலயத்திற்கு வந்திருந்தாள்
மேசியா வந்திருக்கிறார், அவரோடு
சீஷர் பெருமக்கள் வந்திருக்கிறார்கள்
என்பது காணிக்கை மேரிக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
ஐசுவரியவான்களுக்கு இணையாக
கெம்பீரமாய்
விசுவாசத்தால்
வீர நடை நடந்து
ஒரு துட்டுக்கு சரியான
இரண்டு காசை
போட்டுவிட்டு திரும்பினாள்
உடனடியாக இயேசு எழுந்து நின்று
சீஷரை அழைத்து
காணிக்கை பெட்டியில் பணம்போட்ட
மற்றெல்லாரைப்பார்க்கிலும்
இந்த ஏழை விதவை அதிகமாய்
போட்டாளென்று மெய்யாகவே
உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று ஒரு
அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்
கணினி வசதியில்லாத காலத்தில்
கனகச்சிதமாக கணித்துவிட்டார்
தாம் கணித்ததை வைத்து
சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்துவிட்டார்
கானாவூர் கலியாணவீட்டில்
அற்புதம் அரங்கேறியதும்
அவருடைய சீஷர்கள் அவரிடத்தில்
விசுவாசம் வைத்தார்கள் (யோவான் 2:11)
ஆங்காங்கே அற்புதம் செய்ததே
சீஷர்களை விசுவாசத்தில்
பலப்படுத்துவதற்காகத்தான்
இந்தக் காணிக்கைமேரி
கஞ்சநாயக்கன்பட்டியைச்
சேர்ந்தவள் அல்ல
சிக்கனம்பட்டியிலுருந்து
வந்தவளும் அல்ல
இவள் மக்கெதோனியா நாட்டைச்
சேர்ந்தவளாய் இருக்கலாம்
என்பது எனது கணிப்பு
மக்கெதோனியா நாட்டுச் சபைகளைச்
சேர்ந்த விசுவாசிகள்
மிகுந்த உபத்திரவத்தினாலே
சோதிக்கப்படுகையில் கொடிய
தரித்திரமுடையவர்களாயிருந்தும்
தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே
மிகுந்த உதாரத்துவமாய் கொடுத்தார்களாம்
அவர்கள் தங்கள்
திராணிக்குத்தக்கதாகவும்
தங்கள் திராணிக்கு
மிஞ்சியும் கொடுக்க தாங்களே
மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு
நான் சாட்சியாய் இருக்கிறேன் என்று
பவுல் எழுதியிருக்கிறார்
(2 கொரிந்தியர் 8:1-4)
சபையின் இன்றைய தேவை
களஞ்சியத்தை இடித்துப்
பெரிதாகக் கட்டும்
கனவான்களல்ல
காணிக்கை மேரிகளே
தினசரி கூலிகளே
இன்றைய தேவை
என்று சொன்னால் அது மிகையாகாது
அவள் ஓர் ஆவிக்குரிய ஐசுவரியவாட்டி
அவளுக்கென்று ஏதுமில்லை PROPERTY
இருந்த POVERTY யை எட்டி உதைத்து
ஏறிவந்து மேசியாவிடமிருந்து
நற்பெயரைச் சம்பாதித்துவிட்டாள்
எஞ்சியதையும்
மிஞ்சியதையும்
கர்த்தருக்கு
அதாவது
அவருடைய சரீரமாகிய சபைக்கு
எடுத்துக்கொடுக்கும் உலகில்
உள்ளதையும்
உள்ளத்தையும் கொடுத்தாளே!
இவளே குணசாலி
ஆச்சரியமாயில்லையா?
நேரமிருந்தால், இந்தக்
காணிக்கை மேரியைக்
கொஞ்சம்
கவனித்துப்பாருங்கள்

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
இயக்குநர் – இலக்கிய துறை
தமிழ் கிறிஸ்டியன் நெட்ஒர்க்