கிறிஸ்துமஸ் வாழ்த்து: பெருந்தொற்றின் வலியைப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Share this page with friends

கிறிஸ்துமஸ் தினத்தை உலகமெங்குமுள்ள மக்கள் மத வேறுபாடுகளின்றி கோலாகலமாகக் கொண்டாடினர். இம்முறை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வழக்கத்தைவிட இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகம் குறைந்தே காணப்பட்டன. உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் மக்களுக்குத் தங்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், கொரோனா சூழலில் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தினர்.

அந்த வகையில், அமெரிக்காவின் தற்போதைய அதிரான டொனால்டு ட்ரம்ப்பும், அடுத்த அதிபரான ஜோ பைடனும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வாழ்த்து கூறினர்.

ஜோ & ஜில் பைடன் வாழ்த்து:

ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் இணைந்து வெளியிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்து வீடியோவில், நாட்டு மக்களாகிய நீங்களும், உங்கள் குடும்பத்தார் அனைவரும் இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டுமென நானும், என் மனைவி ஜில் பைடனும் வேண்டிக்கொள்கிறோம். இந்த ஆண்டு நம் அனைவருக்கும் மிகவும் சவாலான ஆண்டாக இருந்துவிட்டது. இந்த ஆண்டுப் பண்டிகையை நமது நம்பிக்கையாலும் மனிதநேயத்தாலும் நிரப்புவோம்.

தற்போதைய சூழலில் பலர் தங்களின் வேலைகளை இழந்து அன்றாட உணவுக்கே போராடிவருகின்றனர். பலர் தங்களின் குடியிருப்புகளுக்கு வாடகை கொடுக்க சிரமப்படுகின்றனர். ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதற்கே நாம் இந்த பூமியில் வாழ்ந்துவருகிறோம். அதனால், உங்களால் முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கும், அக்கம்பக்கத்தினருக்கும், உறவினர்களுக்கும் உதவுங்கள்’’ என்றார்.

தொடர்ந்து பேசிய ஜோ பைடன் அமெரிக்காவில் நாளுக்குள் நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகள் குறித்த தனது வருத்தத்தைப் பதிவு செய்தார், வழக்கமாக கிறிஸ்துமஸ் தினத்தன்று எங்கள் வீட்டில் இருபதிலிருந்து இருபத்தைந்து உறவினர்கள் ஒன்றாகக் கூடுவோம். இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அது போன்ற நிகழ்வுகளை நடத்தவில்லை. எங்களின் குடும்பத்தினரை இந்நேரத்தில் பிரிந்திருந்தாலும், அவர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். அமெரிக்காவில் இதுவரை மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள். ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது என்பது மிகவும் வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.

நன்றி: விகடன்

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends