அன்பு சினமடையாது – சிறுகதைகள்

Share this page with friends

அன்பு சினமடையாது” (1 கொரி. 13:5).

அன்பு திரளான பாவங்களை மூடும். பாவங்கள் மூடப்படும்போது வெறுப்புக்கோ, கோபத்துக்கோ அங்கே இடமில்லை. சண்டைக்கோ, பிரிவினைக்கோ அங்கே பேச்சே இல்லை. அன்பு தெய்வீக ஆளுகை செய்யும்.

ஒரு பெற்றோர் தன்னுடைய மகளை செல்வம் நிறைந்த ஒரு மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் அவனோ, மிருக குணம் படைத்தவனாயிருந்தான். ஒரு நாள் காலையில் அவன் மனைவியிடம் கோபப்பட்டு, அவளை அடித்து உதைத்து விட்டு போய்விட்டான். பிறகு அவள் செத்தாளா, பிழைத்தாளா, என்றறிய சில மணி நேரம் கழித்து மெதுவாய் வந்து வீட்டில் நுழைந்தான். அப்போது மேஜையில் மனைவி அவனுக்காக சாப்பாடு வைப்பதைக் கண்டு பிரமித்து நின்றான். “சமயத்தில் வந்து விட்டீர்களே” என்று புன்னகையோடு கூறிக்கொண்டே கையைப் பிடித்து, சாப்பிட உட்கார வைத்தாள்.

அவன் சிறிது அமைதிக்குப் பிறகு, “நான் உன்னை அதிகமாய் அடித்துவிட்டேன் இல்லையா?” என்றான். அதற்கு அவள் “இல்லை என்னை நீங்கள் அடிக்கவில்லை. உங்களைத்தான் அடித்தீர்கள். அன்று ஆலயத்தில் தேவ சமுகத்தில் என் கையை உங்கள் கையில் ஒப்புவித்தபோதே என் உடல் முழுவதும் உங்களுக்குச் சொந்தமாகி விட்டது.

தேவனும் ‘மனைவியானவள் தன் சுய சரீரத்திற்கு அதிகாரியல்ல; புருஷனே அதற்கு அதிகாரி’ என்று தெளிவாய்க் கூறியிருக்கிறார் (1 கொரி. 7:4). தேவன் எனக்குத் தந்த தலை நீங்கள், நான் உங்கள் உடைமை. என்னை அடிக்கவோ, மிதிக்கவோ உங்களுக்கு உரிமையுண்டு. நீங்கள் என்ன செய்தாலும், எனக்கு இந்த உலகத்தில் நேசிக்க உங்களைத் தவிர வேறு எவரையும் தேவன் தரவில்லையே” என்றாள். அவள் பேசினதைக் கேட்ட அவன் மனம் கசந்து அழுதான். அன்று முதல் அந்தக் குடும்பம் ஆழமான அன்பினால் கட்டப்பட்டு எழும்பியது. எந்த ஒரு மனுஷன் சினத்தை அன்பினால் மேற்கொள்ளுகிறானோ, அவன் எப்பொழுதும், எல்லாச் சூழ்நிலைகளிலும் ஜெயங்கொண்டவனாகவேயிருப்பான்! ஒரு பக்தன்: “சினம் என்பது தோல்வியின் அறிகுறி! சினத்தை மேற்கொள்ளுகிறவனே ஜெயங்கொள்ளுகிறவன்” என்று குறிப்பிட்டான்.

இயேசுவுக்கு சிலுவையிலே எவ்வளவு நிந்தைகள், எவ்வளவு அவமானங்கள், எவ்வளவு பரியாசங்கள்! மட்டுமல்ல, சவுக்குகளினாலும், கோலினாலும் அடிக்கப்பட்டாரே! ஆணிகளால் கடாவுண்டாரே! அவர் சினமடைந்தாரா? இல்லை. மாறாக அவரைப் பாடுபடுத்தினவர்களுக்காக அவர் பிதாவை நோக்கி, “பிதாவே இவர்களை மன்னியும்” என்று வேண்டிக்கொண்டாரல்லவா? அதுதான் சினத்தை மேற்கொள்ளும் வழி.

இயேசு, உலகத்திலிருந்த நாட்களில் பல முறை சீஷர்களிடம் ‘ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள்’ என்று சொன்னார். அதற்கு தன்னை முன் மாதிரியாகக் காண்பித்தார். இயேசு சொன்னார், “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது” (யோவா. 15:12). தேவபிள்ளைகளே, கோபத்தை அன்பினால் மேற்கொள்ளுவீர்களாக.

நினைவிற்கு:- “அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது” (ரோமர் 13:10).


Share this page with friends