பெரியவனானபோது சிறியவனானவன் — வித்யா’வின் விண் பார்வை

வாழப்படாத வாழ்க்கை
பாக்கி உள்ளது
வாழ்ந்த வாழ்க்கையை
வானளாவ புகழ்ந்துபேசி
வால்போஸ்டர் அடித்து ஒட்டி
தாழ்ந்துபோய்விடக்கூடாது
சம்பிரமமாய்
சாப்பிட்டு
சொகுசு வாழ்க்கையில் மிதந்து
லாசருக்களை மறந்துவிடக்கூடாது
காற்றழுத்த தாழ்வுமண்டலம்
உருவானால்,
புயல் வரும்,
கூடவே மழையும் வரும்
குளங்கள் நிரம்பும்
வளங்கள் பெருகும்
ஒருபோதும்
மனதில்
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
உருவாகிவிடவேக் கூடாது
இனி எப்படி வாழப்போகிறோம்
சாறிபாத் விதவையைப் போல
சாப்பிட்டுச் சாகவேண்டியதுதான்
என்றெல்லாம் பேசக்கூடாது
(1 இராஜாக்கள் 17:12)
இன்றைக்கு புசிப்போம் குடிப்போம்
நாளைக்குச் சாவோம்
என்றும் சொல்லக்கூடாது
(1 கொரிந்தியர் 15:32)
அது குடும்பத்தில் புயலை
உருவாக்கிவிடும்
சுனாமியை வீட்டுக்குள்
கொண்டுவந்துவிடும்
FA’MILY அப்புறம்
பே -முழி முழிக்க நேரிடும்
மோசே எகிப்தியருடைய சகல
சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு
வாக்கிலும் செய்கையிலும்
வல்லவனான் (அப். 7:22)
அப்படிப்பட்ட வல்லவனான
மோசே
பெரியவனானபோது
தன்னைச்
சிறியவனாக்கினான்
((எபிரெயர் 11:24,25)
இந்த சிந்தனை
Moses என்று பெயர்வைத்த எல்லா
பெரியவர்களுக்கும் வந்துவிடாது
நாற்பது வயதில்
பார்வோனின்
குமாரத்தியின் மகன்
என்னப்படுவதை மோசே
வெறுத்தான்
எப்படி வெறுத்தான்?
விசுவாசத்தினாலே
வெறுத்தான்.
நாற்பது வயதில்
நாய்க்குணம்
அறுபது வயதில்
பேய் குணம்
என்ற ஒரு
பேச்சு வழக்கு இருக்கிறது
உண்மையில் சொல்லப்போனால்
நாற்பது வயதில் நா குணம்
அறுபது வயதில் சேய் குணம்
என்றுதான் சொல்லப்பட்டிருக்கும்
நாளடைவில் கொரோனா
உருமாறுவதைப்போல,
திருச்சிலாப்பள்ளி
திருச்சிராப்பள்ளியாக மாறி,
த்ரிச்சி என்று
சொல்லப்படுவதை போல
உருமாறி, மருவி மருவி
நா, நாயாக
சேய், பேயாக மாறிவிட்டது
சரி, போகட்டும்
வழக்குதொடுக்க
நேரமில்லை.
லாக் டவுனில்
கையில் காசுமில்லை
நா’வை எப்படி
உபயோகிப்பது? என்ற
பக்குவம் வருகிற வயது,
நாற்பது!
சேய் போல, அதாவது
சிறுபிள்ளையைப் போல மாறி
சூது வாதில்லாமல்
வாழத் தொடங்கும் வயது
அறுபது!
நா குணம் வந்தபின்தான்
ஈசாக்கு, நாற்பதாவது வயதில்
ரெபெக்காளை கரம்பிடித்தான்
சேய் குணம் வந்தபோதுதான்,
ஈசாக்கு, அறுபது வயதை எட்டியபோது
ரெபெக்காள் ஒற்றை பிரசவத்தில்
இரண்டு சேய்களைப்
பெற்றெடுத்தாள்
அதில் ஒரு சேய்
கோத்திர தலைவனானது
மூத்த சேய்
பேயாக மாறியது
தாய்க்கும் தகப்பனுக்கும்
நோயாக’வும் மாறியது
(ஆதியாகமம் 26:34)
சரி Subject –க்கு வருவோம்
மோசே நாற்பது வயதில்
பார்வோனை வெறுத்தான்
அவனது குமாரத்தியின் மகன்
என்னப்படுவதையும் வெறுத்தான்
எகிப்தை வெறுத்தான்,
எகிப்தின்
பொக்கிஷங்களை
வெறுத்தான்
அநித்தியமான
பாவ சந்தோஷங்களை
அனுபவிப்பதை
வெறுத்தான்
எப்படி வெறுத்தான்?
