அவனும் தெய்வமானான்

சிருஷ்டிப்பில் வெளிப்படும் தேவ அன்பு

Share this page with friends

சிருஷ்டிப்பில் வெளிப்படும் தேவ அன்பு

ஆதியாகமம் 1: 26, 2: 7, 21, 22.

தேவன் அன்பாகவே இருக்கிறார். 1 யோவான் 4: 16. இந்த தேவன் வானத்தையும், பூமியையும், அதிலுண்டான யாவற்றையும், தம் வார்த்தையினாலே உண்டாகக்கடவது என கூறி சிருஷ்டித்தார். மகிமையான சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை கூட தம் வார்த்தையாலே சிருஷ்டித்தார். ஆனால் இந்த மனிதனையோ இந்த தேவாதி தேவன், உன்னதமான தேவன் சிருஷ்டித்த விதத்தை பார்க்கும் போது, அவர் மனிதனை எவ்வளவாக நேசித்தார் என நாம் அறிந்து கொள்ளலாம்.

  1. மகிமை நிறைந்த கர்த்தர், நமது சாயலில் மனிதனை உண்டாக்குவோம் என பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக தெய்வம் கூறுகிறார். தம் கரத்தினாலே மண்ணை பிசைந்து, நேர்த்தியாக வனைந்து, தம்முடைய ஜீவ சுவாசத்தையே அவன் நாசியில் ஊதினார். அவன் ஜீவாத்துமா ஆனான். அப்படியானால் கர்த்தருடைய சுவாசத்தையே பெற்ற மனிதன் விசேஷித்தவன் அல்லவா?
  2. இந்த மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஆகவே அவனுக்கு ஏற்ற துணையை உண்டாக்குவேன் என்றார். அவனுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணி, அவனை அதிகமாய் நேசிக்கும் படி அவன் இதயத்திற்கு மிக அருகாமையிலுள்ள விலா எலும்பை எடுத்து, மனுஷியை சிருஷ்டித்தார். எவ்வளவு ஞானமாய், நேர்த்தியாய், அன்பாய் மனிதரை சிருஷ்டித்தார் என்பதை தியானித்து பாருங்கள்.
  3. மட்டுமல்ல, அவனை சிருஷ்டிப்பதற்கு முன், இருளை அகற்றி, வெளிச்சத்தை உண்டாக்கி, பூமியை ஒழுங்கு படுத்தி, வெறுமையாயிருந்த பூமியில் புல், பூண்டு, செடி, கொடி, மரங்களை சிருஷ்டித்து, மச்சங்கள், பறவைகள், மிருகங்கள் எல்லாவற்றையும் சிருஷ்டித்து, ஒரு அழகான தோட்டத்தையும், அதை செழிப்பாக்கும் நதியையும் உண்டாக்கி, அந்த தோட்டத்தில் அவனுக்கு ஆகாரமும் உண்டாக்கி, அந்த அழகான தோட்டத்தில் அவர்களை வைத்தார்.
  4. இந்த அன்பான தேவன் அவனோடு உறவாட பகலின் குளிர்ச்சியான வேளையில் வந்து, அவர்களோடு பேசி உலாவுவார். ஆனால் இந்த மனிதரோ கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல், சர்ப்பமாகிய பிசாசிற்கு செவிகொடுத்து பாவம் செய்த படியால் தோட்டத்தை விட்டு துரத்தப்பட்டார்கள்.

ஆம், இன்று பாவிகளாகிய நம்மையும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால், புதிய சிருஷ்டிகளாய் சிருஷ்டித்தார். ஆவியானவர் நம் உள்ளத்திலேயே உலாவுகிறார். இந்த அன்பை நாம் அறிந்து அனுபவிக்கிறோமா? இல்லாவிடில் இந்த அன்பை உணராமல் பாவத்திலேயே ஜீவித்துக் கொண்டிருக்கிறோமா? நாம் மனம் திரும்பும் போது நம்மையும் புதிய சிருஷ்டியாக சிருஷ்டிப்பார். நம் தேசம் மனம் திரும்பும் போது பஞ்சம், பட்டயம், கொள்ளை நோய் ஆகியவற்றிலிருந்து தேசத்தை மீட்டு, எழுப்புதலை கட்டளையிடுவார். ஆம், சிருஷ்டிப்பில் அன்பை வெளிப்படுத்தின நம் தேவனிடத்தில் நாமும் அன்புகூருவோம். ஆமேன். அல்லேலூயா.

Dr. Padmini Selvyn.


Share this page with friends