நாசரேத்து நங்கை

Share this page with friends

இவள் ஒரு சாதனை வீராங்கனை!

எலிசபெத்துக்கு  இது ஆறாவது மாதம் என்ற தகவல் கிடைத்ததும், அவர்களை நேரில் பார்த்து வாழ்த்தியே ஆகவேண்டும் எனத்  தீர்மானித்துவிட்டார் இளம் மங்கை மரியாள் (லூக்கா 1:36)

தனது நெருங்கிய உறவுக்காரப் பெண்மணியான எலிசபெத் அவர்களை நேரில் கண்டு, அவர் பெற்ற அற்புதத்தைப் பற்றி அறிந்துகொண்டு, தன்னை தேவ தூதன் சந்தித்து நிறைவேற்றின ஊழியத்தைக் குறித்த சந்தோஷச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள மலைநாட்டிற்கு (லூக்கா 1:39) புயலெனப் புறப்பட்டுவிட்டார் பேரிளம்பெண் மரியாள்.  

சந்தோஷச் செய்திகளைப் பகிர்ந்துகொள்வதில் நாட்டம் செலுத்த வேண்டும்.

துர்ச்செய்தியைப் பரப்புவதற்கு பைசாக்களை செலவுசெய்யும் உலகில் நற்செய்தியைப் பரப்புவதற்கு உங்கள் அலைபேசியைப் பயன்படுத்துங்கள், Non Stop ஆக பேசி, Longstanding பிரச்சனையை உண்டாக்கிவிடாதீர்கள்

சபையில் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன, என்கிற ஒரு கூட்டம் இந்நாட்களில் பெருகிக் கொண்டிருக்கிறது. 

உலகில் அக்கிரமம் பெருகிக் கொண்டிருக்கிறது. சபையில் அன்பு பாதாளத்தை நோக்கி  பயணித்துக் கொண்டிருக்கிறது.

நேரில் சென்று வாழ்த்தின மரியாளைப் போல இந்நாட்களில் பிறரை வாழ்த்தும் இதயங்களைப் பார்க்கமுடியாது.

இது இக்கால விசுவாசிகளின் சிக்கனச் சிந்தை.

நாசரேத்து நங்கையான மரியாள், சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, முதலில் எலிசபெத்தை வாழ்த்தினாள் (லூக்கா 1:40). 

சகரியா,  ஊமையாய்ப் போனதின் காரணத்தை பின்னர் அறிந்துகொண்ட மரியாள், அதை ஊதிப் பெரிதாக்கவில்லை.

இப்படியும் சிலர் இருக்கிறார்கள்.  ஏன் இப்படி நடந்தது? நீங்க ரெண்டு பேரும் குற்றமற்றவர்கள் தானே (லூக்கா 1:6), அப்படியானால் ஆண்டவர் ஏன் இப்படி அனுமதிக்கவேண்டும்?

அப்படியானால் சகரியா மாமா கொஞ்சம் சரியில்லை என்று ஆவியில் உணருகிறேன் என்றெல்லாம் பேசி எலிசபெத்தையும் ஊமையாக்கிவிடுவார்கள். 

இப்படிப்பட்டவர்கள் எதிர்வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் எப்படியாவது ஜெபித்து மனம்திரும்பிவிடவேண்டும்.  வம்பும், புத்தியீனமுமான பேச்சும், பரியாசமும், தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும் (எபேசியர் 5:4).

மரியாள் என்ற கிருபை பெற்ற பாத்திரம் சிந்தனையிலும் செயலிலும் சிறந்த யுவதி.

இவர் என்ன சொல்லி வாழ்த்தினாரோ, யாமறியோம் பராபரனே!

எலிசபெத் அம்மையார் வயிற்றிலிருந்த ஆறு மாத குழந்தையான யோவான் ஸ்நானகன் லூக்கா 1:15 -ல் முன்னறிவிக்கப்பட்டபடி துள்ளிக் குதித்துவிட்டார். 

எலிசபெத் அம்மையார் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு உரத்த சத்தமாய், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது.  இதோ, நீ வாழ்த்திய சத்தம் என் காதில் விழுந்தவுடனே என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய் துள்ளிற்று என்று முழங்கி முடித்துவிட்டார்கள்.

என்ன அருமையான தீர்க்கதரிசன வார்த்தைகள் பார்த்தீர்களா?

தன்னுடைய ஆறு மாத கால கஷ்டங்களை (கணவன் ஊமையாகிவிட்டதால்) பெரிதுபடுத்தவில்லை. சொல்லப்போனால் அதைப்பற்றி கவலைப்பட்டதாக கூடத்  தெரியவில்லை.

சந்தோஷம் பொங்குதே, சந்தோஷம் பொங்குதே, சந்தோஷம் என்னில் பொங்குதே என்று பா டிப் பரவசமடைந்திருப்பார்கள்.

இன்றைக்கெல்லாம் இப்படி நடந்துவிட்டால், வீட்டுக்கு வருகிறவர்களிடம் தன் கணவனைப் பற்றி என்னவெல்லாம் சொல்லுவார்கள் என்பதைச் சொல்லவே முடியாது. யோபுவின் மனைவியையும் மிஞ்சிவிடுவார்கள்.

வாழ்த்துதலைக் கேட்டவுடனே முதலில் துள்ளியது முழு வளர்ச்சி பெறாத ஆறு மாத குழந்தை! சிந்திக்க வேண்டுகிறேன்!

வயதான காலத்தில் கர்ப்பவதியான எலிசபெத்துக்கு இது எந்தவித தர்மசங்கடத்தையும் உண்டாக்கவில்லை.

வாழ்த்துதலை, துதியின் சத்தத்தைக் கேட்ட முழு வளர்ச்சிபெறாத ஆறுமாத காலக் குழந்தை வயிற்றுக்குள்ளே துள்ளுகிறது!

26 வயதான வளர்ச்சிபெற்ற விசுவாசி தளர்ச்சியடைந்து, சத்தமில்லாமல் ஆணியில் தொங்கும் சட்டையைப் போல, இங்கும் அங்கும் ஆடிக்கொண்டிருக்கிறான்.

அவனது சிந்தையில் இருப்பது என்னவென்றால், எப்போது இந்த ஆராதனை முடியும்?

எப்போது இந்த ஓய்வு நாள் முடியும் என்றிருக்கிறவர்களே கேளுங்கள் என்று ஆமோஸ் 8: 6-ல் எழுதப்பட்டிருக்கிறது!

சங்கீதக்காரனின் சிந்தையில் இருந்தது என்ன? எப்போது உம் சமூகத்திற்கு வந்து நிற்பேன் என்பதே.

எப்போது நம்  மூச்சு நிற்கும்? என்று தெரியாத நிலையில்….எப்போது ஆராதனை முடியும் என்று எண்ணுவது ஏனோ?

இந்த நிலை இன்றைய சபைகளில் மாறவேண்டும்

மரியாள் ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத் அம்மையார் வீட்டில் இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப் போனாள்
(லூக்கா 1:56).

எலிசபெத் என்ற தாயார் பரிசுத்த ஆவியினால் நிறைந்தார். முற்றிலும் வளர்ச்சியடையாத பிள்ளையாகிய  யோவான் ஸ்நானகன் களிப்பாய்  துள்ளினார். மரியாள் பரிசுத்தாவிப் பெருவிழா கூட்டத்தை மகிமையாய் நடத்தினார்.

நாசரேத் என்ற சிற்றூரைச் சேர்ந்த இந்த நங்கை ஒரு சிறந்த பாடகி.  கவிபாடும் திறமை உடையவர். இந்த வாலிபப் பிள்ளை ஓர் எழுப்புதல் பிரசங்கியார் என்று சொன்னால் கூட தவறில்லை. 

அந்த மலை நாட்டிலே, மதர்’ஸ் மீட் (MOTHER’S MEET) மகிமையாய் நடந்து முடிந்தது 

இந்தக் குடும்பக் கூடுகையில், குடும்பத் தலைவர் என்கிற முறையில் சிறப்புப் பார்வையாளராக, சகரியா மட்டும் சத்தமில்லாமல் கலந்துகொண்டார்.

நாசரேத்து நங்கை, இயேசுவைப் பெற்றெடுக்கும் முன்னரே, மூன்று மாத துதி ஆராதனை ஊழியத்தை, வயதான இரண்டு நபர்களை வைத்து நடத்தி முடித்தார். அதில் ஒருவர் வாய் பேசாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கெல்லாம் இப்படி இரண்டு விசுவாசிகள் இருந்தால், பாஸ்டர் ஜெப வீட்டை மூடிவிட்டு, ஊழியத்தை விட்டுவிட்டு ஒடியே போய்விடுவார்.

நாசரேத்து நங்கை சோர்ந்து போகவில்லை.  இடையிடையே ஆமென் சொல்ல ஒருவர்தான் இருந்தார். இன்னொருவர் சும்மாதான் உட்கார்ந்திருந்தார். ஆனாலும் மரியாள் தளர்ந்து போகவில்லை.

இன்றைக்கும் சில சகரியாக்கள் சபையில் இருக்கிறார்கள்.  ஆமென், அல்லேலூயா, பிரைஸ் த லார்ட்  என்று எதுவும் சொல்லமாட்டார்கள்.  கண்களால் கணக்கிட்டு, கணிப்பொறி இல்லாமலேயே கணித்துக்கொண்டிருப்பார்கள்!

சபையில் Member ஆக அல்ல,   ஏதோ ஒரு Number ஆகவும் அல்ல,  சபையில் விசுவாசியாக இரு.

யவீருவே நீ விசுவாசமுள்ளவனாய் இரு (லூக்கா 8:50)

இந்த நாட்களில், இந்த நங்கையின் சிந்தை நமக்கும் வேண்டும் என்று எழுதி என் கிறிஸ்துமஸ் உரையை  முடிக்கிறேன். நன்றி வணக்கம்.

மீண்டும் இன்னொரு பதிவில் உங்களை சந்திக்கிறேன். அதுவரை, இதுவரை வாசித்தவைகளை சிந்திக்க வேண்டுகிறேன்.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14


Share this page with friends