விசுவாசத்தினாலே
வெறுத்தான்.
தேவனுடைய ஜனங்களோடே
துன்பத்தை அனுபவிப்பதை
தெரிந்துகொண்டான்
(எபிரெயர் 11:24,25)
துன்பத்தையா?
அதிலும்
தேவனுடைய
ஜனங்களோடா?
அட போப்பா
என்னால முடியாது?
நான் வாழந்த வாழ்க்கை
ராஜவாழ்க்கை
எனக்கு இருந்த எடுபிடிகள்
எத்தனை என்று உனக்கு தெரியமா?
நான் ஒரு இளவரசன்
பார்வோன் தாத்தாவுக்குப் பின்
பட்டத்திற்கு வரவேண்டியவன்
எகிப்தில் நானே ராஜா
நானே மந்திரி
No Election
No Collection
No Election Commission
இப்படியெல்லாம்
பேசி பேசி
காலத்தை ஓட்டாமல்
பெரியவனான போது
எல்லாரிலும் சிறியவனானான்
இன்பத்தை அல்ல
துன்பத்தை அனுபவிப்பதைத்
தெரிந்துகொண்டான்
தேவனுடைய வீட்டில்
எங்கும் உண்மையுள்ளவன்
இஸ்ரவேலரின் இரட்சகன்
என்று அழைக்கப்பட்டான்
ஆறு லட்சம் புருஷர்களுக்கு
நாடு போற்றும் தலைவனானான்
அவன் மறைந்தாலும்
இன்றைக்கும் மதிக்கப்படுகிறவன்
ஐந்து ஆகமங்களை எழுதி
வேதத்தை நிரப்பிவைத்தவன்
தேவ ஜனங்களோடே
இன்றைக்கும் இணைந்து இருப்பது
சொந்தங்களோ பந்தங்களோ அல்ல
துன்பங்களும் பாடுகளுமே!
( அப்போஸ்தலர் 14:22)
இன்றைக்கும்
சபையில் இருக்கும்
ஐசுவரியவான்களை
விரல்விட்டு எண்ணிவிடலாம்
மார்த்தாள், மரியாள்,
மகதலேனா மரியாள்,
லாசரு போன்றவர்களை
எண்ணிவிடவே முடியாது
இயேசுவானவர் விரும்பி
விசிட் பண்ணியது
இப்படிப்பட்டவர்களது
வீட்டைத்தான்
முழு உலகத்தையே
திரும்பிப்பார்க்க வைத்த அற்புதம்
ஒரு சாமானியர்களின் வீட்டில் நடந்தது
லாசருவின் உயிர்த்தெழுதல்
உலகை அசைத்த அற்புதம்
தன் ஜீவனத்திற்கு உண்டான
எல்லாவற்றையும் காணிக்கை
பெட்டியில் போட்டுவிடும்
சகோதரிகளும்
இன்றைக்கு ஏராளம்
இரண்டு காசை
அப்படியே போட்டுவிட்டவளே,
ஆண்டவர் வாயால் புகழப்பட்ட
சாட்சி பெற்ற சாமானிய பெண்
இன்பத்தில் திளைக்கும் ஜனம்
நாமல்ல
துன்பம் வந்தால்,
லாக்டவுன் போட்டால்,
சபையின் கதவுகளை
அடைந்துவிட்டால்,
துவண்டு போவதும் நாமல்ல
நமக்கு
தாழ்ந்திருக்கவும் தெரியும்
வாழ்ந்திருக்கவும் தெரியும்
எவ்விடத்திலும் எல்லாவற்றிலும்
திருப்தியாயிருக்கவும்
பட்டினியாயிருக்கவும்
பரிபூரணப்படவும்
போதிக்கப்பட்டிருக்கிறோம்
(பிலிபியர் 4: 12)
இந்தப் போதனை
இல்லாதவர்கள்தான்
வாழத்தெரியாமல்
வாள் வாள் என்று
கத்திக்கொண்டிருப்பார்கள்
கிறிஸ்துவுக்காக
ரூத் போவாஸ் தம்பதி போல
ஒவ்வொரு விசுவாசியும்
ஒவ்வொரு ஊழியரும்
வாழ்ந்துகாட்டுவோம்
இன்றைக்கும் நம்மோடு
இணைந்திருந்து
துன்பத்தை அனுபவிக்கும்
மோசேயை கொஞ்சம்
ஏறிட்டுப் பாருங்கள்
அதாவது
உங்கள் போதகரைத்தான்
சொல்லுகிறேன்.
அவர்
உங்களோடுதான்
இருக்கிறார்.

பாஸ்டர் ஜே.இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்
ஐயர்பங்களா, மதுரை -14