விடியலை நோக்கி… பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்

Share this page with friends

அதிகாலையில் 
எழுந்திருப்போருக்கு
ஒன்று தெரியும்,

விடிவதற்கு முன்
கனத்த இருட்டு
ஒன்று வரும் என்று.

அதற்கு விடியப் போகிறது
என்று பொருள்.
இதைப் பார்த்த அனுபவம்
உங்களுக்கு உண்டா?


சிலருக்கு
இந்த வாய்ப்பு இருக்காது.
கனமான மெத்தையில்
படுத்து உறங்குபவர்கள்
அவர்கள்
விடிந்த பின்பு
துயில் எழுபவர்கள்.  


இப்போது நாம் வாழும் காலம்
விடிவதற்கு முன் வரும்
கன இருளின் காலம்தான்

என்று சொல்லுகிறார்கள்

உண்மைதான்
இது கடைசிக் காலம்.
விடியலை நோக்கிக்
காலம் விரைந்து
கொண்டிருக்கிறது.


இருட்டையும்
வெளிச்சத்தையும்
ஒரே நேரத்தில்
சந்திக்கும் வாய்ப்பு
ஒரு வியப்பான
அனுபவமாக இருக்கும். 


அதிகாலையில்
இருட்டிலிருந்து
வெளிச்சத்திற்குள்
பிரவேசிப்பது
ஒரு இமைப் பொழுதில்
நடந்துவிடும்
அதைக் காண
ஒரு ஆயத்தம் தேவை

ஆண்டவர் இயேசுவின்
உயிர்த்தெழுதல் என்பது
உன்னை இருளிலிருந்து
வெளிச்சத்திற்கு கொண்டுவரும்
மாபெரும் உந்து சக்தி


இதற்கும்
கிறிஸ்துவுக்குள்ளான உனக்கு
ஒரு பயிற்சி தேவை.

விடியும் வரை
உறங்கிக் கொண்டிருப்பவனை
ஒரு சொல்லால்
திடீரென எழுப்ப முடியாது.


மரித்த லாசரு
இயேசுவின் ஒரு சத்தத்தில்
எழும்பி வந்துவிட்டான்
ஆனால் உயிருடன் இருக்கும்
லாசருக்களை எழுப்ப
உயிரைக் கொடுத்து
கத்த வேண்டியுள்ளது


அதிகாலை எழும்பும் பழக்கம்
காரிருளை
கரைந்து போகச் செய்யும்.


உள்ளொளி உன்னில் பிரகாசிக்க,
உணர்வு உயிர் பெற்றுவிட்டது என்று
நம்பிக்கை உண்டாகும்

இப்போது படியுங்கள்;
மாற்கு 1:35
அதிகாலையில் இருட்டோடே
இயேசு எழுந்து புறப்பட்டு
வனாந்திரமான  இடத்திற்குப் போய்
ஜெபம் பண்ணினார்.


அதிகாலையில் என்று மட்டுமல்ல
அதிகாலையில் இருட்டோடே 

என்று எழுதப்பட்டிருக்கிறது

ஆண்டவர் இயேசுவைப் பற்றி
சுவிசேஷங்களில் கூடுதலாக
ஒரு வார்த்தை இருக்குமானால்
அதற்கும் அர்த்தமில்லாமல் போகாது

விடிவதற்கு முன் அந்த இருட்டில்
நீ ஜெபத்தில்  இருந்தால்
இருளாக காணப்படும்
அந்தகார சக்திகள் அனைத்தையும்
உயிர்த்த கிறிஸ்துவின் வல்லமையால் 
நீ ஜெயித்து விடுவாய்

யோவான் 20:1 
என்ன சொல்லுகிறது
என்று கவனியுங்கள்
காலையில் அதிக இருட்டோடே
மகதலேனா மரியாள்
கல்லறையினிடத்திற்கு வந்து
கல்லறையை அடைத்திருந்த கல்
எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள்.


அதிகாலையில்  உள்ள
அதிக இருட்டு
கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த
வல்லமையால்
எடுக்கப்பட்டுப்போயிற்று


அநேகருடைய மன இருளின்
வல்லமை அகற்றப்படுகிற நேரமது.

விடியலை நோக்கி
தேவ சமுகத்தில் காத்திருந்து
ஜெபிக்கிற நேரமது.

அவ்வேளையில் மூடிய கல்
எடுத்துப்போடப்படும்.
 
காலியான கல்லறை,
காரிருளான மரணம்
ஜெயமாக விழுங்கப்பட்டதன்
அடையாளம். 

அஸ்தமனத்திற்குப்
பின்வரும் இரவிற்கும்,
விடியலுக்கு முன் வரும் இருட்டுக்கும்
வித்தியாசம் உண்டு.


முன்னது மரணம்
பின்னது உயிர்த்தெழுதல்

இருளில் பிரகாசிக்கும் மனிதன் நீ.
ஜெயமெடுத்தவன் நீ.

நீ அஸ்தமனத்தை
நோக்கிப் போகிறாயா?
அல்லது விடியலை நோக்கி
எழும்புகிறாயா?

உன் வாழ்க்கையில்
இதுவரை
நீ எத்தனை ஈஸ்டர் பண்டிகையை
பார்த்திருக்கிறாய்?

உயிர்த்தெழுந்த இயேசுவை
நீ சந்தித்திருக்கிறாயா?

நீ பண்டிகை
கிறிஸ்தவனாய் இருப்பதை
இயேசு ஒருபோதும்
விரும்பமாட்டார்

இன்றாவது
எழும்பு சீயோனே,
உன் ஒளி வந்தது.

உன் அழுகையின் கண்ணீரை
ஆனந்தக் கண்ணீராக மாற்ற

உயிர்த்த கிறிஸ்து
உன் அருகே நின்று
உன்னைப் பெயர் சொல்லி
அழைத்திருக்கிறாரா?

விடிந்த பின்னும்
உறங்கிக்கொண்டிருந்தால்
விடியலை நோக்கிய
உன் உன்னதப் பயணம்
வீணாகப் போகும். 

உறக்கம் தெளிவோம்
உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதி வரை
கல்வாரி தொனிதான்
மழை மாரிப் பொழியும்
நாள்வரை உழைத்திடுவோம்!

உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா ஒருவர் உங்கள்
நடுவில் வந்துவிட்டார்

உறக்கம் தெளிவோம்

பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்
போதகர் / எழுத்தாளர்

கட்டுரையைத் தொகுத்து வழங்குபவர்:

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்
ஐயர் பங்களா, மதுரை -14

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends