பரிசுத்த வேதாகமத்துக்கு அடிமையான மனிதன்

ஸ்மித் விக்கில்ஸ் வொர்த்
“ஒரே புத்தகத்துக்கு.. பரிசுத்த வேதகாமத்துக்கு அடிமையான மனிதன் என இவரை அழைப்பார்களாம்”.
ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் வேதத்தை அதிகமாக நேசித்த அதிகமாக தியானித்த ஒரு நல்ல தேவ ஊழியர் ஆவார்.
பரிசுத்த வேதாகமம் என்றால் அவருக்கு மிகவும் பிரியம். அதை தன் இதயத்தில் சுமந்தவர் மட்டுமல்ல, எங்கு சென்றாலும் அவர் கோட் பாக்கெட்டில் வேதம் இருக்குமாம். இவ்வாறு அவரது பாக்கெட்டில் வேதம் இல்லாமல் அவரை யாராவது கண்டுபிடித்துவிட்டால் அவர்களுக்கு பரிசு தருவேன் என அறிவித்தது கூட உண்டாம். அந்த அளவுக்கு வசனத்தின் மேல் இவருக்கு அபரீதமான நேசம்.
விசுவாசம் பெருக வேண்டுமானால் வேதத்தை அதிகமாக தியானிக்க வேண்டும். தியானிக்கும் போது மட்டும்தான் விசுவாசம் தோன்றும். அப்படி தோன்றிய விசுவாசத்தை செயல்படுத்தும் போது இன்னும் அதிகமதிகமாக விசுவாசம் பெருகும். அல்லேலூயா!
அவர் இப்படியாக சொல்கிறார் “உலகத்தில் உள்ள புத்தகங்களை தொட்ட பின் தொடுவதற்கு முன் இருப்பதை விட அழுக்காகி விடுகிறேன்”. ஆனால் வேத புத்தகத்தை தொடுவதற்கு முன் இருந்ததை விட தொட்ட பின் மேலும் சுத்தமாக மாறுகிறேன் என்பாராம். தான் சுத்தமாக இருப்பதே எனக்கு பிரியம் என அடிக்கடி இவர் கூறுவாராம்.. எவ்வளவு உண்மை!!!
சிலர் எபிரேய மொழியில் தங்கள் வேதத்தை வாசிக்க விரும்புகிறார்கள். வேறு சிலர் கிரேக்க பாஷைகளில் வேதத்தை வாசிக்க விரும்புகிறார்கள். ஆனால் நானோ “பரிசுத்த ஆவியில் அதை வாசிக்க விரும்புகிறேன் “என இவர் அடிக்கடி சொல்வது வழக்கமாம்.
ஆம்! இந்த தேவ மனிதனை கொண்டு மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார். தெய்வீக சுகமளிக்கிற ஊழியத்தை செய்து அநேகரை சுகமாக்கினார் ..
இவர் நடந்து செல்லும் போது ஜனங்கள் பாவ உணர்வடைந்து கதறி மனந்திரும்புவார்களாம். அப்படிப்பட்ட தேவ வல்லமையோடு வாழ்ந்த இவர் “வேத வசனம் வெளிப்படுத்தும் நீதியின் மேல் நமக்குப் பசி தாகம் இல்லாவிட்டால், தேவன் நம்மை வைக்கச் சித்தம் கொண்டிருக்கும் இடத்தில் நாம் இருக்க மாட்டோம் என்கிறார்.
சத்தியமாகிய வசனத்தின் மேல் நமக்கு அடங்காத தாகம் இருக்க வேண்டும். இல்லையேல் தேவனது திட்டத்தை நாம் தவற விட்டுவிடுவோம் “என்ற கருத்தின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவராக இருந்தார். அதன் படி வாழ்ந்து காண்பித்து ஓட்டத்தை ஜெயமாக முடித்தார். வேதத்தின் மேலாக நாம் வாஞ்சையை வைப்போமாக.
நாம் எதை அதிகமாக தியானிக்கிறோமோ அதை சுற்றி தான் நம் மனது செல்லும். பக்கத்திலே வேதம் இருக்கும் ஆனால், படிக்க மனம்வராது.
வேதத்தை குறித்த மேன்மை நமக்கு தெரியாததினால் அதை அசட்டை செய்கிறோம் சில சமயங்களில். நமது கரங்களில் கொடுக்கப்பட்ட வேதத்தின் அருமை நமக்கு தெரியவில்லை. எத்தனையோ பேர் இந்த உலகத்தை சிருஷ்டிகரை கண்டடைய வேண்டும், நித்திய ஜீவனை கண்டடைய என்ன வழி என தெரியாமல் தவமாய் கிடக்கிறார்கள்.
ஆனால் நமக்கோ தெளிவாக நித்திய ஜீவனை கண்டடைய வழி தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த வேதத்தை தியானிக்காமல் அசட்டையாக இருந்து விடுகிறோம். நமது கரங்களில் நமது மொழியில் வேதத்தை படிக்கிறோம்! இதற்கு பின் எத்தனை பேருடைய தியாகங்கள் அடங்கியுள்ளது என நினைத்து பார்த்தால் கண்ணீர் வருகிறது.
வில்லியம் கேரி, சீகன் பால்க் இன்னும் பலப்பல வெளிநாட்டு மிஷனரிகள் தங்கள் குடும்பத்தை விட்டு, நாட்டை விட்டு, தங்களுடைய சுய தேசத்திற்கு கூட போகமுடியாமல் நம்முடைய இந்திய மண்ணிலே மரித்தார்கள். இந்த வேதம் நமக்கு முன் அநேக சாட்சிகளை வேதத்திலும், வேதத்தை பின்பற்றி உத்தமாக வாழ்ந்தவர்களையும் முன் நிறுத்தி நம்மையும் வெற்றியுள்ளவர்களாக நிலைநிறுத்த வல்லமையுள்ளது.
வேதத்தை தியானிப்போம்..வேதத்தை நேசிப்போம்… வேதமே நமக்கு ஜீவன்! தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேதத்தை எடுத்து தியானித்து, செயல்படுவோம்..!! ஆமென்! அல்லேலூயா!!!